பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவின் சட்டநிபுணர்களுடன் செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத்தகவலை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து இம்ரான் கான் பேசியதாவது:
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாங்களும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
9/11 சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புகள் கிடையாது.
இருந்தாலும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்படுகிறது.
சில நேரங்களில் ஏற்பட்ட தவறான சம்பவங்களின் காரணத்தால் நான் அப்போதைய பாகிஸ்தான் அரசை குற்றம்சாட்ட நேர்ந்தது.
ஆனால், களத்தின் உண்மை நிலவரத்தை நாங்கள் அமெரிக்காவிடம் கூறவில்லை என்பது தான் உண்மை.
அதற்கு முக்கிய காரணம், எங்கள் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தானில் இருந்து மட்டும் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அப்போதைய காலகட்டத்தில் என்னைப் போன்றவர்கள் உயிருடன் இருக்க முடியுமா என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது நடைபெற்ற போரில் பாகிஸ்தான் முழுமையாக உதவ வேண்டும் என்று அமெரிக்காவும் எதிர்பார்த்தது.
ஆனால், அப்போதைய காலகட்டத்தில் எங்களின் இருப்புக்காகவே நாங்கள் போராட வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.