- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் வாய்ப்பினை பயன்படுத்துபவன் முன்னேறுகிறான்!

வாய்ப்பினை பயன்படுத்துபவன் முன்னேறுகிறான்!

வெற்றிக்கு வழி! – ஒரு மகாபாரதக் கதை

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள், எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது. மகாபாரதம் இது குறித்து அற்புதமாக விளக்கியிருக்கிறது!

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது.

ஒருநாள், பீஷ்மரிடம் வந்தவன், ‘தாத்தா! வில் வித்தை கற்றுத் தரும் துரோணர், அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள்…’ என்று வற்புறுத்தினான்.

வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர், தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார்.

உடனே துரோணர், ‘பிதாமகரே! நாளைய தலைமுறை இடையே எந்த வேறுபாடும் காட்டுவதில்லை! அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்ன தான் மழை பெய்தாலும் பாத்திரத்துக்கு தக்க படிதானே நீர் நிரம்பும்! அதற்காக மழையை குற்றம் சாட்ட முடியாதுதானே?! எனினும் தாங்களே வந்து கேட்டதற்கு நன்றி’ என்றவர், பீஷ்மரை நீராட அழைத்துச் சென்றார்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

துரோணரும் பீஷ்மரும் முன்னே நடக்க… பாண்டவர்களும் கௌரவர்களும் பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும், ‘அர்ஜுனா! எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றிருக்கிறேன் ஆஸ்ரமம் சென்று எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்து வா!’ என்றார் துரோணர் அர்ஜுனன் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான்.

இதையடுத்து அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர் வழியில் பெரிய ஆலமரம் ஒன்று! அதன் நிழலில் பீஷ்மருடன் சென்று அமர்ந்தார் துரோணர்.

‘இன்று புதிய பாடத்தை சொல்லிக் கொடுக்கப் போகிறேன்’ என்றவர், மந்திரம் ஒன்றை தரையில் எழுதினார்.

பிறகு, ‘இந்த மந்திரத்தைச் சொல்லி, மரத்தின் மீது அம்பு எய்தினால், அந்த அம்பானது, மரத்தின் எல்லா இலைகளிலும் துளையிடும்!’ என்றவர், துரியோதனனை அழைத்து இந்த வித்தையை செய்து காட்டுமாறு பணித்தார். துரியோதனன் எழுந்தான்; தரையில் இருந்த மந்திரத்தைப் படித்தான்; மரத்தை நோக்கி அம்பு தொடுத்தான்; மரத்தில் இருந்த எல்லா இலைகளிலும் துவாரம் விழுந்தது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். துரியோதனன் கர்வத்துடன் வந்து அமர்ந்தான். பீஷ்மர் சந்தோஷப்பட்டார். இதையடுத்து, ‘சரி… நீராடச் செல்வோம் வாருங்கள்’ என்று கிளம்பினார் துரோணர்.

அர்ஜுனனும் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தான். அனைவரும் நதியில் நீராடினர். பிறகு அங்கிருந்து கிளம்பியவர்கள், மீண்டும் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தனர். அப்போது, நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள் காரணம்… மரத்தின் எல்லா இலைகளிலும் இரண்டாவதாக துளை இருந்தது பீஷ்மருக்கு குழப்பம்!

ALSO READ:  கண் துடைப்பு நாடகம் இல்லாமல், உண்மையாக வசதி செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

‘துரோணரே, நீராடச் செல்லும்போது, துரியோதனன் அம்பெய்தி, மர இலைகளில் துளையை உண்டாக்கினான். நீராடிவிட்டு வந்தால்… எல்லா இலைகளிலும் இன்னொரு துளை இருக்கிறதே… எப்படி?’ என்றார் வியப்புடன்.

உடனே மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர், ‘இது யார் செய்த வேலை?’ என்று கேட்டார்.

‘அடியேன்!’ என்று வணங்கி நின்றான் அர்ஜுனன்.

பீஷ்மர் திகைத்தார் அர்ஜுனனிடம், ‘இந்த வித்தையை துரோணர் கற்றுக் கொடுக்கும் போது நீ இங்கு இல்லை பிறகெப்படி…?’ என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டார்.

‘தாத்தா! எண்ணெய்ப் பாத்திரத்துடன் திரும்பும் போது, இந்த மரத்தடியில் காலடிச் சுவடுகள் தவிர, தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும் கண்டேன். எதற்காக இந்த மந்திரம் என்று யோசித்த வேளையில், மரத்தின் இலைகளில் இருந்த துளையை கவனித்தேன். இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று யூகித்தேன். மந்திரத்தை உச்சரித்து அஸ்திரம் தொடுத்தேன். என் யூகம் பொய்க்கவில்லை; எனது அஸ்திரம் எல்லா இலைகளையும் துளைத்தது!’ என விவரித்தான் அர்ஜுனன்.

அவனைக் கட்டியணைத்துக் கொண்டார் பீஷ்மர். துரியோதனனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை ‘ப்பூ… இதென்ன சாதனை?’ என்று கேலி செய்தான்.

ALSO READ:  அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!

இதைக் கண்ட துரோணர், ‘துரியோதனா! எங்கே… மீண்டும் அம்பு எய்தி, இலைகளில் துளை உண்டாக்கு!’ என்றார் சிரித்தபடி.

துரியோதனன், மந்திரம் எழுதியிருந்த இடத்துக்கு வந்தான் அங்கே… மந்திரம் இல்லை; அழிக்கப்பட்டிருந்தது அதிர்ந்து போனான்.

‘தரையில் எழுதப்பட்டிருக்கும் மந்திரத்தை எவரேனும் மிதித்துவிடக் கூடாதே என்று நான்தான் அழித்து விட்டேன்’ – பவ்வியமாகச் சொன்னான் அர்ஜுனன்.

மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன். ‘பீஷ்மரே! இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா?’ என்று கேட்டார் துரோணர்.

பிறகு மாணவர்கள் பக்கம் திரும்பியவர், ‘சீடர்களே! சிந்தனையை சிதறவிடக் கூடாது. ஆத்திரம், அவசரம், கோபம் முதலான தீய குணங்களுக்கு மனதில் இடம் தரவே கூடாது. எதிலும் அலட்சியம் கூடாது. கூர்ந்து கவனிக்க வேண்டும். பயிற்சியில் ஆர்வமும், நம்மால் முடியும் என்று முயற்சியில் நம்பிக்கையும் இருந்தால், வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறான் அர்ஜுனன்’ என்றார்! அர்ஜுனனை எல்லோரும் பாராட்டினர்.

சிந்தனையை சிதற விடாமல் நாமும் கூட நல்ல விஷயங்களில் கவனத்தை செலுத்துவோம். ஆத்திரம், அவசரம், கோபம் முதலான தீய குணங்களை வேரறுப்போம். அதன் மூலம் பிறவிப் பயனை கண்டு அடைந்து தெளிவாவோம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version