1945 ஆகஸ்ட் 6 காலை 8:15 – உலகின் முதல் அணுகுண்டு!

 

 
1945 ஆகஸ்ட் 6 காலை 8:15

இப்படியொரு கொடூரமான நாளை சந்திப்போம் என்று எந்தவொரு ஜப்பானியரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனாலும் அந்த கொடூரம் நடந்தது. 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 8.15 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட நரக அனுபவத்தை அந்த நகரம் பெற்றது. அந்த நகரத்தின் பெயர் ஹிரோஷிமா. அணுகுண்டை வீசிய நாடுஅமேரிக்கா. அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.

‘லிட்டில் பாய்’ அணுகுண்டு போர் விமானத்தில் பொருத்துதல்

என்ன நடந்தது? என்று சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்விட்டிருந்தார்கள். கணக்கில்லாதவர்கள் சட்டென்று ஊனமானார்கள். இன்னமும் கூட குழந்தைகள் அங்கு ஊனமாக பிறப்பதை மாற்றமுடியவில்லை. மிகப் பெரிய இந்த கொடூர நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களின் அனுபவங்களை ஒன்றாக திரட்டியுள்ளார் பேராசிரியர் அரடா ஒசர்டா என்பவர். அந்த தொகுப்பிலிருந்து சில பகுதிகள்…

கிய்கேர் சகசி 
(1945-ல் 6 வயதுக் குழந்தை)

“காதைப் பிளக்கும் அந்த ஓசை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு வயதான மனிதர் தாங்க முடியாத வேதனையோடு ஓலைமிட்டவரே ஓடிவந்தார். அணுகுண்டால் ஹிரோஷிமா நகரமே முற்றிலுமாக அளிக்கப்பட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் எனது பாட்டியால் வீட்டில் இருக்க முடியவில்லை. தலையில் அடித்தவாறு அழுதுகொண்டே ஹிரோஷிமாவை நோக்கி வேகமாக ஓடினாள்.

 

போன பாட்டி திரும்பி வரவில்லை. ஒரு வாரம் கழித்து வந்தாள்.

“அம்மா எங்கே?” என்றேன்.

“அவளை என் முதுகில் தூக்கி வந்திருக்கிறேன்.” என்றாள் என் பாட்டி.

என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உற்சாகமாக கூச்சலிட்டேன்.

“அம்..மா..!”

கத்திக்கொண்டே என் பாட்டியின் பின்னால் சென்று பார்த்தேன்.

அம்மா இல்லை..!

ஒரு டிராவல் பேக் மட்டும் பாட்டியின் முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது.

“அம்மா எங்கே பாட்டி..?!”

நான் ஏமாற்றமடைந்தேன்.

எனது அக்காவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் வாய்விட்டு கதறி அழுதார்கள்.

“ஏன் அழுகிறார்கள்..?”

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாட்டி கண்ணீரோடு அந்தப் பையை கீழே வைத்தாள். அதில் இருந்து சில எலும்புகளை வெளியே எடுத்து எல்லோரிடமும் காட்டினாள். அதில் எனது அம்மாவின் தங்கப்பல்லும் அவருடைய கை எலும்புகளும் இருந்தன. எல்லோரும் குலுங்கி குலுங்கி கதறி அழுதார்கள்.

அப்போதும் என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!”

கிமிகோ தகாய்
(1945-ல் 5 வயது சிறுமி)

அந்த நாளை நினைத்தால் இன்னமும் என் மனம் பதறுகிறது. அன்று நான் என் தோழி தாத்சுகோவுடன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது விமானம் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது.

“ஏய்.. ஏரோப்ளேன்..!” கத்திக்கொண்டே பார்க்க வெளியே ஓடினேன்.

அந்த நொடியில் இடி இடித்து மின்னலடித்தது போல் ஒரு ஒளிவெள்ளம் தெரிந்தது. பயந்துபோன நான் பக்கத்து வீட்டுக்குள் ஓடிப்போய் என் தோழியின் அம்மா பின்னால் பதுங்கிக்கொண்டேன். அவரும் பயத்தில் நடுங்கிகொண்டிருந்தார். என்னை உதறி விட்டு தனது கணவனை கட்டிக்கொண்டார்.

நீளமான ஒரு துணியை எடுத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு தன் கணவருடன் வீட்டை விட்டு ஓடினார்.

எனக்கும் என் தோழிக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. வேகமாக வானில் இருள் பரவியது. வீட்டின் கூரை உடைந்து விழத் தொடங்கியது. கண்களில் மிரட்சியுடன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம்.

தாத்சுகோவின் பாட்டி அச்சத்துடன் கூவி அழைத்தார். அதனால் அவளும் என்னை விட்டு ஓடி விட்டாள். நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு அழுகை வந்தது அழத்தொடங்கினேன்.

அப்போது முகம் முழுவதும் புழுதி அப்பிய மற்றொரு பக்கத்து வீட்டுப்பெண், “அழாதே கிமிகோ! உங்க அம்மா இங்கேதான் இருக்கிறாள்.” என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓடினாள். நான் மீண்டும் தனித்து விடப்பட்டேன்.

சிறிது தூரத்தில் “கிமிகோ! கிமிகோ!” என்று என் அக்கா என்னை கூப்பிடும் குரல் கேட்டது. என் அம்மாவும் வந்துவிட்டாள். நாங்கள் நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடினோம்.

பின் நடந்தோம். நிற்காமல் போய்க்கொண்டே இருந்தோம். வழியெங்கும் வயிறு உப்பிய வீரர்களின் உடல்கள் ஆற்றில் மிதப்பதைக் கண்டோம். அவர்கள் அணுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் விழுந்து உயிர் விட்டவர்கள். சாலையோரங்களில் ஏராளமான பிணங்கள் நிறைந்து கிடந்தன.

மற்றொரு இடத்தில் ஒரு பெண் மரத்தடியில் கால் சிக்கி, நகர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். யாரும் அவரைப் பற்றி கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருந்தார்கள். எனது தந்தை கோபமாக கத்தினார்.

“இங்கே ஜப்பானியர் யாருமே இல்லையா? ஒரு பெண் போராடிக்கொண்டு இருக்கும்போது ஓடுகிறீர்களே!” என்றார். சிலர் உதவிக்கு வந்தனர். அந்தப் பெண்ணை மற்றவர்களுடன் சேர்ந்து என் தந்தை விடுவித்தார்.

மற்றோரிடத்தில் உடல் முழுக்க தீக்காயங்களுடன் ஒரு மனிதர் சாவின் விளிம்பில் நடந்து கொண்டிருப்பதை பார்த்தோம்.

என் அம்மா தன்னால் இனிமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது  என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார். தன்னை விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிடுமாறு கூறினார். அப்படி விட்டு செல்ல அங்கு யாருக்கும் மனமில்லை.

அருகில் பிணங்கள் மிதந்துக் கொண்டிருந்த கலங்கிய ஆற்று நீரை எடுத்து அம்மாவுக்கு கொடுத்தோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.

நாங்கள் எங்கள் நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். கிராமங்களில் நடந்து சென்றபோது விவசாயிகள் எங்களை திகைப்புடன் பார்த்தார்கள். என்ன நடந்தது? என்று கேட்டார்கள். பண்ணை வீடுகள் வழியே நடந்தபோது, அவர்கள் சோற்று உருண்டைகளை எங்களுக்கு தந்தார்கள்.

நாங்கள் எங்கள் உறவினர் வீட்டில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கினோம். நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது எனது அம்மா முதுகில் காயம்பட்டு வலிப்பதாக சொன்னார். நான் பார்த்தபோது அம்மா முதுகில் ஒரு அங்குல அகலத்துக்கு ஒன்றரை அங்குல நீளம் உடைய ஒரு கண்ணாடித் துண்டு காயப்படுத்தியிருந்தது. எனது தம்பியை தனது முதுகில் தூக்கி நடந்ததால் அது ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.

மறுநாள் எனது தந்தை எனது சகோதரியை தேடிச் சென்றார். ஹிரோஷிமா தபால் நிலையத்துக்கு அருகில்தான் குண்டு வீசப்பட்டது. அலறக்கூட நேரம் தராமல் அவள் கொல்லப்பட்டிருந்தாள். அந்த தபால் நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மட்டுமே பிழைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டவர்களின் சாம்பலை சேகரித்து அவரவர் வீடுகளில் கொடுத்துச் சென்றார். எனது அக்காவின் சாம்பலும் அதில் இருந்தது.”

இப்படியாக உண்மைகள், உணர்வுகளை உறைய வைக்கிறது. இன்றைக்கு இருக்கும்  அணு ஆயுதங்களோடு ஒப்பிடும்போது ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட்ட லிட்டில் பாயும் பேட் மேனும் மிக மிக சிறியவை. இதிலாவது தப்பிப்பிழைத்தவர்கள் அனுபவத்தை சொன்னார்கள். ஆனால் இப்போது உள்ள சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் வீசப்பட்டால் அனுபவத்தை சொல்ல ஒரு ஆள் கூட மிஞ்சமாட்டார்கள் என்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை!!!