ஏடிஎம்.,மில் புகுந்து துவம்சம் செய்த எலி: சுக்கு நூறான ரூ.12 லட்சம்!

கௌஹாத்தி: அசாமில் ஏடிஎம்., மெஷினுக்குள் புகுந்த எலி ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து துவம்சம் செய்துள்ளது.

அசாம் மாநிலம் டின்ஸுக்யா மாவட்டத்தில் லாய்புலி பகுதியில் உள்ள எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., ஒரு மாதமாக அவுட் ஆஃப் ஆர்டரில் இருந்துள்ளது. கடந்த மே 20 ஆம் தேதியில் இருந்து வேலை செய்யாமல் இருந்த ஏடிஎம்.,-இயந்திரத்தை பழுது நீக்க ஜூன் 11ஆம் தேதி ஊழியர்களை அனுப்பியுள்ளது வங்கி நிர்வாகம்.

அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்தைத் திறந்து பார்த்த ஊழியர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாயினர். ஏடிஎம்., இயந்திரத்துக்குள் புகுந்த எலி ஒன்று, மெஷினில் நிரப்பப்பட்டிருந்த ரூ.2000, ரூ.500 நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து துவம்சம் செய்திருந்தது.

இதில், ரூ.12,38,000 சேதமானதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.