“மாரியம்மனுக்கு படையல் போடு!” ( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)

“மாரியம்மனுக்கு படையல் போடு!”

( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)

(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

“உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு, இவனுக்கு, குண்டோதரன் மாதிரி, எத்தனை சாப்பிட்டாலும்,’இன்னும் பசிக்கிறது’ என்கிறான். இவனுக்கு சாதம் போட்டு கட்டுப்படியாகவில்லை. வீட்டில் எப்போதும் ஒரு கற்சட்டி சாதம் தயாராய் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கு.

பெரியவா பரமேசுவரன் மாதிரி. இந்தக் குண்டோதரன் பசியை தீர்த்து வைக்கணும்…” என்று, நீண்ட பிரார்த்தனையுடன் பெரியவர் பாதங்களில் விழுந்தாள், ஓர் அம்மாள்.

கிராமம்தான் என்றாலும், மற்ற பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவா,அடுத்த பக்தரிடம் குசலப்பிரச்னம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் குண்டோதரனின் தாயார் சற்று நகர்ந்து நின்றாளே தவிர பெரியவாளிடமிருந்து பிரசாதம் வாங்கிக் கொள்ளாமல் போவதாக இல்லை!

சற்றைக்கெல்லாம் பெரியவா அந்த அம்மையாரை அழைத்தார்கள்.

“உங்க கிராமத்திலே மாரியம்மன் கோயில் இருக்கோ?”

“அம்பாளுக்கு பால் பல்லயம், தயிர் பல்லயம், சர்க்கரைப் பொங்கல் பல்லயம் (பல்லயம்-படையல்) போட்டு நைவேத்தியம் செய்.நெறைய பழங்கள், வெற்றிலைப் பாக்கு படைக்கணும்.

“பல்லயம் போட்ட அந்த அன்னங்களை எடுத்துச் சாப்பிடும்படி பையனிடம் சொல்லு..”

அம்மாளுக்கு ரொம்ப திருப்தி.பல்லயம் போடுவது என்றால், சமைத்த உணவுப் பண்டங்களை சுவாமி எதிரில் இலை போட்டு பறிமாறிவிடுவது என்று தெரிந்துகொண்டாள்.

மாரியம்மன் கோயிலில் அவ்வாறே செய்தாள். அம்பாளுக்கு நைவேத்தியம் ஆனபின்,பையனைக் கூப்பிட்டு, “எல்லா இலையிலேர்ந்தும் உனக்கு வேண்டிய அளவு எடுத்துச் சாப்பிடு” என்றாள்.

இலைகளின் அருகில் சென்று நோட்டமிட்ட பையன் அலறிப் புடைத்துக்கொண்டு, “எனக்கு சாதம் வேண்டாம், வேண்டவே வேண்டாம்” என்று கூச்சலிட்டுக் கொண்டு வீட்டுக்கு ஓடிப் போய்விட்டான்.

அம்மா வீட்டுக்கு திரும்பி வந்தாள். “ஏண்டா பிரசாதம் சாப்பிடலே?”

“பிரசாதமா, அது?…ரத்தமும் மாமிசமுமான்னா இருந்தது..” என்றான் நெஞ்சு படபடக்க.

பின்னர்,அளவாக மோர் சாதம் மட்டும் சாப்பிட்டான். அன்றைய தினம் முழுவதும் வேறு ஆகாரமே கேட்கவில்லை.

மறுநாள் காலை பையனுடன் வந்தாள் அம்மையார். நடந்ததையெல்லாம் சொன்னாள்
.

பெரியவா சொன்னார்கள்.

“அவனோட துணிமணி, புஸ்தகம் – நோட்டு, பேனா – பென்சில், படுக்கை – தலைகாணி எல்லாத்தையும் ஊருக்கு வெளியே தூக்கிப் போட்டுவிடு

“அவனுக்கு மங்கள்ஸ்நானம் செய்வித்து புது டிரஸ் போடு, மாரியம்மன் கோயில்லே அர்ச்சனை பண்ணு. அப்புறமா ஆகாரம் கொடு..”

பிள்ளையாண்டான், சமர்த்தாய் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு வந்தான்.

எல்லாக் குழந்தைகளைப் போல் சாப்பிடத் தொடங்கினான் பசி,பசி என்ற நச்சரிப்பு இல்லை.

அன்று மாலையில், பையனை அழைத்துக்கொண்டு தரிசனத்துக்கு வந்தாள்,அம்மையார். பெரியவா விபூதிப் பிரசாதம் கொடுத்தார்கள்.

“கூடிய சீக்கிரம், பையனுக்கு உபநயனம் செய்துடு..”

“சரி”என்று ஏற்றுக்கொண்டார், அம்மையார்.

இதில்,யாருக்கும் விளங்காத புதிர் என்னவென்றால்,

பையனுக்கு பசியை உண்டாக்கியது எது? துர்தேவதை என்றால், அது என்ன? பல்லயம் போட்ட பிரசாதங்கள் அவனுக்கு மட்டும் வித்தியாசமாகத் தெரிவானேன்? அவன் உபயோகித்த பொருள்களையெல்லாம் வெளியே போட்டுவிடச் சொல்வானேன்?

ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...