அண்மைக் காலமாக ஒரு வீடியோ பதிவு பலரது வாட்ஸ்அப் எண்களிலும் பார்வர்ட் செய்யப் பட்டது. பேஸ்புக் டைம்லைனை நிரப்பியது. டிவிட்டரில் அவரவரும் அதைப் பதிவிட்டு, குழந்தையின் மழலையை ரசித்து சிலாகித்தனர்.
அப்படி என்ன அந்த வீடியோவில்.? தாயிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அழுது கொண்டே பேசும் அந்தக் குழந்தை, தன்னை அடிக்காமல், திட்டாமல், குணமாக வாயால் சொல்லணும் என்று கெஞ்சுவது பலரது மனத்தையும் உருக்கியது என்றே சொல்லலாம்! யார் அந்த சுட்டிக் குழந்தை?
திட்டாமல் அடிக்காமல் குணமாய் சொல்லனும் என கொஞ்சும் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய சிறுமி… யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று எல்லோருமே சீரியஸாக யோசித்துக் கொண்டுதான் இருந்தனர். தொடர்ந்து, அந்த சிறுமியின் மற்ற டிக் டாக் மியூசிக்கலி வீடியோக்கள், சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. சரி… குணமா வாயில சொல்லு என்று கொஞ்சும் மழலைக் குரலில் தாய்க்கு அறிவுரை கூறிய இந்த சிறுமி யார்?
அந்தச் சிறுமியின் பெயர் ஸ்மித்திகா. திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் – பிரவீணா தம்பதியினரின் ஒரே மகள். ஸ்மித்திகா தன் தாயிடம் அடிக்காமல், திட்டாமல் குணமா வாயில சொல்லணும் என்று கெஞ்சும் அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர் வீட்டுக்கு வந்து குழந்தையிடம் பேசிவிட்டுச் செல்வதாகக் கூறுகிறார் பிரவீணா.
தன் பின்னணி குறித்து குறிப்பிடும் பிரவீணா, தனக்கு மதுரை அருகே உள்ள திருமங்கலம்தான் சொந்த ஊர் என்றும், சிறிய வயதிலேயே திருப்பூருக்கு குடி வந்ததாகவும் கூறினார்.
பள்ளிக்கு கொண்டு சென்ற சிற்றுண்டியை ஸ்மித்திகா, சாப்பிடாமல் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்ததற்காக அவரது தாய் பிரவீணா லேசாக அடித்துக் கேட்ட போதுதான், அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று ஸ்மித்திகா கூறியுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை சிறுமியின் தந்தையான பிரகாஷின் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர, அனைத்து ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.
ஸ்மித்திகா மிகவும் சுட்டியான பெண் என்பதால் அவள் செய்யும் குறும்புகளை வீடியோ எடுத்து அவரது தந்தையிடம் காட்டியதாகவும், அது இவ்வளவு தூரம் பிரபலமடையும் என எதிர்பார்க்கவில்லை என்றும் ஸ்மித்திகாவின் தாய் பிரவீணா கூறினார்.
தன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறிய சுட்டிக் குழந்தை ஸ்மித்திகாவின் மற்ற பல டிக்டாக் மியூசிக்கலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. கொஞ்சும் மொழி பேசிய ஸ்மித்திகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.