பசுவை காமதேனுவாக மாற்றிய போகர்

 

 
அந்த இடம் முழுவதும் கமகமவென்று வாசனை திரவியங்களின் மனத்தோடு, வேத மந்திரங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அது பிராமணர்கள் ஒன்று கூடி நடத்திக் கொண்டிருக்கும் வேத யாகம். வேதங்கள் ஓதிக் கொண்டிருக்கும் பிராமணர்களை நோக்கி பிசுக்கேறிய பரட்டைத்தலையும், குளிக்காத அழுக்கடைந்த உடலும், கோவனம் மட்டுமே உடையாக கொண்ட ஒருவர் வந்தார்.

ஊரெல்லாம் இப்படி அலைந்து திரிந்ததால் அவருக்கு நாவறண்டு தாகம் ஏற்பட்டது. தாகத்தை தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு அங்கு வந்தார். வேதம் ஓதும் அவர்களை பார்த்து “அய்யா! ரொம்ப தூரம் நடந்து வந்து விட்டேன். ஒரே களைப்பாக இருக்கிறது. தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்” என்றார்.

தோற்றத்தைக் கண்டு எடைபோடும் உலகம்தானே இது. அதற்கு அந்த பிராமணர்களும் விதிவிலக்கல்ல. “வேதம் ஓதும் எங்களைப் பார்த்து அழுக்கான உடலோடு எப்படியடா தண்ணீர் கேட்டாய்?” என்று அந்த அந்தணர்கள் அவரை விரட்டினர்.

மனம் நொந்து போன அந்த மனிதர், அந்த வழியாக சென்ற ஒரு பூனையைப் பிடித்து அதன் காதில் ஏதோ சொன்னார். உடனே அந்த பூனை ஒரு வீட்டுத்தின்னையில் அமர்ந்து , அற்புதமான குரலில் வேதம் ஓதியது. உடனே வந்தவர் யாரென்று அவர்களுக்கு புரிந்து விட்டது. ‘எவ்வளவு பெரிய தவறிழைத்து விட்டோம்!’ என்று கூறி எல்லோரும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். “எழுந்திருங்கள்… அனைவரையும் மன்னித்தோம்!” என்றார் அவர்.

அழுக்கு உடையுடன் பரதேசி போல வந்த அவர், சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்ற போகர்.

“சுவாமி! தங்கள் சர்வ சக்தியும் பெற்ற போகர் என்பதை அறிந்தோம். தங்கள் பாதம் படவே நாங்கள் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும். எங்களை கடுமையான வறுமை வாட்டி எடுக்கிறது. நாங்கள் மரணத்தை எதிர் நோக்கி இருக்கிறோம். அந்த வேதனையில் இருந்து விடுபடவே வேதம் ஓதிக் கொண்டிருக்கிறோம்!” என்றனர்.

போகர் மெலிதாக புன்னகைத்தார்.

இந்த மரணம்தான் மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது? இறவாமை என்ற ஞானம் பெற்றவர் போகர்.

“சுவாமி! தாங்கள் தான் எங்கள் வறுமையை போக்கி எங்களை உயிர்ப்பிக்க வேண்டும்” என்று கெஞ்சினர்.

அதற்கு போகரும் “அப்படியே ஆகட்டும். எல்லோரும் அவரவர் வீட்டில் இருக்கும் உலோகப் பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார்.

எல்லோரும் போகர் ஏதோ அற்புதம் நிகழ்த்த போகிறார் என்று உடனே பண்ட பாத்திரங்களையெல்லாம் கொண்டு வந்தனர். போகர் அந்த பாத்திரங்கள் மீது விராட்டிகளை அடுக்கி நெருப்பை பற்ற வைத்தார்.

சற்று நேரத்தில் பாத்திரங்கள் எல்லாம் பழுக்க காய்ந்து செங்காந்தலாய் இருந்தது. அப்போது இரும்பு கயிற்றில் தொங்கிய குப்பியில் வைத்திருந்த ஆதிரசத்தை எடுத்து சில துளிகள்  அவற்றின் மீது தெளித்தார்.

என்ன ஒரு ஆச்சர்யம்..! அந்த பாத்திரங்கள் எல்லாம் சொக்கத் தங்கமாக மாறின. தங்கத்தைக் கண்ட அனைவரும் ஆனந்த கூத்தாடினர். தீராத வறுமை யெல்லாம் தீர்ந்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. பொன்னாக மாறிய பாத்திரங்களை அவர்களிடமே கொடுத்து விட்டு சென்றார் போகர்.

அகத்தியரின் முக்கியமான சீடரான போகர் இனத்தால் சீனர் என்று சொல்லப்படுகிறது. இவர் ரசகுளிகையின் மகத்துவம் தெரிந்தவர். ரசகுளிகையின் ஆற்றல் கண்டு வியந்தவர். இப்படி போற்றப் பெற்ற ஆதிரசம் பற்றி எல்லா சித்தர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

மனதில் நினைத்ததை முடிக்கும் விதமாக தன்னிடம் இருந்த குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டார். மற்றொன்றை கையில் வைத்துக் கொண்டார். ஆகாய மார்க்கமாக பறந்து சென்றார். அந்த குளிகை ஆதிரசம் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆதிரசத்தை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதை தேடி ரோமாபுரிக்கு போகர் பறந்து கொண்டிருந்தார். கடல்களைக் கடந்து ரோமாபுரி நகருக்கு வந்த போகர் தென்புறமாக இருந்த ஆதிரசக் கிணற்றைப் பார்த்தார்.

ஆதிரசக் கிணறு அற்புத சக்திகளைக் கொண்டது. அதன் ஆற்றல் தெரியாமல் அதில் இறங்கினால் அவ்வளவுதான். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் ஆதிரசத்தை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக சிவபெருமான் கட்டளைப்படி இரவும் பகலும் அரக்கர்கள் காவல் இருந்தனர்.

போகர் மரணத்தை வென்றவர் ஆயிற்றே..?!

தன்னிடமுள்ள ரசகுளிகையின் சக்தியால் அசுரர்கள் கண்களுக்குப் புலப்படாமல் சென்று, ஒரு தேங்காய் குடுக்கையில் ஆதிரசத்தை எடுக்க முயன்றார். அந்த ஆதிரசம் என்னவோ தேங்காய் குடுக்கையில் சிக்காமல் பின்னால் நகர்ந்து கொண்டு போனது.

உடனே போகர் தனது தாயையும் அதன் பின் சிவ பெருமானையும் தியானித்து, தம்பன மந்திரத்தை கூறினார். மந்திரம் உச்சரிக்கப்பட்டவுடனே பின்னால் நகர்ந்து கொண்டிருந்த ஆதிரசம் ஓரே இடத்தில் நின்றது. அதை தேங்காய் குடுக்கையில் முழுவதுமாக நிரப்பிக் கொண்ட போகர் மீண்டும் ஆகாய வழியே பறந்தார்.

அப்போது வானில் காவல் நின்றிருந்த அசுரர்கள் அவரைத் தடுத்தனர். போகருக்கு பொல்லாத கோபம் வந்தது. “என்னை யார் என்று நினைத்தீர்கள் ? நான் திருமூலரின் பேரன். இந்த ஆதிரசத்தை குளிகை செய்வதற்காக எடுத்துப் போகிறேன். நான் சபித்தால் நீங்கள் கல்லாய் போய்விடுவீர்கள் . ஜாக்கிரதை!” என்றார்.

அரக்கர்கள் இவரது மிரட்டலை கண்டு கொள்ளவில்லை எல்லோரும் போகரை சூழ்ந்து நின்றனர். போகர் தமது மந்திரத்தால் கொடிய அரக்கர்களை சாதுக்களாக மாற்றினார். அப்போதும் அவர்களுக்கு போகர் மீது ஒரு சந்தேகப் பார்வை இருந்து கொண்டே இருந்தது.

“போகரே, நீர் திருமூலரின் பேரன் என்றால் தங்களிடம் இருக்கும் குளிகையின் சக்தியை எங்களுக்கு காட்டுங்கள்.பார்க்கலாம்!” என்றனர்.

போகர் தனது கையில் வைத்திருந்த குளிகையை கடலில் போட்டார். குளிகை கொஞ்ச நேரத்தில் கடல் நீரை முழுவதுமாக குடித்து விட்டது. கடல் இருந்த இடம் படிகப்பொரிய பள்ளமாக காட்சி தந்தது. இதைக் கண்டதும் அவர்கள் மிரண்டு விட்டனர்.

“ஐயா! முனிவர் பெருமானே, உங்கள் சக்தியை அறிந்தோம். குளிகையின் மகிமையையும் அறிந்தோம். தயவு செய்து கடலை மீண்டும் உள்ளடக்கி விடுங்கள். சிவ பெருமானுக்கு இது தெரிந்தால் எங்களை பொசுக்கி விடுவார்” என்று கதறினர்.

போகரும் தன்னிடம் இருந்த இன்னொரு குளிகையைக் கயிற்றில் கட்டி சங்கிலியில் கோர்த்து குளிகையை நோக்கி எறிந்தார். உடனே அந்த குளிகை தன்னில் இருந்த கடல் நீரையெல்லாம் வெளியிட்டது. திரும்பவும் அந்த இரண்டு குளிகையும் போகரிடமே வந்து சேர்ந்தது.

சித்தர்கள் எப்போதுமே சித்தர்களையும் ரசவாதம் மற்றும் மூலிகை ரகசியங்களையும் யாருக்கும் தெரியாமல் கட்டி காக்க வேண்டும் என்பது முதன்மைச் சித்தரான சிவ பெருமானின் கட்டளை. இதை எல்லா சித்தர்களுமே கடைபிடித்து வந்தனர். ஆனால் போகர் மட்டும் இதில் விதி விலக்காக இருந்தார். அவருக்கு இந்த ரகசிய சந்தேகங்களில் எல்லாம் நம்பிக்கையில்லை சித்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக கொண்டுவர வேண்டும் என்பத போகரின் விருப்பம். அதற்கு ஏற்ப அவர் நடந்து கொண்டார்.

ஒருநாள் இப்படித்தான் போகர் பொதிகை மலைச்சாரலில் கணங்க மரத்தடியில் இருந்தார், அப்போது காட்டில் ஒரு பசு ஒன்று தனியாக மேய்ந்து கொண்டு இருந்தது, அப்போது ஒரு புலி ஒன்று அங்கு வந்தது, தனியாக மேயும் பசுவைத் பார்த்ததும் புலிக்கு பசுவை உணவாக்க வேண்டும் எண்ணம் தோன்றியது, அது ஒரு சினைப்பசு, புலி அந்த பசுவை துரத்தியது, புலிக்குப் பயந்து ஒரு மலைக்குகைக்குள் புகுந்து அங்கேயே தங்கி விட்டது.

அந்த குகையின் உள்ளே கருவீழி என்ற மூலிகை அடர்ந்து வளர்ந்து இருந்தது, பசுவுக்கு சாப்பிட சாதாரண புல் இல்லாததால் அந்த மூலிகையை மட்டுமே தினமும்  தின்று வந்தது, கருவீழி என்பது சாதாரண மூலிகை அல்ல கல்பதேக மூலிகை, அதை உண்டு வளர்ந்த பசு நல்ல தேக ஆரோக்கியம் பெற்று வந்தது, வயிற்றில் இருக்கும் கன்றுக்கும் அந்த மூலிகையில் சத்தே மேலானது, கன்று ஈன்ற பின்பு தாய்ப்பசுவும். கன்றும் கருவீழி இலையை சுவைத்து உண்ண ஆரம்பித்து விட்டன.

ஒருநாள் போக முனிவர் கருவீழி மூலிகை தேடி குகைக்கு வந்தபோது பசுவையும் கன்றையும் பார்த்து  அவற்றின் மகத்துவம் அறிந்தார், உடனே போக முனிவர் அந்த பசுவுக்கும். கன்றுக்கும் உபதேசம் செய்தார், மந்திர உபதேசம் பெற்ற இரண்டு பசுக்களும் நேரடியாக தேவலோகம் சென்று காமதேனுவாக மாறி வளர்ந்தன.

இறவாமை இல்லை என்றால் பிறவாமையும் இல்லை, இதை உணர்ந்த சித்தர்கள் இறைவனிடம் பிறவாமை வரம் வேண்டியினர்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.