Home இலக்கியம் கவிதைகள் ஒன்றை வாங்கிக் கொண்டு இன்னொன்றைத் தருவதே இயற்கை!

ஒன்றை வாங்கிக் கொண்டு இன்னொன்றைத் தருவதே இயற்கை!

hope thought
hope thought

விதையை வாங்கிக்கொண்டுதான் விருட்சத்தைத் தருகிறது மண்;
அழுகையை வாங்கிக்கொண்டுதான் அமைதியைத் தருகிறது மனது;
நடையை வாங்கிக் கொண்டுதான் இலக்கைத் தருகிறது திசை;
விறகை வாங்கிக் கொண்டுதான் உணவைத் தருகிறது தீ;
உணர்வுகளை வாங்கிக் கொண்டுதான் உறவுகளைத் தருகிறது வாழ்க்கை;
வயதை வாங்கிக் கொண்டுதான் வாழ்க்கையைத் தருகிறது காலம்.

இயற்கையின் கணக்குகள் எப்போதும் மிகக் கறாரானவைதாம்;
நம்மிடமிருந்து ஒன்றை வாங்கிக்கொண்டுதான் மற்றொன்றைத் தருகிறது.
.
மாற்றங்களால் மட்டுமே சதா விரிந்து கொண்டிருக்கிறது இந்தப்பிரபஞ்சம்.

ஐம்பூதங்களின் அத்தனைச் செயல்களும், கணங்களை மாற்றிக்காட்டும் கண்ணாடிவில்லைகள்.

காரணங்களும், காரியங்களும், மாறி மாறி, ஏதோ ஒரு விழைவை, ஏதோ ஒரு எதிர்பார்ப்பை, கணம்கணமாய், நம்முள் கட்டிவைக்கின்றன.

விழைவுகளே எதிர்வரும் கணங்களை வித்தியாசப்படுத்துகின்றன. விழைவுகள் அற்ற கணங்களின் தொடர்ச்சியே மரணம்.

மரணம் என்னும் காரியம், காரணமாகி வேறு காரியங்களை விளைவித்தாலும், மனிதமனத்தால் மரணம்வரை மட்டுமே விழைவுகளின் தொடர்ச்சியை உள்வாங்கிக்கொள்ள இயலுகிறது.
.
பிரபஞ்சத்தின் அணுவாகிய நாம், காரண காரியங்களாய், சாதா அந்த மாற்றங்களோடு சேர்ந்தே இயங்கிக்கொண்டுதாம் இருக்கின்றோம்.

ஏதோ ஓரு சிந்தனை, நம்மை உள்ளுக்குள் இருந்து ஓயாது மாற்றிக்கொண்டேதான் இருக்கிறது.

சூழலுக்கும், நம் ஊக்கத்தின் போக்குக்கும் ஏற்றவாறு, அந்த உள்மாற்றங்கள், நம்மிலிருந்து நம்மை, கொப்பரைத் தேங்காயைப் போல், நம் உள்ளேயே பிரிக்கப் பார்க்கின்றன.

சூழல்கள் அத்தகைய மாற்றங்களுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ தோற்றமளிக்கின்றன.

சார்பையும் எதிர்ப்பையும், காரணங்களாய்க் கருதி, பெயரிடுகிறோமே ஒழிய, பிரபஞ்சத்தின் எந்தவினையும் ஒருசார்பின் பாற்பட்டதன்று.

சார்புகள், எதிர்ப்புகள் இவை இரண்டும் காரியத்தின் விளைவுகளைப் பொறுத்து வியாக்கியானம் பெறுகின்றன.
.
சிந்தனைகள் மனிதகுலத்தின் சிறப்புக் குணங்கள். சிந்தனைத்தெளிவுகளே பின்னர் அவன் குணங்களாகப் பரிணாமிக்கின்றன.

சிந்திக்கும் ஆற்றலும், சிந்தனையின் திசையறிதலுமே மனிதகுலத்தின் எழுச்சிக்கு வித்தாக அமைந்துவருகிறது.

பிரபஞ்சத்தையும் மீறிய வெளியை உள்ளடக்கிய நமது மனங்கள், கோடிக்கணக்கான சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ளும் பூமியைப் போன்றதே.

மனத்துக்குள் விதைக்கப்பட்ட ஒரு சிறிய சிந்தனை, விருட்சமாகி, பல செயல்களுக்கு வழிவகுக்கிறது.

சூழலும் ஊக்கமுமே, மாற்றங்களின் பெற்றோர். தக்க சூழலில்மட்டுமே நம் ஊக்கம், தேடும் மாற்றங்களைத் தெரிந்து தரும்.

ஒருவன் தன்னையே கருவியாகவும், செயப்படுபொருளாகவும் ஆக்கிக் கொள்ளும்போதுதான், புத்தன் தோன்றுகின்றான்.

சித்தார்த்தன் இல்லாமல் எந்தப் புத்தனும் தோன்றிவிடப்போவதில்லை.
*
சிற்பியின் சிந்தனை
உளியின் ஓட்டம்
புத்தன் சிலை
*

  • சந்தர் சுப்ரமணியன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version