தியானம், தவம், வைராக்கியம்… தனக்காக வாழாத தயாளன்!
(
‘இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்’-
ஆஸ்திரேலியா பெண்மணி)
நன்றி-விகடன்.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண்மணி இந்திய ஞானிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைத் தரிசிக்க இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவில் துறவிகள் எல்லாம் அவர் படித்த, கேள்விப்பட்ட செய்திகளில் காணப்பட்டதுபோல இல்லை என்று அவருக்குத் தோன்றியது. பெரும்பாலான துறவிகள், ஆடம்பரமாக இருந்தார்கள். அவர்களைத் தரிசிக்க மிகவும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் தோற்றத்திலிருந்து உபதேசம் வரை அனைத்தும் கொஞ்சம் மிகையாக இருப்பதாக அவர் நினைத்தார். இந்த வருத்தத்தை தனக்கு அறிமுகமாயிருந்த தென்னிந்திய நண்பரோடு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், ஒருமுறை காலடி சென்று வாருங்களேன் என்றார். பெரியவா அப்போது காலடியில்தான் இருந்தார்.
அடுத்த இரு நாள்களில், அவரது விசா முடிவடைகிறது. ஒரே நாளில் சென்று தரிசனம் கிடைக்காமல் திரும்பினால், அனைத்தும் வீணாகும் என்ற கவலை. ஆனாலும் மனம் காலடியை நோக்கியே சிந்தித்திருக்கவும், அந்தப் பெண்மணி காலடி நோக்கி விரைந்தார். அங்கிருந்த மடத்தின் அதிகாரிகளிடம் தன்னைப் பற்றிச் சொல்லி பெரியவாவின் தரிசனம் இன்றே கிடைக்குமா என்று கேட்டார். அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தனர்,
பெரியவா தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தபோது அந்த அம்மையார் அவரைத் தரிசித்தார். பெரியவா காஷாயமும் கையில் தண்டமும், கமண்டலமும் சுமந்தபடி நின்று தரிசனம் கொடுத்தார். அந்தப் பெண்மணிக்கு அந்தத் தரிசனம் மனம் நிறைவைத் தந்தது. எளிமையே உருவாகத் திகழ்ந்த பெரியவாவின் தரிசனத்தைக் கண்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தபடி இருந்தது.
பெரியவா, அவருக்கு ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகத் தந்து ஆசி வழங்கினார்
. ‘இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்’ என்று அந்தப் பெண் தன் நண்பரிடம் தெரிவித்துச் சென்றாராம்.