ஈ. சி. ஐ. எல். எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் ஆப் இன்டியா லிமிடெடின் தந்தையாகவும் ஸ்தாபகராகவும் முதல் மானேஜிங் டைரக்டராகவும் விளங்கிய பத்மபூஷன் டாக்டர் எ. எஸ். ராவ் அவர்கள் மின்னணு தயாரிப்புகளிலும் அணு விஞ்ஞானத்திலும் தற்சார்பு கொள்கையை நிலைநாட்டி பாரத நாட்டைப் பெருமையுறச் செய்த அணு விஞ்ஞானி.

இவர் இந்தியாவின் இன்ஸ்ட்ருமென்டேஷன் தொழில் நுட்பத்தை உலகளாவிய உயர்வுக்கு கொண்டு வந்த பெருமை உடையவர். அத்துடன் இவருடைய முதல் வெற்றி இந்தியாவின் இளைய விஞ்ஞானிகளின் குழுவை முன்னின்று நடத்தி அப்சரா என்ற இந்தியாவின் மற்றும் ஆசியாவின் முதல் அணு சக்தி உலையை அமைத்ததாகும்.

அய்யகாரி சாம்பசிவராவ் என்னும் பெயர் கொண்ட டாக்டர். எ.எஸ்.ராவ். ஆந்திர பிரதேஷ் மேற்கு கோதாவரி மாவட்டம் மோகல்லு என்ற கிராமத்தில் 1914, செப்டம்பர் 20 அன்று ஒரு ஏழ்மையான அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தை வெங்கடாசலம். தாயார் சுந்தரம்மா. நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி.

மோகல்லுவில் ஆரம்பப்பள்ளிப் படிப்பும் தணுக்கு என்ற நகரில் உயர்நிலைப் பள்ளியும், விஜய நகரத்தில் இன்டர்மீடியட்டும் படித்தார்.

இளமையில் மிகவும் ஏழ்மை நிலையில் வாரத்தின் ஐந்து நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிற்குச் சென்று இரவு ஒரு வேளை மட்டும் அவர்கள் வீட்டின் மீந்துள்ள உணவைக் கேட்டு வாங்கி உண்டு தன் படிப்பைத் தொடர்ந்தார். அந்த இளம் மாணவப் பருவத்தில் வாரக் கடைசி நாட்கள் உணவு கிடைக்காததால் பசித்திருந்தார். சிக்கனமாக வாழ்ந்து மேல் படிப்பிற்கு சிறிது பணம் சேர்த்தார்.

காசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பி எஸ்ஸி. மற்றும் எம் எஸ்ஸி. பிசிக்ஸ் பயின்றார். அங்கேயே சில ஆண்டுகள் பிசிக்ஸ் பேராசிரியராக பணி புரிந்தார். அப்போது சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் வைஸ் சான்சிலராக இருந்தார். அவருடைய ஊக்கத்தால் டாடா ஸ்காலர்ஷிப் பெற்று 1946ல் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் எலெக்ட்ரிகல் இஞ்சினீரிங் மாஸ்டர் பட்டம் பெற்றார்.

இந்தியா திரும்பி வந்த பின் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸில் (IISC) வேலைக்குச் சேர்ந்து எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்னும் பிரிவை வரையறுத்து வளர்ப்பதில் முழுக் கவனம் செலுத்தினார். அங்குதான் அவர் தன் குருவாகப் போற்றிய ஹோமி ஜே பாபாவைவை சந்தித்தார். இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் ஹோமி ஜே பாபா

ஹோமி பாபா அவர்கள் எ.எஸ்.ராவை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசெர்ச் (TIFR) என்னும் அமைப்பில் பணியில் அமர்த்தினார். அங்கு மின்னணுக் கருவிகள் உற்பத்தியில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டார். அங்கு காஸ்மிக் கிரணங்கள் மீது நடத்திய ஆய்வுகளில் எ.எஸ்.ராவ் மிகப் பெறும் வெற்றி பெற்றார்.

1953ல் டிராம்பே அணு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்த போது இந்தியாவின் சொந்தமான அணுமின் உலையை வடிவமைத்து வளர்த்தெடுக்கும் பணியை ஹோமி பாபா அவர்கள் எ.எஸ்.ராவ் அவர்களிடம் ஒப்படைத்தார்.

எ எஸ் ராவ், ஸெல்ப் ரிலையன்ஸ் என்னும் தற்சார்பு கொள்கையை தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார். மற்ற விஞ்ஞானிகள் அவருடைய இந்த கொள்கையை ஏற்க மறுத்தார்கள். பலரும் எ.எஸ்.ராவ். அவர்களை அதிக ஆசைப்படுபவராகவும் மனவெழுச்சி கொண்டவராகவும் எள்ளி நகையாடினர். மின்னணுக் கொள்கையில் உலகெங்குமுள்ள வெளிநாட்டு விஞானிகளை நம் நாட்டுக்கு வரவழைத்து அவர்களின் அறிவுரையையும் உதவியையும் பெற்றாலொழிய நியூக்ளியர் பவர் என்பது நம் தேசத்திற்கு வாய்ப்பில்லை என்ற கருத்து அதுவரை கடைபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவருடைய நம்பிக்கை பொய்க்கவில்லை.

ஆசியா கண்டத்திலேயே முதல் முறையாக பாரத தேசம் தயாரித்த அணு ரியாக்டர் “அப்சர” வுக்குத் தேவையான கண்ட்ரோல் மானிடரின் பாகங்களையும் கருவிகளையும் தயாரித்தார். அதன் மூலம் தற்சார்பு எனப்படும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் அறிவும் செயல் திறனும் உள்ளது என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளிடமும் அரசிடமும் உண்டானது. 1956ல் வேலை செய்யத் தொடங்கிய இந்த அணு சக்தி உலைக்கு அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘அப்சரா’ என்று பெயரிட்டார்.

இது சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த சாதனையாக விளங்கியது. அதன் பிறகு இந்தியாவின் பல இடங்களில் அணுசக்தி தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி உலைகள் ஏற்படுத்தப்பட்டன. அணுசக்தியை பல வித சாதகமான வழிகளில் பயன்படுத்துவதற்கு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் உயர்தர ஆராய்ச்சிக்காக உருவாகியவை.

அணு சக்தி கேந்திரத்தில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், சூரி பகவந்தம் போன்ற புகழ்பெற்ற விஞானிகளோடு சேர்ந்து பணியாற்றினார் எ எஸ் ராவ். இந்நால்வரும் சேர்ந்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் கமிட்டியை அமைத்தார்கள். இது பாபா கமிட்டி என்றழைக்கப்பட்டது. இது இந்தியாவின் தொழில் அபிவிருத்திக்கு அணு விஞ்ஞானப் புரட்சி எவ்வாறு உபயோகப்படும் என்று ஒரு முழுமையான அறிக்கையையும் தேவையான அறிவுரைகளையும் வெளியிட்டது. பாபா கமிட்டியின் இந்த அறிக்கை இந்தியாவின் அணு விஞ்ஞான முன்னேற்றத்திற்கு முன்மாதிரியாக அமைந்தது.

பி எஆர் சி (BARC) எலெட்ரானிக்ஸ் குழுவின் டைரக்டராக எ.எஸ்.ராவ். பணியாற்றிய போது பாதுகாப்பு மற்றும் பொறியியல் துறைகளின் முன்னேற்றத்திற்காக பல பரிசோதனைகளை மேற்கொண்டார். டிபென்ஸ் மற்றும் அணுசக்தித் துறைகளில் மின்னணு எனப்படும் எலக்ட்ரானிக்ஸின் முழுமையான உதவி தேவையாயிருந்த காலம் அது.

சாம்பசிவ ராவ் இளைய தலைமுறை விஞ்ஞானிகளையும் பொறியியல் வல்லுனர்களையும் தம்மோடு இணைத்துக் கொண்டு அவர்களின் அளவற்ற சக்தி சாமர்த்தியங்களை வெளிக் கொணர்ந்து அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். இவ்வெற்றி எ எஸ் ராவ் அவர்களின் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

பாபா கமிட்டி அறிக்கையின் பலனாக இந்திய அரசு ஈ.சி.ஐ.எல். எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற ஸ்தாபனத்தை 1967 ஏப்ரல் 11ல் ஹைதராபாத்தில் ஏற்படுத்தியது. இதற்கு சேர்மேனாக விக்ரம் சாராபாய் விளங்கினார்.

எ. எஸ். ராவ். இதன் முதல் மேனேஜிங் டைரக்டராக விளங்கினார். (BARC) பார்க்கிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஹைதராபாதிற்கு மாற்ற வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு ஆரம்பத்தில் மும்பையில் பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. எ. எஸ்.ராவ். எத்தனை எளிமையானவரோ அத்தனை உறுதியானார்.

பல தடைகளையும் வெற்றி கண்டு எ.எஸ்.ராவ் அவர்கள் ஹைதராபாதில் முதலில் 1967ல் சனத்நகர் என்ற இடத்தில் தொழிற்சாலையையும், பஷீர்பாக் என்ற இடத்தில் நிர்வாக அலுவலகத்தையும், பஞ்சகுட்டாவில் தொழிலாளர்களுக்கான வாடகை குடியிருப்புகளையும் அமைத்துக் கொடுத்தார். பின்னர் 1969 ஏப்ரலில் குஷைகுடாவில் சொந்தமாக கட்டடம் கட்டப்பட்டு ஈ.சி.ஐ.எல் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. எ.எஸ்.ராவ் முதல் பத்தாண்டுகள் ஈ. சி. ஐ. எல் ஸ்தாபனத்திற்கு ஒரு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து உற்பத்தி திறனையும் வணிக மேம்பாட்டையும் வேலை வாய்ப்பு வசதிகளையும் சிறப்பாக வளர்த்துதவினார்.

தொடக்கத்தில் 928 உத்தியோகிகளுடன் ஆரம்பித்த ஈ.சி.ஐ.எல், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் திறமையானவர்களைத் தேடித் பெற்று ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்சார்புக் கொள்கையை திடமாகக் கடைபிடித்த எ.எஸ்.ராவ் அவர்கள் முழுமையாக நம் நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட மின்னணுப் பொருட்களால் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகளையும், கம்ப்யூடர்களையும் ஈ.சி.ஐ.எல்.லில் தயாரித்து நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தார்.

போக்குவரத்து, மருத்துவமனை, பாதுகாப்பு, விண்வெளி போன்ற பல்வேறு துறைகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து அளிப்பதில் முதன்மை இடத்தை வகிக்கிறது இந்நிறுவனம்.

இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றத்திற்குத் தன் அயராத உழைப்பை நலிகிப் பெரும் புகழ் சேர்த்தவர் டாகடர் எ.எஸ்.ராவ் அவர்கள். அணுசக்திப் பயன்பாடு பற்றிய உலகளாவிய பாதுகாப்பு சபைகள் பலவற்றிலும் பாரத நாட்டின் பிரதிநிதியாகப் பங்கு கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். அகில உலக சைன்ஸ் ஜர்னல் போன்ற பல அறிவியல் இதழ்களின் ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

1960ல் பத்மஸ்ரீ விருதும், 1972ல் பத்ம பூஷன் விருதும் அளித்து இந்திய அரசாங்கம் தன்னிகரில்லா விஞ்ஞானியான எ.எஸ்.ராவ் அவர்களை கௌரவித்துள்ளது. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 1965 லும், ஆந்திர பல்கலைக் கழகத்திலிருந்து கௌரவ டாக்டரேட் 1969 லும், டாக்டர் நாயுடம்மா நினைவு தங்கப் பதக்கம் 1989 லும், மேன் ஆப் தி செஞ்சுரி இன் இந்தியன் எலக்ட்ரானிஸ் விருது 2001 லும், இன்னும் இது போல் பலப்பல விருதுகள் இவரை வந்தடைந்து புகழ் பெற்றன. 2014ல் அவருடைய நூற்றாண்டு விழாவின் போது இந்திய அரசு சிறப்புத் தபால் கவர் வெளியிட்டு கௌரவித்துள்ளது.

அய்யகாரி சாம்பசிவ ராவ் 1938ல் அன்னபூர்ணாவை மணந்தார். இவர் உண்மையில் காசி அன்னபூரணியாகவே திகழ்ந்து ஏழை எளியவர்களின் பசியைப் போக்கி பெரும் சேவை செய்தார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மூன்று மகள்கள். அனைவரும் அமெரிக்காவில் டாக்டர்களாக உள்ளார்கள்.

எ எஸ் ராவ் ஒரு கர்ம யோகி, தீர்க்க தரிசி, விஞ்ஞானி. எல்லாவற்றையும் விட தூய மனிதாபிமானி. தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உயர்ந்த மனிதர். எ எஸ் ராவ், பதவி ஓய்வு பெற்ற பின் வெளி நாட்டில் வாழும் அவர் பிள்ளைகள் அழைத்தாலும் செல்ல மறுத்து இந்தியாவிலேயே வாழ்ந்தார்.

1980ல் ஈஸி. ஈஸி. ஹெச். சி. எஸ். லிமிடெட். என்ற சொசைட்டி ஏற்படுத்தி சுமார் நூற்றி இருபது ஏக்கரில் ஈ.சி.ஐ.எல். உத்தியோகிகளுக்கு வசிக்கும் காலனி ஏற்படுத்திக் கொடுத்தார். உத்தியோகிகளின் பிள்ளைகள் படிப்பதற்கு டி.எ.இ. பள்ளிகளை ஏற்படுத்தினார்.

அவருடைய பிறந்த நாள் விழாவில் அவருக்கும் இதில் ஒரு பிளாட் அளித்த போது ஏற்க மறுத்து விட்டார். அவர் பெயரை இந்த காலனிக்கு வைப்பதற்கு அவர் ஒத்துக் கொள்ளவேயில்லை. தன் குருவான ஹோமி பாபா அல்லது டாக்டர் சாராபாய் பெயர் பொருத்தமாக இருக்குமென்றார். பல முறை மன்றாடிய பின் வேறு வழியின்றி உங்களிஷ்டம் என்றார்.

இவர் பெயரைக் கொண்ட இந்த காலனி மிக விரைவாக வளர்ந்து வருகிறது. காப்ரா என்ற ஏரியாவிலேயே மிகப் பெரிய காலனியாக ஈ.சி. ஐ.எல். காப்ரா ரோடு முதல் சைனிக்புரி வரை எ.எஸ்.ராவ். நகரே கேர் ஆப் அட்ரஸாக விளங்குவது இதன் புகழுக்கு அடையாளம். இந்த காலனியில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குழந்தைகள் மிகச் சிறப்பான கல்வி அறிவு பெற்று வெளிநாடுகளில் நம் தேசம் கர்வப்படும் விதத்தில் வாழ்ந்து வருவது கண் கூடு.

மிகப் பலம் பொருந்திய அணு சக்தியைப் பற்றி ஆராய்ந்த எ.எஸ்.ராவ் என்ற இந்த விஞ்ஞானி சுபாவத்தில் மிகவும் அமைதியும் எளிமையும் நிறைந்தவர். எம்.டி. யாக இருந்த போதும் பல முறை அரசுப் பேருந்தில் கூட்டத்தில் நின்று கொண்டு பயணித்ததை பலரும் பார்த்துள்ளோம். அலுவலக வாகனத்தை சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தாத நேர்மை உள்ளம் கொண்டவர்.

மத்திய தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். சாமானிய மக்கள் வசிக்கும் கிராமங்களில் கழிவறைகளைக் கட்டிக் கொடுப்பதற்கு சிறப்பான முயற்சி மேற்கொண்டு அவற்றை சாதித்துக் காட்டினார்.

பால விகாஸ் பள்ளிக்கு அவர் கரங்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. தற்போது அதில் டாக்டர் எ.எஸ்.ராவ் அவார்டு கௌஸில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு அறிவியல் திறனாய்வுத் தேர்வுகள் மாநில அளவில் நடத்தப் பட்டு பரிசளிக்கப்படுகிறது. டாக்டர் எ.எஸ்.ராவ் 2003, அக்டோபர் 31ல் இயற்கை எய்தினார்.

ஈ.சி.ஐ.எல் அலுவலக நுழைவாயிலிலும், எ.எஸ்.ராவ் நகர் காலனியிலும் இவருக்கு சிலை வைத்து கௌரவித்துள்ளார்கள்.  இவர் பெயர் கொண்ட காலனியில் வசிப்பதில் பெருமை கொள்ளும் நாங்கள் எ.எஸ். ராவ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் சிறப்பான சபைகளை ஏற்பாடு செய்தும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் அவர் நினைவைக் கொண்டாடி வருகிறோம். இந்த காலனியின் கம்யூனிடி ஹாலுக்கு ஹோமி பாபாவின் பெயரிடப்பட்டுள்ளது.

கட்டுரை: ராஜி ரகுநாதன் (ஹைதராபாத்)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...