வாட்ஸ்அப் என்ற மெசேஜிங் செயலி வந்தாலும் வந்தது, அதை பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் ஆச்சரியமாக அல்லது அதிசயமாக எண்ணும் எதையும் அப்படியே பார்வர்ட் செய்து அடுத்தவரை இம்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வந்த தகவல் தங்களுக்கு புதிதாகத் தெரிந்தால் போதும், அதைப் பெறுபவருக்கும் அது புதிய தகவலாகத்தான் இருக்கும் என்ற அதிபுத்திசாலித்தனத்துடன் அவற்றை பார்வர்ட் செய்து வைக்கின்றனர்.
உண்மையில், ஒரு தகவலை மற்றவருக்கு பார்வர்ட் செய்யும் போது, அவர்கள் பார்வர்ட் செய்யும் தகவலின் தன்மையைக் கொண்டே அந்த நபரின் புத்திசாலித்தனத்தையும், மனப்போக்கையும் அறிந்து கொள்ளலாம்.
கடந்த வாரம் திடீரென ஒரு வீடியோ பலரின் வாட்ஸ் அப் எண்களுக்கு பரிமாறப் பட்டது. என்ன ஏது என்று பார்க்காமல் விசாரிக்காமல் பலரும் அதனை பார்வர்ட் செய்து மகிழ்ந்தனர். மதுரை அருகே உள்ள திருமோகூர் பெருமாள் கோயிலில் பெருமாள் சிலை மீது நாகப் பாம்பு ஒன்று வேகவேகமாக ஊர்ந்து சென்று கையில் அமர்ந்து கொண்டு படம் எடுத்து வெகுநேரம் ஆடியது. பக்தர்கள் பரவசத்தில் கூச்சலிட்டபோதும் பாம்பு அப்படியே இருந்தது என்ற ரீதியில் பல்வேறு கதைகள். இதனை உண்மை என்று நம்பி, செய்தி இணையதளங்களிலும் இது செய்தியாக ஆக்கிரமித்தது.
உண்மையில் இந்த பெருமாளுக்கும் திருமோகூருக்கும் தொடர்பில்லை. லட்சுமி நரசிம்மப் பெருமாள் விக்ரஹத்தில் பாம்பு படமெடுத்தது என்றால், மேலே எழுதப் பட்டிருந்த பெயரோ லக்ஷ்மிநாராயணர் என்பது. மேலும், இந்த வீடியோ கடந்த இரு வருடங்களாகவே வாட்ஸ் அப்களில் சுற்றிச் சுற்றி வந்தது.
அடுத்து இன்று இன்னொரு செய்தி. திருப்பதி பெருமாளுக்கு 1008 தங்க காசுகளை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்டில் கும்பாபிஷேகம் செய்யும் போது அணிவிக்க ரூ. 8 கோடி செலவில் தங்க காசு மாலை அணிவிக்கப் படுகிறது. விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வழங்குகிறார் என்பது.
அதற்காக படம் போட்டு, கூடவே அந்த நகை செய்யப்பட்ட செலவுக்கணக்கையும் பதிவு செய்து வாட்ஸ் அப்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தச் செய்தி : ஆகஸ்ட் 16 அன்று கும்பாபிசேகம் காணும் திருப்பதி #ஏழுமலையானுக்கு தங்க காசு மாலை …
தங்கம் விலை : Rs.8,11,51,568.00
லேபர் சார்ஜ். : Rs.27,49,930.00
மொத்தம். : Rs.8,39014798.00
மொத்த எடை 28.645.100 கிலோ
#காசுகள் மொத்த எண்ணிக்கை 1008
#காசுமாலை ஆரம் ஐந்து வரிசைகள் கொண்டது
#ஆரம் 1: 184 காசுகள்
#ஆரம் 2 : 192 காசுகள்
#ஆரம் 3 : 201 காசுகள்
#ஆரம் 4. : 212 காசுகள்
#ஆரம் 5 : 219 காசுகள்
#காணிக்கை அளித்தவர் விஜயவாடாவை சார்ந்த தொழில் அதிபர் மன் தென ராமலிங்க ராஜு
GRT ஜிவல்லரி செய்துகொடுத்துள்ளது தங்கம் ஒரு கிராமின் விலை 2833.00
இந்தச் செய்தி கடந்த வருடம் அதாவது 2017 செப்டம்பர் மாதம் வந்த செய்தி. விஜயவாடாவைச் சேர்ந்த மெந்தென ராமலிங்க ராஜு என்ற என்.ஆர்.ஐ., ரூ.8 கோடி செலவில், திருப்பதி பெருமாளுக்கு 1008 தங்க காசு மாலை செய்து, அதை ஆலயத்தில் வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வழங்கினார் என்பது செய்தி. அந்தப் படத்தை எடுத்துப் போட்டு ஏதோ இன்றுதான் இதை வழங்குவது போல் ஒரு புதிய தகவலை உருவாக்கி, வாட்ஸ் அப்பில் உலா வரச் செய்து வருகின்றனர்.
உண்மை என்ன என்று தெரியாமல், பலரும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் யாருக்கு என்ன லாபம், யார் இதனைச் செய்வது என்பது அனுமானிக்க இயலாத புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும், செய்திகளை பார்வர்ட் செய்பவர்கள்தான் சற்று முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.