― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?‘மைனர் குஞ்சு’ ரேஞ்சில்... அட்வான்ஸ் புக்கிங்! கொளத்தூர் மணியின் ‘முற்போக்கு’ கட்டப் பஞ்சாயத்து!

‘மைனர் குஞ்சு’ ரேஞ்சில்… அட்வான்ஸ் புக்கிங்! கொளத்தூர் மணியின் ‘முற்போக்கு’ கட்டப் பஞ்சாயத்து!

- Advertisement -

இரண்டாயிரம் கொடுத்து காதல் லீலை செய்த மைனர்குஞ்சுக்கான தீர்ப்பிற்கும், மூன்று லட்சம் தண்டம் கட்டி சக்தியை புனிதப்படுத்தும் கொளத்தூர் மணி, தியாகுவின் கட்டப்பஞ்சாயத்திற்கும் எந்த வித்யாசமும் இல்லை… என்ற நியாயத் தீர்ப்பின் முடிவுரையைப் படித்துவிட்டு… முன்னுரைக்குச் செல்லலாம்! இங்கே ஆலமரம் மட்டும் தான் மிஸ்ஸிங்.!

இதற்கு அச்சாரமிட்ட தியாகு – கொளத்தூர் மணி அறிக்கை சக்தி- கவுசல்யா தொடர்பாக…!

1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த
குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள், எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச் சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று, தேவி தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்.

முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ’அந்தப் பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.

2) அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப் போய்க் கௌசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்றுசேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒரு முறைக்கு மேல் நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் உள்ள வகையிலும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும் குற்றம் என்று கருதுகிறோம்.

3)சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம்
கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.

4) நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து
மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்.

சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டது.

5)எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதி உசாவலுக்குரிய பொறிமுறையோ முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்க் குமுகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்து தரப்பினரும் கொண்ட நம்பிக்கையையும் துணைக்கொண்டு இயன்ற வரை எமது கடமையைச் செய்து முடித்துள்ளோம். தொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றியமளிக்க வேண்டிய சிலரிடம் தொலைப்பேசி வழியாகவும் உண்மையறிய முயன்றோம். முடிவுகளை அடைவதிலும் தீர்ப்பை வரைவதிலும் மனிதி செல்வி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தோழர் வளர்மதி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத் தோழர் பார்த்திபன் ஆகியோரும் எங்களுக்கு உதவினர். முடிவுகளைப் பொது அவையில் அறிவிக்குமுன் ’அந்தப் பெண்’ணிடமும் கருத்தறிந்தோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம்.

முடிவுகள்:

1) அந்தப் பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி, அந்தப் பெண்ணும் சரி, சக்தி-கௌசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடு ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி
ஒப்புக்கொண்டார். கௌசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்.

2)சக்தி தன் மீதான மற்றப் பொதுவான குற்றச்சாற்றுகளை மறுத்து
விளக்கமளித்தார். எதிர்த்தரப்பினரும் குற்றச்சாற்றுகளை வலியுறுத்தி விளக்கமளித்தனர். நீண்ட காலக்கழிவு, வதந்திகளின் ஊர்வலம், தனிமனித விருப்புவெறுப்புகள் ஆகிய காரணிகளின் மூட்டத்தில் எந்த ஒன்றையும் மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ அறுதியான இறுதிச் சான்று இல்லாத நிலையில் நாங்கள் இவ்வாறு முடிவெடுக்கிறோம்: தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க முடிகிறது.

பொதுவாழ்வில் பாலின பேதமற்று செயல்படும் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு இவ்வகைப் போக்கு பெரும் தடையாகும் என்பதும் – பொதுவாழ்வில் இயங்கும் பெண்கள் மீதான பொதுப்புத்தியில் உள்ள அவநம்பிக்கையை அது மேலும்
அதிகப்படுத்தும் என்பதும் – பல்வகைத் தடைகளைத் தாண்டி சமூகப் பணியாற்ற வரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மேலும் மேலும் இறுகும் என்பதுமே மெய்ந்நிலையாகும்.

தீர்ப்பு:

1) சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கௌசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.*

(*இது அப்போதே நடந்து முடிந்தது.)

2)சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும்.

3)இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும்
பறையிசைக்கக் கூடாது.

4)தண்டம் (இழப்பீடு) என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று இலட்சம் உருவாய் செலுத்த வேண்டும்.

5)இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய
விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் அவ்வாறு செய்யலாம். தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைப்பது அறத்தின் கட்டளை. முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது — தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் வைப்பது அல்லது சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்புவது –– போன்ற செயல்பாடுகள் முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக அறிவிக்க விரும்புகிறோம்.

தோழமையுடன், தியாகு /கொளத்தூர் மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version