― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள் (7): காலம் வழிகாட்டும்!

விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள் (7): காலம் வழிகாட்டும்!

- Advertisement -

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -7
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

7 -Time Managnement

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

காலம் வழிகாட்டும்

சிறிய துன்பம் நேர்ந்தாலே பொறுமையின்றி உயிரை மாய்த்துக் கொள்வதோ அல்லது பிறர் உயிரை வாங்குவதோ இன்றைய காலகட்டத்தில் அதிகம் தென்படுகின்றது. வாழ்க்கைக்கு உயர்ந்த ஆதரிசம் என்று ஒன்று இல்லாமல் போனதே இதற்குக் காரணம். கவலையோ கஷ்டமோ வராத மனிதனே இருக்க மாட்டான். அவற்றை சகித்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வதில்தான் மனிதனின் சிறப்பு உள்ளது.

தசரதனின் குடும்பத்தினரும் தர்ம புத்திரனின் குடும்பத்தினரும் அனுபவிக்காத கஷ்டங்களா? ஆயினும் எத்தனை தைரியமாக சகித்துக் கொண்டார்கள்… என்பதைப் படித்தறிந்தவர்கள் அத்தகைய சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். சீதா தேவி அனுமனுக்குக் கூறிய வார்த்தைகள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தைரியம் அளிக்கக் கூடியவை.

சுலோகம்:
ஐஸ்வர்யே வா ஸுவிஸ்தீர்ணே வ்யசனே வாதிதாருணே !
ரஞ்ஞ்வேவ புருஷம் பத்த்வா க்ருதாந்த பரிகர்ஷதி !!
-சுந்தர காண்டம் 37-3

“ஒரு முறை மிக அதிக செல்வத்திற்கும் மறுமுறை மிக பயங்கரமான கஷ்டத்திற்கும் மனிதனை கயிறு கட்டி இழுப்பது போல் விதி/தெய்வம் இழுத்துக் கொண்டிருக்கும்”.


கலியுகம் நாற்பத்து ஏழாவது நூற்றாண்டில் கிபி பதினாறாவது நூற்றாண்டில் பாரத தேசத்தில் ஒரு மகாவீரன் இருந்தான். அவனுடைய ஆதரவில் பல ஹிந்து அரசர்கள் மொகலாய அக்பரை எதிர்த்து போராடினர். அக்பருக்கு அவனென்றால் சிம்ம சொப்பனம். தன் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டுமென்றால் அந்த மகாவீரனைப் பணிய வைக்க வேண்டும். அல்லது அவனுடைய ராஜ்யத்தை வென்று தீர வேண்டும். அல்லது அவனைக் கொல்ல வேண்டும் என்பது அக்பரின் திட்டம்.

பல முயற்சிகள் தோல்வியுற்றபின், முதுகில் குத்தும் கயவர்கள் சிலரின் உதவியோடு அக்பரின் படைகள் அந்த வீரனின் ராஜ்யத்தின் மீது மீண்டும் படை எடுத்தன. அவனைத் தோற்கடித்தன. கோட்டையை வசப்படுத்திக் கொண்டன. அந்த மகாவீரன் நாளைய தினத்தின் மீது நம்பிக்கை வைத்து அக்பரின் படைக்குச் சிக்காமல் காட்டில் ஒளிந்து கொண்டான். அவனே ராணா பிரதாப் சிம்மன்.

மகா வீரனான மேவாட் ராஜ ராணா பிரதாப் எல்லைகளைத் தாண்டி வந்த மிலேச்சர்களின் கைகளில் தோல்வி கண்டு வாழக் கூடியவனா? மகாபாரதம் அரண்ய பர்வத்திலும் சாந்தி பர்வத்திலும் தர்மபுத்திரருக்கு வியாசர் கூறிய உபதேசங்களைக் கற்றறிந்த அறிவாளி ராணா பிரதாப். அதனால் தைரியத்தை இழக்காமல் வனவாசத்தில் காட்டு வாசிகளை ஒன்று திரட்டினான். இயல்பாகவே நாட்டுப்பற்று மிக்க காட்டுவாசிகளான வேடர்களைத் தன் படை வீரர்களாக பயிற்றுவித்தான். சரியான சமயத்தில் மொகலாயப் படை மீது தாக்குதல் நடத்தினான். சித்தோட் தவிர மற்ற கோட்டைகளைத் திரும்ப பெற்றான்.

இந்த வரலாற்றுப் பரிணாமம் என்ன தெரிவிக்கிறது? எல்லா நாட்களும் ஒன்று போல் இருக்காது என்று.

இலையுதிர் காலத்தில் இலைகளெல்லாம் உதிர்ந்து அரச மரம் மொட்டையாக நிற்கும். அதன் வாழ்க்கை அதோடு தீர்ந்து விட்டதோ என்று தோன்றும். ஆனால் காலம் மாறும் போது வசந்த காலம் வந்த உடனே அரச மரம் மீண்டும் துளிர்க்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே முழுவதும் பசுமைக் கோலம் பூண்டு விடும். கஷ்டங்கள் நிரந்தரமல்ல. காலம் மாறும். வாடிப் போன வாழ்க்கை மீண்டும் துளிர்க்கும் என்ற உண்மையை உணர்! என்று கூறுகிறது ராணா பிரதாப் வரலாறு.


எந்த நிமிடத்தில் என்ன நடக்குமோ…!

பிவி நரசிம்மராவு டில்லியிலிருந்து தன் இருப்பிடத்தை ஹைதராபாதுக்கு மாற்றிக் கொண்டு அரசியல் துறவு மேற்கொள்ள நினைத்து குற்றாலம் பீடத்திற்குச் சென்று சந்நியாசியாகும் முயற்சியில் இருந்தார். அவருக்கிருந்த செல்வம் அவர் எழுதிய நூல்கள் மட்டுமே. தன் நூல் நிலையத்தைக் கூட டில்லியிலிருந்து ஹைதராபாதுக்கு அனுப்பி விட்டார்.

டெல்லியிலிருந்து விடை பெறுவதற்கு மனதளவில் தயாரான வேளையில், ராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. காங்கிரசில் நிச்சயமற்ற சூழல் இருந்தது. யார் பின்னாலும் பத்து பேர் பார்லிமென்ட் மெம்பர்கள் இல்லை. பிவி நரசிம்மராவின் நிலைமையும் அதுவே; படை பலமும் இல்லை… பொருள் பலமும் இல்லை. ஆனால் பிவி அஜாத சத்ரு. அவருக்கு தலைமைப் பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு யாரும் இல்லைதான். அவருக்கு கொடுப்பதாக இருந்தால் வேண்டாம் என்று மறுப்பவரும் யாரும் இல்லை.

“இவர் நம் பேச்சை மீற மாட்டார்” என்று எல்லோருமே நினைத்தார்கள். அவரை கட்சித் தலைமை பீடத்தில் ஏற்றினார்கள். தேர்தலுக்குப் பின் சிறுபான்மை அரசாங்கத்தின் பிரதமரானார். ஆனால் பிரதமரான பின்பு, ‘இதோ முடிந்து விட்டது… அதோ முடிந்து விட்டது…. மைனாரிட்டி அரசு’ என்று எதிர்பார்த்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமே மிஞ்சியது. பிரத்யேக சூழ்நிலைகளை அனுகூல சூழ்நிலைகளாக மாற்றிக் கொள்வதே உண்மையான தலைமைப் பண்பு. பிவி நரசிக்மராவு அப்படிப்பட்ட தலைவர்.

ரண்டாண்டுகளில் கட்சி மீதும் அரசாங்கத்தின் மீதும் நல்ல பிடிப்பை எற்படுத்திக் கொண்டார். முழுமையான காலமும் பிரதமராக நீடித்தார்.

“காலேன சர்வம் லபதே, மனுஷ்ய:” – காலத்திற்கு ஏற்ப மனிதன் அனைத்தையும் பெறுகிறான்”

“கிரகநிலை சரியில்லாததால் உனக்குத் துன்பம் வந்ததே தவிர, இதோ… கிரகங்கள் மாறும்… பார்! நல்ல காலம் பிறக்கும்”. ‘அச்சே தின் ஆரஹே ஹை” – என்ற நம்பிக்கை மனிதனுக்கு மிகுந்த மனோ பலத்தை அளிக்கக் கூடியது. அவ்வாறு தைரியம் அளிக்கும் நெருங்கிய நட்பு கிடைக்க வேண்டும்.

‘திடீரென்று திருமணம் அமைந்து விட்டது’, ‘கோர்ட்டில் அனுகூலமாக தீர்ப்பு வந்து விட்டது’, ‘பண நெருக்கடி நீங்கிவிட்டது’, ‘இறந்து விடுவானோ என்று பயந்தோம்… நோயிலிருந்து குணமடைந்து விட்டான்’, ‘மகனுக்கு வேலை கிடைத்து விட்டது’… இவ்வாறு கூறுவதைக் கேட்டிருக்கிறோம். காலம் அனுகூலமாக மாறினால் அனைத்தும் நன்மையில் முடியும்.

காலத்திற்கு ஏற்ப மனிதன் அனைத்தையும் பெற்று விடுகிறான். நேரம் காலம் சரியாக இருக்கும்போது எந்த தகுதியும் இல்லாதவன் கூட உயர் பதவி வகிப்பான். புத்தி பலம், திறமை உள்ளவர் கூட காலம் சரியில்லாத போது நலிந்து போவார். இந்த உண்மை தெரிந்தால் மனிதன் சின்னச் சின்ன கஷ்டங்களுக்கெல்லாம் மனமுடைந்து போக மாட்டான்.

காலத்தைப் பொறுத்து சந்திரன் பூரண நிலவாகத் தென்படுவான். சரியான பருவகாலமில்லாத அகாலத்தில் மரங்கள் பூக்காது… காய்க்காது. அகாலத்தில் வறண்டு போன நதி, சரியான காலம் வரும்போது வெள்ள நீரோடு பிரவகிக்கும். இந்த சிந்தனை துயரமான நேரத்தில் நினைவுக்கு வந்தால் அமைதி கிடைக்கும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கும்.

காலத்தின் மகிமை பற்றி வியாசர் கூறுகிறார்-
நா காலதோ ம்ரியதே ஜாயதே வா
நா காலதோ வ்யாஹரதே ச பால: !
நா காலதோ யௌவன மப்யுபைதி
நா காலதோ ரோஹதி பீஜமுப்தம் !!
-மகாபாரதம், சாந்தி பர்வம் – 25-10

காலம் கனியாத போது மனிதன் இறக்கவும் மாட்டான்… பிறக்கவும் மாட்டான். காலம் கனியாமல் குழந்தைக்குப் பேச்சு வராது. காலம் கனியாமல் பிள்ளைக்கு இளமை வராது. காலம் கனியாமல் விதைத்த விதை முளைக்காது. வாழ்க்கையில் எதிர்ப்படும் சுக, துக்கங்கள் காலச் சக்கரத்தால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்பதை வியாசர் இவ்விதம் வர்ணிக்கிறார்.

“சுகஸ்யானந்தரம் து:கம் து:கஸ்யானந்தரம் சுகம்
ந நித்யம் லபதே துக்கம் ந நித்யம் லபதே சுகம்”
-மகாபாரதம், சாந்தி பர்வம் -25/23

சுகத்திற்குப் பிறகு துக்கமும், துக்கத்திற்குப் பிறகு சுகமும் வந்து செல்லும். எப்போதும் துயரமே நிலவாது. நித்தியமும் மகிழ்ச்சியே நிலைக்காது. மகிழ்வோ துயரமோ விருப்பமோ வெறுப்போ வெற்றியோ தோல்வியோ வருவதை வந்தபடி ஏற்க வேண்டும். இன்பம் துன்பம் என்ற இரட்டைகளைக் கண்டு வீரன் மகிழ்வோ துன்பமோ கொள்ள மாட்டன். அவனே ஸ்திதப் பிரக்ஞன்.

அதனால் சான்றோனான தலைவன் துயரங்களைக் கண்டு அஞ்சமாட்டான். அவற்றை கண்டு ஓடி ஒளிய மாட்டான். அவனுக்குத் தெரியும்… இருளுக்குப் பிறகு வெளிச்சம் வரும் என்று.

துன்பத்திலிருந்தும் சவால்களில் இருந்தும்தான் சிறந்த தலைவர்கள் உருவாகிறார்கள். சிவாஜி வாழ்க்கையிலும் இதுவே உண்மையானது. சாதாரணமாகத் தாண்ட முடியாத கஷ்டங்களைக் கடந்து உயர்ந்ததுதான் சிவாஜியின் சிறப்புக்குக் காரணம். பதினொன்று வயதிலேயே சிவாஜி போர்க்களத்தில் குதித்தான். கடினமான கோட்டைகளை வென்றான். இந்த வெற்றி அவனுடைய தன்னம்பிக்கையை வளர்த்தது. அதன்பின் அவன் பல கோட்டைகளை வென்றான். அவன் தலைமையில் படை வீரர்களும் தளபதிகளும தம் உயிரைத் தாய் நாட்டுக்காக சுதந்திர மேடையில் சமர்ப்பிப்பதற்கு தயாரானார்கள்.

கொரில்லா யுத்தத்தைக் கடைபிடித்து பல வெற்றிகளைச் சாதித்த பெருமை சிவாஜியையே சேரும். சிவாஜியின் மகத்தான ஆளுமையே சாமானியர்களை அசாதரணமான செயல்களை ஆற்றுவதற்குத் தூண்டியது. மனிதர்களிடம் ஒளிந்திருக்கும் குணங்களை அடையாளம் கண்டு திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்கள் அற்புதங்களை சாதிக்கும்படி உற்சாகப்படுத்தும் உயர்ந்த தலைமை குணம் சக்கரவர்த்தி சிவாஜியிடம் இருந்தது.

ஒரு மனிதனிடம் எத்தனை திறமை இருக்குமோ அத்தனை கஷ்டங்களையும் அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த துன்பங்களைத் தோற்கடித்து வெல்பவனே சிறந்தவனாக வெளிவருவான். வெல்ல முடியாயாத கஷ்டங்களை வென்றதே சிவாஜியின் சிறப்புக்கு காரணம். கஷ்ட நஷ்டங்களைத் தாண்டி வெற்றியை நோக்கி நடத்துவிப்பவனே உண்மையான தலைவன்.

காலத்தின் மகிமையை அறிவது அசாத்தியமே…!

*குருக்ஷேத்திரப் போர் முடிந்த பின் திருதிராஷ்டிரருக்கும் காந்தாரிக்கும் நேர்ந்த துயரம்.

*இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கக் கூடிய ஸ்ரீ கிருஷ்ணர் தம்மவர்களைக் காப்பாற்ற இயலாமல் போனது. யாதவர்கள் அடித்துக் கொண்டபோது பார்த்தும் சும்மா இருந்தது.

*சமாதி நிலையில் இருந்த ஸ்ரீகிருஷணனின் பாதங்களைப் பார்த்து ஒரு வேடன் மானென்று எண்ணி அம்பு விட்டான். தவறையுணர்ந்த வேடனை ஸ்ரீகிருஷணர் சமாதனப்படுத்தி, பின் உயிர் துறந்தார்.

*வீரனான அர்ஜுனன் யாதவப் பெண்களை திருடர் கூட்டத்திடமிருந்து காப்பாற்ற இயலாமல் போனது… அவன் தன் தெய்வீக சக்திகளை எல்லாம் இழந்தது காலத்தின் கோலமே!
*அனைத்திற்கும் காலமே மூலம்.
-மகாபாரதம் மௌசல பர்வம்

சுபம்!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version