Home சுய முன்னேற்றம் சுபாஷிதம்: உத்தமர்களின் குணங்கள்!

சுபாஷிதம்: உத்தமர்களின் குணங்கள்!

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

87. உத்தமர்களின் குணங்கள்!

ஸ்லோகம்:

விபதி தைர்யமதா௨ப்யுதயே க்ஷமா
சதசி வாக்படுதா யுதி விக்ரம: |
யசசி சாபிருசிர்வ்யசனம் ஸ்ருதௌ 
ப்ரக்ருதிசித்தமிதம் ஹி மஹாத்மனாம் ||
– பர்த்ருஹரி.

பொருள்:

ஆபத்து சமயத்தில் தைரியமாக இருப்பது, செல்வம் சேர்ந்த போது பொறுமையாக இருப்பது, சபையில் வாக்கு வன்மையைக் காட்டுவது, போரில் வீரம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற விருப்பம், அறிவை வளர்த்துக் கொள்வதில் உற்சாகம் பெற்றிருப்பது மகாத்மாக்களின் இயல்பு. 

விளக்கம்

உத்தமர்கள் என்னென்ன குணங்கள் கொண்டவர்கள் என்பதை இங்கு பர்த்ருஹரி விளக்குகிறார்.

uratha sinthanai

மகாத்மா என்ற சொல்லை யாருக்கு வேண்டுமானாலும் அடைமொழியாக பயன்படுத்துகிறோம். யார் மகாத்மா? யார் அல்லர்? என்று தெரிவிக்கும் உரைகல்லாக இந்த ஸ்லோகம் விளங்குகிறது.  மகாத்மாக்களான மனிதர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்கும்  சுலோகம் இது.

ஆபத்து நேரும் போது தைரியமாக எதிர்கொள்ளும் திறமை அனைவருக்கும் இருக்காது. சிலர் தற்கொலைக்கு முயல்வதைக் கூட பார்க்கிறோம். வளர்ச்சி சிலரின் கர்வத்திற்கு வழிவகுக்கிறது. சபையில் பேச வேண்டி வரும்போது நடுக்கத்தோடு ஏதேதோ பேசுவார்கள் சிலர். அகம்பாவத்தோடு சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் நமக்கு எதிர்ப்படுவதுண்டு. வாக்குவன்மை அனைவருக்கும் அமையாது.  புலனின்பத்துக்கு அடிமையானவர்களைப் பார்க்கிறோம். ஆனால் கல்வி அறிவைப் பெறுவது என்னும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் யாரையாவது நாம் பார்த்திருக்கிறோமா?

சமுதாயத்தில் நிகழும் அநியாயங்களை தட்டிக் கேட்டு தர்மத்தை நிலை நாட்டுவதில் வீரத்தை காட்டி தர்ம ரட்சணைக்காக தன் சக்திகளை தாரை வார்க்கும் மனிதர்கள்  அதிகம் தேவை. ஆரம்பசூரத்தனம்  காட்டாமல்  தாம் முன்னெடுத்த பணிகளில் வெற்றி சாதித்து தீரவேண்டும் என்ற விடாமுயற்சியோடு பணிபுரிபவர்கள் சமுதாயத்திற்குத் தேவை.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version