சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
23. சிக்கனம் சிறப்பான குணம்!
செய்யுள்:
இதமேவ ஹி பாண்டித்யம் சாதுர்யமிதமேவ ஹி|
இதமேவ சுபுத்தித்வம் ஆயாதல்பதரோ வ்யய:||
– மஹாபாரதம்
பொருள்:
வரவை விட செலவு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதே அறிவுடைமை. அதுவே சாமர்த்தியம். அதுவே நற்குணம்.
விளக்கம்:
ஒரே ஒரு கருத்தையே திடமாக கூறுகிறார் இந்த செய்யுளில். அனாவசிய செலவு செய்யக்கூடாது என்பதே அது. இருப்பதைக் கொண்டு வாழக் கற்க வேண்டும். பொருளாதார நலிவால் வீழ்ந்துபோன நிறுவனங்களும் (என்ரான், ஆர்தர் ஆண்டர்சன் போன்றவை), நாடுகளும் (கிரீஸ் போன்றவை) மனிதனுக்குப் பாடம் புகட்டுபவை.
இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் மிக உயர்ந்த செய்தி.
பொருளாதாரப் பிரச்சனைகளே பல கவலைகளுக்கும் மூலம். கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட செய்திகளைப் படிக்கும்போது தான் இந்த சுபாஷிதத்தின் அருமை புரிகிறது. தனிமனிதன், குடும்பம், நிறுவனம், உலக நாடுகளின் பட்ஜெட்… எதை எடுத்துக் கொண்டாலும் வரவுக்குள் செலவு என்ற இந்தக் கருத்து பொருந்தும்.
தினக் கணக்கு எழுதும் பழக்கம் முன்பெல்லாம் வீடுகளில் பலருக்கும் இருந்தது. அவசியமானவை, அநாவசியமானவை என்று செலவுகளை சரி பார்ப்பதற்கு உதவும் வழிமுறை அது. பட்ஜெட்டுக்கு ஏற்ற வாழ்க்கை, இருப்பதைக் கொண்டு குடும்பம் நடத்துவது… போன்றவை இந்திய இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை. சேமித்து வைக்கும் இந்தியர்களின் மனப்பான்மையே பொருளாதார மேடு பள்ளங்களில் இருந்து நம் நாட்டைக் காத்து வருகிறது.
கிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி. மக்களிடம் பெருகி வரும் கன்ஸ்யூமரிசம் என்னும் போக்கு தனி மனித அளவிலும் குழு அளவிலும் கூட நல்லது அல்ல. அளவுக்கதிகமான செலவுகளுக்கு அடிமையாவதே குறுக்கு வழிகளில் பணம் தேடும்படி மனிதனைத் தூண்டுகிறது.