Home அடடே... அப்படியா? இதான் சர்கார்…! திருட்டுக் கதையை பட்டவர்த்தனமா சொல்லியாச்சு!

இதான் சர்கார்…! திருட்டுக் கதையை பட்டவர்த்தனமா சொல்லியாச்சு!

sarkar court

தொலைபேசி இணைப்பு திருடன் தயாரிப்பில்… கதை திருடன் இயக்கத்தில்… வருமான வரி திருடன் நடிக்கும்… திருட்டு சர்கார்!

நாம உம்முனு கம்முனு இருந்தா… அவங்க ஜம்முனு இருப்பாங்க!

இப்படி ஒரு திருட்டுப் படத்துக்கு கதை மட்டும் ஒரிஜினலா இருந்தா கூட்டணி கெட்டுப் போய்விடும் என்ற காரணத்தால், கதைத் திருட்டுடன் தொடங்கும் படம்… நாமும் நம் பங்குக்கு, அந்தக் கதையைத் திருடி … அப்படியே திருட்டு சர்காருன்னே வெளியில் இதோ வெளியில் விடுகிறோம்…

தியேட்டருக்கே போக வேண்டாம்… ஆத்திரத்தில் இயக்குனர் பாக்யராஜே வெளியிட்ட ‘சர்கார்’ படத்தின் முழுக்கதை இதுதான்…! படித்துவிட்டு, பார்க்கப் போகலாம்! பார்த்துவிட்டு படிக்க வேண்டிய தேவை இருக்காது!

தன் பெயர் ரிப்பேர் ஆனதில் சுதாரித்துக் கொண்டு சற்றே முழித்துப் பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஊடக நபர்களை அழைத்து  தனது தரப்பு நியாயத்தைச் சொல்கிறேன் என்ற பெயரில் இயக்குநர் கே. பாக்யராஜை பிடி பிடி என பிடித்துக் கொண்டிருந்தார்.

முருங்கைக்காயையே முதலாகக் கொண்டு ஒரு படத்தையே ஓட்டிய பாக்யராஜுக்கு, பதிலடி கொடுக்கத் தெரியாதா என்ன? அவர் பார்க்காத திரைக்கதையா?

சண்டையைப் பற்றி வெளியில் சொல்ல வந்தவர், என்ன நடந்துச்சுன்னா… என்ன நடந்துச்சுன்னா… என்று கேட்டுக் கொண்டே… சந்தடி சாக்கில் ‘சர்கார்’ படத்தின் முழுக் கதையையும் ஒருவரி விடாமல் அவுட்லைன் கொடுத்துவிட்டார்.

அவர் என்ன நடந்துச்சுன்னா என்று சொன்ன ‘சர்கார்’ நடந்த கதை இதுதான்….

விஜய் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் விஜய்.

ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்த விஜய்க்கு பெரும் ஏமாற்றம். கையில் வாக்காளர் அடையாள அட்டை! ஆனால், அவருடைய ஓட்டை அவருக்கு முன்பாகவே யாரோ ஒரு இந்தியனோ, மறத் தமிழனோ போட்டுவிட்டு போய்விட்டான். இதனால் கோபப்படுகிறார் விஜய். அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். ஆனாலும் ஓட்டளிக்க முடியவில்லை.

இதனால் கோபமடையும் விஜய், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போராடுகிறார். அந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இடையில் தேர்தல் ரத்தானதால் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார் விஜய்.

“தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும், செலவு செய்வதும் எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா. இப்போ போட்ட காசெல்லாம் போச்சு.. யார் தருவா.. உனக்கு அரசியலை பத்தி என்ன தெரியும்..? என்று அவர்களெல்லாம் விஜய்யின் தன்மானத்தைச் சீண்டிவிட..

இப்போது விஜய் அதே தொகுதியில் துணிச்சலாக சுயேட்சையாக நிற்க முடிவெடுக்கிறார். இதுதான் இடைவேளை போர்ஷன் என்கிறார்கள்.

இதற்குப் பின் அதே தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடக்கிறது. வழக்கம் போல்… விஜயைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள். எதிர்ப்புகள்.. அடிதடி. கலாட்டா..

இது எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு களத்தில் நின்று வெற்றியும் பெற்று விடுகிறார் விஜய். அதிசயத்திலும் அதிசயமாக தமிழக சட்டமன்றத்தில் அப்போது தொங்கு சட்டசபை உருவாகிவிடுகிறது.

அதாவது, ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை.

இப்போது அந்த ஒரேயொரு சுயேச்சை உறுப்பினர்தான் விஜய்! அவ்வளவுதான் களம் சூடுபிடிக்கிறது!

விஜய்யிடம் இரு தரப்பினரும் ஆதரவு கேட்கிறார்கள். எப்படியாவது நம்ம கட்சி ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் இரு கட்சியினருமே விஜயையே முதல்வராக்கவும் சம்மதம் கொடுக்கிறார்கள்.

“விஜய் முதல்வரானால் போதும். நாங்கள் அவருக்குக் கீழ் அமைச்சர்களாக இருந்து கொள்கிறோம்” என்று இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லி விடுகிறார்கள். ஆனால் விஜய் கடைசி டிவிஸ்ட்டாக “நான் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சுத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன். முதலமைச்சராகணும் என்று நினைக்கவில்லை. இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போதுதான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்.” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

ஆக ஒருவிரல் காட்டி ஒத்தைப் படத்தையே ஓட்டி விடுகிறார்கள். இத்துடன் நன்றி.சுபம். எல்லாம் போடப்பட்டு விடுகிறது.

ஒத்தை ஓட்டில் சர்கார் அமைந்த விதம் இதுதான்! என்பதுடன் இரண்டரை மணி நேரத்துக்குள் ஒரு  சர்கார் அமையும் விதத்தை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகனுக்காக, மற்ற சூட்சுமமான சீன்களை எல்லாம் கே பாக்யராஜ் தன் டைரக்சன் டச்சுடன் சொல்லவில்லை என்பதால், நாமும் இங்கே பதிவு செய்யவில்லை!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version