அருணா ஷான்பாக் – கருணையைக் கொல்ல முடியுமா..?

 

 
 
 
அருணா ஷான்பாக்

‘கருணை..!’

அப்படிதான் அருணா ஷான்பாக்கை அந்த மருத்துவமனையில் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு கருணையாலும் பாசத்தாலும் கட்டிப்போட்டவர் அருணா.

38 வருடங்களாக ‘கோமா’வில் வீழ்ந்துகிடக்கும் ஒருவரை, எந்தவொரு முகச்சுளிப்பும் இல்லாமல் கவனித்துக் கொள்ள பெரிய மனது வேண்டும். அது அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இருக்கிறது.

அருணா – கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டத்தில் இருக்கும் ஹல்டிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். வறுமை வாட்டி எடுக்கும் குடும்பம் அவருடையது. அந்த வறுமையிலும் நர்சிங் வரை மகளை படிக்க வைத்து விட்டார் அவரது தந்தை. படிப்பு முடிந்த இரண்டாவது வருடத்திலேயே தந்தை இறந்துவிட்டார்.

குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமும் நின்று போனது. ஒருவேளை சாப்பாட்டுக்கு நாதியற்று திண்டாடியது. அப்போதுதான் அருணா, “நான் மும்பையில் நர்ஸ் வேலைப் பார்த்து உங்கள் அனைவரையும் காப்பாற்றுகிறேன்.” என்று கூறி ரயிலேறினார்.

மும்பையில் புகழ் பெற்று விளங்கிய ‘கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை’யில் வேலை கிடைத்தது. ‘அப்பாடா..! வீட்டின் வறுமையை போக்க வழி கிடைத்துவிட்டது’ என்று நிம்மதியாக உட்காருவதற்குள்.. குடும்பத்தை காப்பாற்ற மும்பை வந்த அருணாவால்  தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனது.

கோமாவில் அருணா

1973, நவம்பர் 27.

அருணா வாழ்வை தடம் தெரியாமல் உருக்குலைத்த கருப்பு நாள்.

அப்போது அருணாவுக்கு 23 வயது. அழகும் இளமையும் போட்டிப் போட்டு வார்த்தெடுத்த தங்கச்சிலையாக புன்னகையோடு வேலை செய்துவந்தார்.

அழகு எப்போதும் ஆபத்தானது தானே! அந்த ஆபத்துதான் அருணாவின் வாழ்விலும் வந்து சேர்ந்தது. அருணாவின் வசீகர அழகு அங்கு வேலைப் பார்க்கும் மோகன்லால் வால்மியின் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது.

அவனின் துப்புரவு தொழிலைக்கூட மறந்தான்.  அருணாவை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் அடங்காத வெறியாக எரிந்து கொண்டே இருந்தது.

அன்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. இரவு நேர பணியில் அருணா ஈடுப்பட்டிருந்தார். காமபித்தத்துடன் வால்மியும் அங்கிருந்தான். வழக்கத்தைவிட கவர்ச்சியாக அவன் கண்களுக்கு அருணா தெரிந்தார்.

மோகம் தலைக்கேறிய அவன் நேராக அருணாவிடம் சென்று தனது ஆசையை கூறினான். எந்த பெண்தான் இதற்கு சம்மதிப்பார். அருணாவும் வசைமொழிகளால் அவனை விரட்டியடித்தார். ஆனாலும் அவன் விடுவதாக இல்லை.

தனது கையில் தயாராக வைத்திருந்த நாய்களைக் கட்டும் சங்கிலி கொண்டு அருணாவை தாக்கினான். தாக்குதலை தாங்கமுடியாத அருணா மயங்கி விழுந்தார். கற்பழிக்க முயற்சிக்கும் போதுதான் அருணா மாதவிலக்கு அடைந்திருப்பதை கண்டான். ஆனாலும் அந்த மிருகத்திற்கு விட மனமில்லை.

மயக்கம் தெளிந்துவிட்டால், எங்கே தப்பித்து விடுவாளோ..! என்ற பயத்தில் கோபமும், காமமும் தலைக்கேற நாய்ச்சங்கிலியால் கழுத்தை சுற்றி கட்டிலோடு கட்டிவிட்டான்.

தனது வெறியை முழுமையாக தீர்த்துக்கொண்ட பின்னும் அந்தச் சங்கிலியை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டான். கட்டிலோடு கழுத்து இறுக்கமாக கட்டப்பட்ட நிலையிலேயே இரவு முழுவதும் அருணா இருந்திருக்கிறார்.

மறுநாள், காலையில் தான் பணியாளர்கள் அருணாவை பார்த்தார்கள். மணிக்கணக்கில் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததால் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்பட்டது. அதனால், மூளையின் மேல்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஏற்பட்ட மயக்கம் இன்னமும் தெளியவில்லை.

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு வந்த அருணாவை பார்க்க அவரின் குடும்பத்தினர் ஒருவரும் வரவில்லை. குடும்பம் கைவிட்ட நிலையில், அவரை கவனித்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் அந்த மருத்துவமனை ஊழியர்களே ஏற்றுக் கொண்டார்கள்.

அருணாவை இந்த கதிக்கு ஆளாக்கிய காமுகனுக்கு மிகக் குறைந்த தண்டனையே கிடைத்தது. இந்த நிலையில் தான் எழுத்தாளரும் சமூகப் போராளியுமான பிங்கி விராணி என்பவர் அருணாவைப் பார்த்தார். அவரின் பரிதாபகரமான நிலையைப் பார்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

பிங்கி விராணி

அந்த மனுவில், “அருணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் கூறியப்பின், அருணாவுக்கு மூளை, தண்டுவடப் பாதிப்பு மற்றும் பிடரி எலும்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து அவரை செயலிழக்கச் செய்து கோமாவில் தள்ளி விட்டது. அவர் 37 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகள் கோமாவில் இருப்பதால் அருணாவின் உடல் இளைத்து துரும்பாகிவிட்டது. எலும்புகள் விரைவில் உடைந்து போகக்கூடிய தன்மையை அடைந்து விட்டது. படுக்கையிலே தொடர்ந்து இருப்பதால் உடலெல்லாம் புண் வந்து விட்டது.

எனவே, குணப்படுத்த முடியாத வகையில் நோய்வாய்ப் பட்டிருக்கும் அருணாவை ‘கருணைக் கொலை’  செய்ய அனுமதியளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

‘கருணைக் கொலை’

மகாத்மா காந்திக் கூட இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நோயால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு கன்றுக் குட்டியை காண சகிக்காது அதனை கொன்று விடும்படி சொல்லியிருக்கிறார்.

கருணைக் கொலை சில வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் இதற்கான சட்டம் இல்லை.இருந்தாலும் அருணாவை கொலைசெய்ய அனுமதிக்க முடியாது. அவர் வாழ வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மருத்துவமனை ஊழியர்களை பாராட்டவும் தவறவில்லை.

“குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் 37 ஆண்டுகளாக தொடர்ந்து மிகுந்த அன்போடு அருணாவை பராமரித்துவரும் கே.இ.எம். மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், இப்போது உள்ள ஊழியர்களுக்கும் சரி, அருணாவுக்கு பணிவிடை செய்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் சரி, இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது.” என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பு வந்ததும் கே.இ.எம். மருத்துவமனையே கொண்டாட்டத்தில் மூழ்கியது.

“அருணா அக்கா, ரொம்ப அழகான, சுறுசுறுப்பான, கனிவான, கருணை நிரஞ்சவங்க. அவங்களை நெனைச்சா இன்னும் என் நெஞ்சடைக்குது. கண்ணீர் நிக்கல. நோயாளிகளோட நெருங்கிய உறவினர் போல பாசமா இருப்பாங்க. அவங்களோட கருணைக்கு இணைய எதையும் சொல்ல முடியாது. எத்தனையோ பேரை கருணையோடு கவனிச்சிருக்காங்க. அவங்களை கொலை செஞ்சா கருணையையே கொன்ன மாதிரிதான்.

அது எப்படி முடியும்? இப்ப மட்டுமில்ல இனி எப்பவுமே அவங்களை அக்கறையா பாதுகாக்கறது எங்களோட கடமை..!” என்று நேக்குருகிப்போகிறார், அருணாவுக்கு கீழ் வேலை பார்த்த ஜூனியர் அர்ச்சனா பூஷன்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பரபரப்பான தீர்ப்பு பற்றி எதுவும் தெரியாமல் அந்த மருத்துவமனையின் 4-வது வார்டின் ஒரு ஓரத்தில் உள்ள அறைக்குள் 37 வருடங்களாக முடங்கிக் கிடக்கிறார் அருணா.

அவருக்கு மிகவும் பிடித்த சிக்கன் சூப்பை அருகே கொண்டு சென்றால் கண்கள் சட்டென்று பிரகாசமடைகின்றன. அந்த சின்ன பிரகாசம்தான் எந்த நொடியிலும் நினைவு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பை மெலிதாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது அருணாவுக்கு 60 வயது. அவர் நன்றாக இருக்கும்போது லயித்துப் போய் பாடும் இந்திப் பாடல்கள் இப்போதும் அவரது அறையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தப் பாடல்களில் எதாவது ஒன்று அவரின் ஞாபக நரம்பை மீட்டுக்கொண்டு வந்துவிடாதா..? என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை..! அது உயிர்ப்போடு இருக்கும் வரை எந்த மனிதனையும் உடலால் கொல்ல முடியாது..!

குறிப்பு:

2011-ம் ஆண்டு கருணைக் கொலை பற்றி தீர்ப்பு வந்த போது நான் எழுதிய கட்டுரை இது. நினைவு திரும்பிவிடும் என்ற அந்த மருத்துவமனையின் ஊழியர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு உடலாலும் மரணமடைந்தார் அருணா ஷான்பாக். 

இனி எந்தவொரு பெண்ணுக்கும் இந்த நிலை வரவே கூடாது..! அவரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திப்போம்..! 

இறுதி ஊர்வலத்தில் அருணா ஷான்பாக்

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.