கட்சி எனக்கு ஆட்சி உனக்கு என்று பேசப்படும் பேரங்களைப் போல், முன்னாள் இந்நாள் முதல்வர்கள் அதிமுகவில் செயல்பட்டு வருவது ஊரறிந்த உண்மை. ஜெயலலிதா இருந்தபோது, முன் வரிசையில் இருந்தார் ஓபிஎஸ்.,! பின்வரிசையில் நின்றிருந்தார் ஈபிஎஸ்.,! இன்று ஜெயலலிதா இல்லாத சூழலில் வரிசைகள் மாறிவிட்டதாக புலம்புகின்றனர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்.
கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்ஸும் தலை காட்டுகின்றனர். ஆட்சியில் முதல்வராக ஈபிஎஸ்ஸும் துணை முதல்வராக ஓபிஎஸ்ஸும் காட்சிக்கு முன் நிற்கின்றனர். இந்த ஒப்பந்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது தூக்கும் இரு தரப்பு உரசல்கள் கட்சிக்குள் லேசாக புகைவிட்டு கருகல் நாற்றமும் அடிக்கத் துவங்கிவிடும்!
அதற்காக ஓபிஎஸ் தரப்பில் கருத்துகளை வெளியிட்டு போர்க்கொடி தூக்க வைப்பவர், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான மைத்ரேயன். இப்போது யார் இதனைத் தொடங்கி வைக்கப் போகிறார்கள் என்று தெரியாது! ஆனால், புகைச்சலும் நமைச்சலும் மட்டும் இருப்பது நன்றாக வெளித் தெரிகிறது.
அண்ணன் எடப்பாடியார் பேரவை ஆரம்பம் ஆகிவிட்ட அதிர்ச்சியில் ஓபிஎஸ்., அணியினர் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்குக் காரணமாக அமைந்தது ஒரு போஸ்டர்.
அதுவும், ஓபிஎஸ்., தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடியாருக்கு பேரவை தொடங்கப்பட்டு, போஸ்டர் அடித்து ஒட்டுமளவு இருப்பது கண்டு நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது!