
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
53. கூச்சத்தை விட்டொழி!
ஸ்லோகம்:
தனதான்ய ப்ரயோகேஷு வித்யா சங்க்ரஹணே௨பி ச |
ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: சுகீ பவேத் ||
— சாணக்கிய நீதி
பொருள்:
பொருளாதார விஷயங்களிலும் கல்வி கற்பதிலும் உணவு விஷயத்திலும் மனித உறவுகள் தொடர்பான விஷயங்களிலும் வெட்கத்தைவிட்டவனே சுகப்படுவான்.
விளக்கம்:
உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் நோ சொல்லக் கற்று கொள் என்று கூறுவர் மனோதத்துவ நிபுணர்கள். சங்கோஜப்பட்டு வருத்தத்துக்கு ஆளாகாதே என்பது அவர்களின் அறிவுரை.
சங்கோஜப்படுபவர்கள் பிறருக்கு கடன் கொடுத்தோ, சாட்சிக் கையெழுத்துப் போட்டோ நஷ்டம் அடைவார்கள் என்பது இதன் எச்சரிக்கை. மன அமைதியைக் குலைக்கும் சங்கோஜத்தாலோ பிறர் ஏதாவது நினைப்பார்களோ என்று கூச்சப்பட்டோ உனக்குப் பிடிக்காத செயலைச் செய்யாதே என்பது இந்த சுலோகத்தின் உபதேசம்.
சிலசமயம் தெரிந்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் வேறு வழியின்றி தலையிட்டு அவர்கள் தரப்பில் நின்று பேசுவோம். அவ்வாறு பேசுவது கூட நம் சுகத்தை விலக்கக் கூடியது என்பது சாணக்கியர் கூறும் நல்லுபதேசம்.
வெட்கம், நாணம், கூச்சம், சங்கோஜம் போன்றவற்றை சில இடங்களில் காட்டக் கூடாது என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
வெட்கம் மனிதனுக்கு அலங்காரம் என்பார்கள். அலங்காரம் என்பது தேவையான போது அணிந்துகொண்டு தேவையற்றபோது எடுத்து வைத்து விடுவோம் அல்லவா? இந்த ஸ்லோகத்தில் கூச்சப்படக் கூடாத சில சந்தர்ப்பங்களை விவரிக்கிறார். வியாபார நிலையங்களிலும், தனம், தானியம் தொடர்பான விவகாரங்களிலும் கூச்சப்படக் கூடாது.
பணம் கொடுக்கல் வாங்கலில் எத்தகைய நண்பன் ஆனாலும் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும். கல்வி கற்கும்போதும், வகுப்பில் பாடம் கேட்கும் போதும் ஏதாவது ஐயம் தோன்றினால் யார் என்ன நினைப்பார்களோ என்று தயங்கினால் யாருக்கு நஷ்டம்? அதனால் படிப்பு விஷயத்திலும் கூச்சப்படக் கூடாது. அதே போல் உணவு உண்ணும் போதும், பத்தியம் இருக்கும்போதும் சங்கோஜப்பட்டால் வயிற்றுக்கு கேடு விளையும்.
இவ்விதம் வெட்கப்படக்கூடாத இடங்களில் சங்கோஜப் படாதவர்களே சுகமாக வாழ்வார்கள். மனசாந்தியோடு இருப்பார்கள்.