spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

- Advertisement -

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!

திருநெல்வேலி பாளைங்கோட்டையில் சனிக்கிழமை (ஆக.25) நடந்த விழாவுக்கு வைகோ தலைமை தாங்கினார். வேதநாயகம், ஜான் கென்னடி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள எழுத்தாளர் மதுரா வாழ்த்துரை வழங்கினார். பைந்தமிழ் மன்றப் பொருளாளர் சண்முக சிதம்பரம் நன்றி கூறினார். விழாவில் கல்வியாளர்களும் பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து பேசியதாவது..

தமிழாற்றுப்படையில் இன்று கால்டுவெல் கட்டுரையை அரங்கேற்றுகிறேன். கிறித்துவப் பெருமக்களால் தமிழரும் தமிழர்களும் அடைந்த பெருமைகள் ஆயிரம். தமிழுக்கு முதல் உரைநடை கொண்டு வந்தவர்கள் கிறித்துவப் பெருமக்கள். 1577இல் ஏசு சபை பாதிரிமார்களால் கிறித்துவ வேதோபதேசம் என்ற உரைநடைநூல் வெளிவந்தது. 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொச்சியிலும் திருநெல்வேலி புன்னைக்காயலிலும் முதல் அச்சுப்பொறியைக் கொண்டு வந்தவர்கள் கிறித்துவப் பாதிரிமார்களே.

தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை உருவாக்கியவர் வீரமாமுனிவர் என்ற கிறித்துவப் பாதிரிதான். திருக்குறள் என்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குப் பெரிதும் அறிமுகப்படுத்தியவர் ஜி.யு.போப் என்ற கிறித்துவப் பெருமகன்தான். தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய வேதநாயகம் பிள்ளையும் கிறித்துவர்தான். இவர்கள் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் திராவிட ஒப்பிலக்கணம் கண்டவர் கால்டுவெல்.

தமிழ் என்பது ஒரு மொழிமட்டுமல்ல; ஒரு மொழிக்குடும்பத்தின் தாய் என்றும், திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்கமுடியாத ஒரு மானுடக் கலாசாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல்.

கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக் குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை. கிரீடமில்லை; கீர்த்தியில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை – மறைமலையடிகள் – பெரியார் – அண்ணா – கலைஞர் ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.

இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் பல்லவர் காலத்தில் ‘நமஸ்காரம்’ என்றார்கள். விஜயநகர ஆட்சியின்போது ‘தாசானு தாசன்’ என்று தெண்டனிட்டுக் கொண்டார்கள். நவாப்புகளின் ஆட்சியில் ‘சலாம் அலேகும்’ என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ‘குட் மார்னிங்’ என்றார்கள். விடுதலைப் போராட்ட இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ என்றார்கள். விடுதலைக்குப் பின் ‘ஜெய்ஹிந்த்’ என்றார்கள். திராவிட இயக்கம் வளர்ந்த பிறகுதான் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் ‘வணக்கம்’ என்று வாய் மணக்கச் சொன்னார்கள்.

கால்டுவெல் கண்டறிந்த திராவிடம் என்பது தமிழர்களின் சொல்லை மட்டுமல்ல இனத்தை – நிலத்தை – வரலாற்றை – கலாசாரத்தை மீட்டுக் கொடுத்தது.

அயர்லாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து தமிழ்நாட்டில் இறங்கி சென்னைமுதல் இடையன்குடி வரை கால்நடையாகவே பயணப்பட்டு தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டு செய்து மறைந்து இடையன்குடி ஆலயத்தில் அடக்கமாகிக் கிடக்கும் கால்டுவெல் ‘திராவிடக் கொலம்பஸ்’ என்று கொண்டாடத் தக்கவர்.

அவர் தமிழ்நாட்டுக்கு வந்ததென்னவோ மதம் பரப்பத்தான். ஆனால் மொழி முதல் பட்சமாகவும் மதம் இரண்டாம் பட்சமாகவும் அவர் முன்னுரிமைகளை இடம் மாற்றிப் போட்டுவிட்டது காலம்.

தேன்குடிக்க வந்த வண்டு தேனுண்டு போகும்போது அயல் மகரந்தச் சேர்க்கை செய்து நந்தவனத்தைக் காடாக மாற்றிவிடுவதுபோல, மதம்பரப்ப வந்த மனிதர் திராவிடம் என்ற தத்துவத்துக்குத் தீப்பந்தம் கொளுத்திப் போய்விட்டார்…என்று பேசினார் வைரமுத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,157FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe