தானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்  

 

 
 

மனிதன் எப்படி தானாக எரிவான்? இப்படி ஒரு கேள்வியை யாரிடமாவது கேட்டால், ‘அது எப்படி முடியும்..?!’ என்பதுதான் எல்லோரின் பதிலாக இருக்கும். அறிவியலும் கூட அப்படித்தான் சொல்லும். ஆனால் இயற்கை அவ்வப்போது வெகு அபூர்வமாக சில மனிதர்களை தானாகவே எரித்து விடுகிறது.

கடந்த 300 ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக 200 மனிதர்கள் எரிந்து போய் இருக்கிறார்கள். 1673-ல் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று பிரான்ஸ் கோர்ட்டுக்கு வந்தது. வழக்கமான கணவன்-மனைவி சண்டைதான் அது. மனைவி இறந்து விட்டார். கொன்றது கணவன் தான் என்பது வழக்கு. கோர்ட்டு தீர்ப்போ வேறு மாதிரி இருந்தது. கணவர் குற்றமற்றவர். அவர் மனைவி தானாக எரிந்து விட்டார் என்று தீர்ப்பளித்தது. அது எப்படி ஒரு பெண்ணால் தானாக எரிய முடியும்? என்று உலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது.

கால் மட்டும் எரியாத நிலையில்

இந்த தீர்ப்பு பிரான்ஸ் நாட்டு அறிஞர் ஜேம்ஸ் ரூபாண்ட் என்பவரை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் மனித உடல் தானாக எரிவது குறித்து ஆராயத் தொடங்கினார். மனித உடலில் தானாக எரியும் அளவுக்கு எந்த வேதிப் பொருட்களும் இல்லை. பின் இது எப்படி நிகழ்கிறது?

அதிலும் மனிதன் தானாக தீப்பிடித்து எரியும் போது முழுவதுமாக எரிந்தப்பின் அந்த இடத்தில் கருகிய மண்டையோடு அல்லது கருகிய கால்கள், கைகள் மட்டுமே இருக்கும். மற்ற பகுதிகள் எல்லாமே சாம்பல் குவியலாக குவிந்து கிடக்கும்.

அதே வேளையில் வீட்டின் மற்ற பகுதிகள், இறந்தவருக்கு அருகே உள்ள பொருட்கள் போன்றவற்றில் நெருப்பு எரிந்தற்கான அடையாளம் இருக்கவில்லை. இதனை ஆங்கிலத்தில் ‘ஸ்பாண்டேனியஸ் ஹுயூமென் கம்பஷன்’ என்கிறார்கள்.

இப்படி தானாகவே எரிந்து போனவர்கள் பெரும்பாலும் மது அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அதீத போதையில் இருக்கும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிக மெதுவாகவும் உடல் முழுவதும் எரியும் வரையிலும் நடைபெறுகிறது. எரிந்து முடிந்தவுடன் மண்டை ஓடு, கை, கால்கள் தான் மிஞ்சுகின்றன.

சில சம்பவங்களில் முதுகெலும்பு தவிர மற்ற பகுதிகள் எரிந்து சாம்பலாகின்றன. அதனால், குடிகாரர்களுக்கு மட்டும்தான் இது ஏற்படுகிறது என்பதை ஏற்க முடிவதில்லை.

மேலும் தானாக உடல் எரியும் போது உருவாகும் வெப்பம், மின்சார சுடுகாட்டில் ஏற்படும் வெப்பத்தைவிட அதிகம். சுமார் 600 டிகிரி சென்டி கிரேடு வெப்பம். இப்படி மிதமிஞ்சிய வெப்பநிலை இருந்தும்கூட, அவர்களுக்கு அருகில் உள்ள காகிதங்கள் கூட எரியவில்லை என்பதுதான் அதிசயம்.

1951-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி புளோரிடாவில் வாழ்ந்து வந்த 67 வயதான மேரி ரீட்சர் என்ற பெண் இப்படி தான் இறந்தார். நாற்காலியின் கைபிடியை பிடித்தபடியே அவரது உடல் கருகிக் கிடந்தது. மண்டை ஓடு, இடது கால், முதுகெலும்பு கருகிய நிலையிலும், மற்ற பகுதிகள் சாம்பல் குவியலாகவும் மாறியிருந்தன. இதை சாதாரண விபத்து என்று போலீஸ் பைலை மூடியது.

1998 நவம்பர் 17-ந் தேதி கைசெல் என்ற 67 வயது பெண் தந்து இருக்கையில் அமர்ந்தபடி இறந்திருந்தார். செருப்புடன் கூடிய அவரது இடது கால் மட்டும் தரையில் ஊன்றியபடி இருந்தது. மற்ற பகுதிகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இருந்தன. வீட்டின் மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.

தமிழகத்தில் ராகுல்

சமீபத்தில் நமது தமிழகத்தில் கூட திண்டிவனத்தில் ராகுல் என்ற குழந்தைக்கு இதைப்போன்ற பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது தானாக எரியும் நோயில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

மனித உடல் ஏன் இப்படி தானாக எரிகிறது? என்ற கேள்விக்கு இன்னமும் விடை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானம் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கடவுள் செயல் என்று கூறி விடுகின்றனர். மனிதன் தானாக எரிவதும் இப்போதைக்கு கடவுள் செயலாகவே இருக்கிறது.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.