Home சுய முன்னேற்றம் சுபாஷிதம்: நன்மை, தீமைகளின் சக்கரம்!

சுபாஷிதம்: நன்மை, தீமைகளின் சக்கரம்!

subhashitam_1-5-696x392-2
subhashitam 1 5 696×392 2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

101. நன்மை,  தீமைகளின் சக்கரம்!

ஸ்லோகம்:

சுகஸ்யானந்தரம் து:கம் துக்கஸ்யானந்தரம் சுகம் !

ந நித்யம் லபதே து:கம் ந நித்யம் லபதே சுகம் !!

– மகாபாரதம்.

பொருள்:

இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் வருகிறது. துன்பத்திற்கு பின் இன்பம் கிடைக்கிறது. மனிதன் எப்போதும் இன்பமே பெறமாட்டான். எப்போதும் துன்பமே பெறமாட்டான்.

விளக்கம்:

காலம் ஒரு சக்கரம் போன்றது. ஒரு சமயம் கடுமையான வெய்யிலாக இருக்கும். பிறிதொரு சமயம் சூரிய தரிசனத்திற்காக ஏங்குவோம். வெயில் காலத்தில் அணியும் உடைகள் கூட பாரமாகத் தோன்றும். குளிர்காலத்தில் கம்பளி ஆடை அணிந்தால் கூட நடுங்கும். சிறிது மழையாவது தூறக் கூடாதா என்று ஏங்கும் காலமும் உண்டு.

அடை மழை நிற்காதா என்று புலம்பும் காலமும் உண்டு. இது இயற்கை நியதி. வாழ்க்கையில் நிகழும் இன்பங்களும் துன்பங்களும் இவ்வாறானவையே என்கிறார் வியாச பகவான் இந்த ஸ்லோகத்தில்.

தீரன் எப்போதும் இன்ப துன்பங்களுக்கோ லாப நஷ்டங்களுக்கோ மகிழவோ  வருந்தவோ கூடாது என்ற உண்மையை மகாபாரதத்தில் உள்ள சாந்தி பர்வம் விளக்குகிறது. இந்த உண்மையை உணர்ந்தால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை யாரும் எடுக்க மாட்டார்கள். வாழ்க்கை மீது ஒரு ஆசையை ஏற்படுத்தும் வாஸ்தவம் இந்த ஸ்லோகம்.

சக்கரத்தில் இருக்கும் ஆரங்கள் ஒருமுறை மேலும் ஒருமுறை கீழும் சுற்றிவரும். எப்போதும் எதுவும் ஒரே மாதிரி இருக்காது என்பது இயற்கை கற்பிக்கும் பாடம். சிறு துன்பம் நேர்ந்தாலே பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அல்லது பிறரைக் கொலை செய்வது போன்ற வழக்கங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. மகாபாரத கதைகளைப் படித்தால் தைரியமாக துன்பங்களை எதிர் கொள்ளும் சக்தி ஏற்படும்.

ராமன், தர்மபுத்திரன், ஹரிச்சந்திரன் போன்ற மகாராஜாக்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் துன்பம் அனுபவித்தாலும் தாங்கிக் கொண்டார்கள்.

இலைகள் உதிர்ந்து மொட்டையான மரம் மீண்டும் துளிர்க்கிறது. அதேபோல் துன்பம் நிலையாக இருக்காது. இன்பம் என்னும் தளிர் துளிர்க்கும். நாம் செய்யக்கூடியது நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்பதே!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version