நாம் இப்போது வைரல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பொய்களும், பகீர் தகவல்களும், பிறழ் செய்திகளும் பிடிக்கும் இடம், நல்லவை எதற்கும் கிடைக்காது!
அப்படி ஒரு வைரல் வீடியோ இது. டிக்டாக் ஆப் மூலம் பரவிய இந்த வீடியோ இன்று பலரது செல்போன்களையும் நிறைத்தது. இதில் ஆண் காவலர் ஒருவரும் பெண் காவலர் ஒருவருமாக நின்று கொண்டு, சினிமா பாடல் வரிக்கு ஆக்சன் கொடுக்கிறார்கள். இது குறித்து ஒரு வீடியோவும், சில வார்த்தைகளும் இன்று செய்தியாளர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் வேகமாகப் பரவின.
இந்த வீடியோவுக்கு சிலர் கொடுத்த கமெண்ட் கருத்துச் செய்தி இதுதான்…
பூவை நீ… பூ மடல்… பூவுடல்… தேன் கடல்… போலீஸ் ஜோடியின் டிக் டாக் வீடியோவால் சலசலப்பு!
கொஞ்ச நாளாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகமாகி கொண்டே போகிறது.
ஆண் போலீஸ் “காதல் மகாராணி” என்ற பாடலை வாயசைத்து கமல் போலவே நடிக்கிறார். அருகில் பெண் போலீஸ் ஹீரோயின் போலவே முகபாவனைகளை தருகிறார். இந்த வீடியோவிற்கு பலவித விமர்சனங்கள் எழுந்துள்ளன. “காக்கி சட்டையில் டூயட்”, “நைட்டில் ரொமான்ஸ் பாடி டூயட் ஜோடி லூட்டி” என்றெல்லாம் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
ஆனால் இந்த வீடியோவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. உரிய விடுமுறை கிடைக்காமல், நிறைய மன உளைச்சலில் தற்போது எண்ணற்ற போலீசார் பணியாற்றி வருகிறார்கள். பலரை அது தற்கொலை வரை சென்று விட்டுவிடுகிறது. தமிழக அரசும் போலீசாரின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சியையும் ஊக்குவித்து வருகிறது.
மன அழுத்தம் இந்நிலையில் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட தாங்களே இதுபோன்றதொரு யுக்தியை கையாளுவது சிறப்பு வாய்ந்ததே. கலையை ரசிக்க எந்த தடையும் யாருக்கும் எப்போதும் கிடையாது. அதே சமயத்தில் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் எண்ணற்ற போலீசாருக்கு இந்த அதிகாரியின் டிக்-டாக் வீடியோக்கள் புதிய உத்வேகத்தைதான் தருவதாக இருக்கும்! அந்த வகையில் இது பாராட்டக் கூடியதாகவே இருக்கிறது!!
இந்த வீடியோவுக்கு மேற்கண்ட கருத்தையும் சேர்த்தே பரப்பிவிட்டனர் பலர். இருப்பினும், நமக்குத் தோன்றுவது…
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்டுடா பாக்கிறியா பாக்கிறியா…? என்று வீர வசனங்களை காக்கிச் சட்டையில் இருப்போம் என்று பேசிப் பேசிப் பழகி… இன்று வெளியிடங்களிலும் பணி இடங்களிலும் அப்படி விறைப்பாகவே செல்வதைக் காண்கிறோம்.
காக்கிச்சட்டையை மாட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்று பார்க்கும் இளவட்டங்கள் பலருக்கும் சினிமா கதாநாயக போலீஸ் கதாபாத்திரம் ஏனோ நினைவுக்கு வந்து விடுகிறது. மீசையை முறுக்கிக் கொண்டு, உடலுக்கு இறுக்கமான சட்டையை அணிந்து கொண்டு, நெஞ்சு நிமிர்த்தி பூட்ஸ் கால் சத்தம் டொக் டொக் என்று வெளி வரும் வகையில் மிடுக்குடன் நடைபயில்வதை மனக்கண்ணில் இருத்திக் கொள்கிறார்கள்.
பல நேரங்களில் இத்தகைய மனப்பாங்கு, அப்பாவிகள் மீது மிடுக்கைக் காட்டுவதில்தான் பலருக்கு இருக்கிறதே தவிர, அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், ஆளும் தரப்பினர், உள்ளூர் வட்டம் மாவட்டம் என்று கரை வேட்டி கட்டியவர்கள், குறிப்பாக இஸ்லாமிய மதக்குழுக்கள் இவர்கள் முன் இந்த மிடுக்கெல்லாம் செல்லுபடியாவதில்லை!
இப்போது பரவி வரும் இந்த வீடியோ… இத்தகைய மிடுக்கு சொடுக்கு எல்லாம் இல்லாமல், மனிதனுக்குள் இருக்கும் காதல் உணர்வை, மென்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது! இது உண்மை போலீஸா அல்லது நாடக போலீஸா என்றெல்லாம் தெரியவில்லை! இவர்கள் தம்பதியரா, காதலர்களா என்பதும் உறுதியில்லை. ஆனால் பாடலிசைக்கான இருவரின் உடலசைவும் ரசிக்கும்படி இருப்பது உண்மை.
இந்நிலையில், இந்த வீடியோவில் தோன்றுவது, நாடக நடிகர்கள் என்றும், ஷூட்டிங் ஸ்பாட் இடைவேளையில் ரிகர்சல் மேற்கொண்டிருந்தபோது, ஒருவர் தெரியாமல் எடுத்துவிட்டார் என்றும் இந்த வீடியோவில் தோன்றும் நபர் கூறியுள்ளார்.
கோவையில் நாடக நடிகர்கள் நடித்த ஒரு குறும்படத்தின் இடைவேளையில் டிக் டாக் பாடலுக்கு நாடக கலைஞர்கள் நடிக்க விளையாட்டாக அருகில் இருந்த ஒருவர் இதனை யூடியுப்பில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். இவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல நாடக கலைஞர்கள்… என்பது பின்னர் தெரியவந்தது.