Home சுய முன்னேற்றம் சுபாஷிதம்: பொய்மையும் வாய்மையும்!

சுபாஷிதம்: பொய்மையும் வாய்மையும்!

subhashitam_1-5
subhashitam 1 5

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

94. பொய்மையும் வாய்மையிடத்த!

ஸ்லோகம்:

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யமப்ரியம் |ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்மஸ்ஸநாதன: ||
– மனுஸ்மிருதி 4 -138.

பொருள்:

உண்மையே பேசவேண்டும். இனிமையாக பேசவேண்டும். பிரியம் இல்லாதவற்றை உண்மையானாலும் பேசக்கூடாது. இனிமையாக இருக்கிறது என்பதற்காக பொய் பேசக்கூடாது. இது சனாதன தர்மம்.

விளக்கம்:

உண்மை பேசுவதற்கு சனாதன தர்மத்தில் மிகச் சிறந்த இடம் உள்ளது. சத்யமேவ ஜெயதே என்பதை கொள்கையாகக் கொண்ட தேசம் இது. உண்மையைச் சொல்வதில் உள்ள தர்ம சூட்சுமங்களை மனு இவ்வாறு விளக்குகிறார்.

உண்மை உரைப்பதில் சில இடங்களில் நமக்கு சிரமம் ஏற்படலாம். ஆனாலும் சத்தியத்தை விடக்கூடாது. பிறருக்கு துன்பம் விளைவிக்குமானால் உண்மையாக இருப்பினும் கசப்பான உண்மையை பேசக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பரம ஏழையைப்  பார்த்து நீ ஒரு தரித்திரம் பிடித்தவன் என்பது கசப்பாக உரைக்கும் சத்தியம். அதுபோலவே மகிழ்ச்சி அளிக்கும் என்பதற்காக பொய் உரைக்கவே கூடாது.

இந்த தர்ம சூட்சுமத்திற்கு உதாரணமாக நெடுங்காலமாக ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு வனத்தில் தனியாக உள்ள ஒரு பெண்ணை சில திருடர்கள் துரத்தி வந்தார்கள். அவள் அங்கிருந்த ஒரு முனிவரின் குடீரத்தில் தற்காப்புக்காக ஒளிந்து கொண்டாள். திருடர்கள் வந்து ‘ஒரு பெண் இந்த பக்கம் வந்தாளா?’ என்று முனிவரிடம்  கேட்டனர்.

உண்மையைக் கூறினால் அந்த பெண்ணிற்கு ஆபத்து நேரும். பொய் உரைத்தால் பாபம் சூழும். என்ன செய்வது? இந்த தர்மசங்கடத்தில் அந்த முனிவர் தன் புத்தி கூர்மையை பயன்படுத்தினார். “பார்க்கும் கண்கள் பேசாது! பேசும் வாய் பார்க்காது! இதை விட வேறென்ன சொல்ல?” என்றாராம். திருடர்கள் அவரைப் பைத்தியம் என்று நினைத்து விலகிச் சென்றனர். அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாள். இது சமத்காரமான ஒரு கதை.

ஆனால் உயிர், மானம் போன்றவற்றை காப்பாற்றிக் கொள்வதற்கு பொய் கூட உண்மையின் பலனை அளிக்கும் என்று புராண இதிகாசங்கள் விளக்குகின்றன. பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்று வள்ளுவன் உரைக்கவில்லையா?

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version