ஆவிகள் நகரில் உலாவ ஆசையா..!

 

 
ஆவிகள் உலகில் இருக்கிறதா..? இல்லையா..? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஆனால் நகரம் முழுவதும் ஆவிகள் உலாவுவதாக பரவிய புரளியால் சில நகரங்கள் ‘ஆவிகளின் நகரம்’ என்றே பெயரெடுத்திருக்கின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதே வேளையில் பகுத்தரிவாலார்கல்ளும்  ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களும் தொடர்ந்து குவியும் இடமாக இது இருக்கிறது. இப்படி ஆவிகள் பிடித்தாட்டும் நகரங்களின் பட்டியல் இதோ..

1. எடின்பர்க்

எடின்பர்க் ஸ்காட்லாந்த் நாட்டின் தலைநகரம். பழமையான இந்த நகரம் பிளேக் நோயாலும், நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளாலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இழக்க வைத்திருக்கிறது. அவர்களின் ஆவிகள் இன்னமும் வீதிகளில் அலைவதாக நம்பிக்கை.

 நம்மூரைப் போல தலையில்லா முண்டம், கொள்ளிவாய்ப் பிசாசு போன்ற நம்பிக்கைகள் ஏராளமாய் உள்ளன. இங்கு பிசாசுகள் போக ஹோலிரூட், பேலஸ், தேசிய அருங்காட்சியகம், கேஸில் போன்ற இடங்கள் சுற்றிப் பார்க்க ஏற்றவை.

2. ஸ்வானா

 

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரம்தான் ஸ்வானா. இங்கிருக்கும் எமர்சன் வில்லியம்ஸ் ஹவுஸ், போனோவேன்ச்சர் சிமிட்டிரி என்ற இரண்டு இடங்களும் ஆவிகளுக்கு பிடித்த இடங்கள் என்று கூறுகிறார்கள். ஊரில் இருக்கும் ஆவிகள் எல்லாம் இங்குதான் கூடி கும்மி அடிப்பதாக  ஒரு நாவலில் பிரபலமான எழுத்தாளர் எழுதிவிட, அதை அப்படியே நம்புகிறது இந்த ஊர்.

ஆனாலும் ஸ்வானாவில் சுற்றுலவாசிகளைக் கவரும் இடங்கள் உள்ளன. போர்சித் பார்க், செயின்ட் ஜான்சன் கதிட்ரல், போனோவேன்ட் கல்லறை, ஆப்பிரிக்கா பாப்பிஸ்ட் தேவாலயம் ஆகியவை பார்க்கக்கூடிய இடங்கள்.

3. நீயூ ஆர்லியன்ஸ்

கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் மாண்ட நகரம் இது. அவர்களின் ஆவி நூற்றாண்டுகள் கடந்தும் இங்கு உலாவுவதாக நம்பிக்கை. அந்த நம்பிக்கை போய்விடக்கூடாது என்பதற்காக நாள்தோறும் புதிது புதிதாக கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

 அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்த நகரம் உள்ளது. பிரஞ்ச் குவார்டர், ஜாக்சன் ஸ்கொயர், சிட்டி பார்க், அடுபோன் மிருகக்காட்சி சாலை என்று சுற்றுலாப் பயணிகளுக்கு தீனிப் போடும் இடங்கள் இங்கு ஏராளம்.

4. கால்வெஸ்டன்

 

இதுவும் அமெரிக்க நகரம்தான். 1900-ல் வீசிய பெரும்புயல் நகரின் பாதி மக்கள் தொகையை காணாமல் செய்து விட்டது. மழைக்கும் புயலுக்கும் பயந்து பெரிய கட்டடத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கூரை இடிந்து விழுந்து நூற்றுகணக்கானவர்களை பலி கொண்டது. இப்படி ஒரே ஒரு புயல் மொத்த நகரையும் சின்னா பின்னப்படுத்தியதால் இங்கு ஆவிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக நம்புகிறார்கள்.

 விமான அருங்காட்சியகம், ரயில் மியூசியம், மோடி கார்டன்ஸ், வரலாற்று நினைவு சின்னம் ஆகியவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள்.

5. சான் பிரான்சிஸ்கோ

 

இந்த அமெரிக்க நகரில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் தரைமட்டமாயின. இதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கோல்டன் பாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவிகள் குடியிருப்பதாகவும், அது காரில் போவோர்களை போலீஸ் வேடத்தில் வந்து வழிமறிப்பதாகவும், அதனால் உண்மையான போலீஸ் இந்த பாலத்தில் நின்றால் கூட ஆவிதான் என்று பயந்து ஓடுகிறார்கள். கலிபோர்னியாவில் இருக்கும் இந்த நகரம் சுற்றுலாவுக்கு பெயர்பெற்றது. கோல்டன் பாலம், கோல்டன் கேட் பார்க், சைனா டவுன், அல்கட்ராஸ் தீவு, தீ யங் போன்ற இடங்கள் ரசனை மிக்கவை.

இதை படித்ததும் வளர்ந்த நாடுகளின் மீது  இருக்கும் இமேஜ் சரிகிறதா..! நமது நாட்டில் கூட புயல்கள் அடித்திருக்கின்றன, நிலங்கள் நடுங்கியிருக்கின்றன, மழைகள் பொழிந்திருக்கின்றன, நோய்கள் வந்திருக்கின்றன மக்கள் லட்சம் லட்சமாக இறந்திருக்கிறார்கள். அதற்காக அவற்றை பேய் நகரம் என்று நாம் ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால், அவர்கள் அப்படியில்லை.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.