November 30, 2021, 8:48 am
More

  பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா

  “சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?” –பாட்டி

  (பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா)

  நன்றி- குமுதம் லைஃப்
  தொகுப்பு-கே.ஆர்.எஸ்.
  தட்டச்சு-வரகூரான் நாராயணன்

  ஒரு சமயம்,மகாபெரியவாளோட அவதாரத் திருநட்சத்திர நாளான அனுஷ நட்சத்திர நாள்ல அவரை நிறையப்பேர் தரிசிக்க வந்திருந்தா .அந்தக் கூட்டத்துல வயசான பாட்டி ஒருத்தியும் இருந்தா.

  அவளைப் பார்த்ததும் சைகை காட்டி கூப்பிட்ட, பெரியவா,

  “எல்லாம் க்ஷேமமா நடக்கறதா? எப்படி இருக்கான் உன்னோட ஸ்வீகார புத்ரன்?” அப்படின்னு கேட்டார்.

  “மகாபெரியவா, உங்க ஆசிர்வாதத்துல எல்லாம் நல்லபடியா நடக்கறது. புத்ரன் ஒரு அக்கறையும் இல்லாம ஏதோ இருந்துண்டிருக்கான். குடியிருக்கற அகம்தான் முழுக்க பொத்தலாகி ஒழுகிண்டு இருக்கு.நீங்க அனுக்ரஹம் பண்ணி கொஞ்சம் சீர்படுத்திக் குடுக்கச் சொன்னா தேவலை!” பாட்டிசொன்ன பதிலைக் கேட்டதும் எல்லோருக்கும் அதிர்ச்சி.

  “என்ன இவ….வீடுபேறையே தரக்கூடிய ஆசார்யாகிட்டே, குடியிருக்கற வீடு ஒழுகறது,அதை சரிப்படுத்திக் குடுங்கோன்னு கேட்கறாளே!” ஆளாளுக்கு முணுமுணுக்க ஆரம்பிச்சா.

  அதையெல்லாம் லட்சியம் பண்ணாம, “இந்த க்ஷேத்ரத்துல மழையா? காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!” அப்படின்னு கேட்டுட்டு சிரிச்சார், மகாபெரியவா.

  “இல்லையே!, முந்தானேத்திக்குக் கூட பெய்ஞ்சுதே, அப்போதான் அகம் முழுக்க ஒழுகி எல்லாம் நனைஞ்சு ஈரமாயிடுத்து!” சொன்னாள் அந்த மூதாட்டி.

  “ஓ..அந்த சின்ன மழைக்கே ஒழுகிறதா? அப்படின்னா மாத்து ஏற்பாடு பண்ணிடறேன்!” -மகாபெரியவா.

  யாரா இருப்பா அந்தப் பாட்டின்னு யோசிச்சா,பலர். வழக்கமா வர்றவா சிலர் விவரம் சொல்ல ஆரம்பிச்சா சின்ன வயசுலயே வாழ்க்கையை இழந்துட்டவ அந்தப் பாட்டி.ஆத்துக்காரர் வழியில ஏகப்பட்ட சொத்து அவளுக்கு வந்தது.சின்னப் பொண்ணா அவ இருந்ததால பலரும்அவளை ஏமாத்தி அதையெல்லாம் பிடுங்கிக்கப் பார்த்தா. ஆனா, மகாபெரியவாமேல அபிமானம் உள்ள குடும்பத்துல வந்த அந்தப் பொண்ணு,சட்டுன்னு ,’எல்லா சொத்தும் காமாட்சிக்கே!” அப்படின்னு சொல்லிட்டா. பெரியவா எவ்வளவோ மறுத்தும்,சொன்ன வாக்கு சொன்னதுதான், தான் மடத்துல ஒரு ஓரமா தங்கிக்கறேன்னுட்டா.அப்புறம் பெரியவாதான் மடத்துக்கு சொந்தமான இடத்துல இருந்த ஒரு வீட்டை அவளுக்கு ஒதுக்கிக் குடுத்தார். சின்னப் பொண்ணா இருந்த அவ இன்னிக்கு இதோ இவ்வளவு கிழவியாயிட்டா.ஆனா மகாபெரியவாமேல அவளுக்கு இருக்கிற பக்தி மட்டும் குறையவே இல்லை!”

  பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கறதுக்காக நமஸ்காரம் பண்ணினா, பாட்டி.அந்த சமயத்துல அங்கே வந்தா சிலர்.

  ஒரு தாம்பாளத்துல சில பத்திரிகைகளை வைச்சு,”காமாக்ஷி அம்மன் கோயிலோட ப்ரம்மோத்ஸவப் பத்திரிகை!” அப்படின்னு பவ்யமா குடுத்தா.

  “கலெக்டருக்கு,அறங்காவலருக்கு எல்லாம் குடுத்துட்டு, கடேசியா போனா போறதுன்னு எனக்குத் தரவந்தேளாக்கும், இந்த மடத்துக்குன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு தெரியும் இல்லையா? மொதப் பத்திரிகையை எங்கே தரணும்கறதும் தெரிஞ்சிருக்குமே? எல்லா சம்ப்ரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்படி? போங்கோ..போயிட்டு இங்கே எந்த முறைப்படி வரணுமோ அப்படி வாங்கோ!”

  மகாபெரியவா சீற்றத்தைப் பார்த்து நடுங்கிப்போனவா அப்படியே திரும்பினா.

  அவாள்ல ஒருத்தரைப்பார்த்து சொடக்குப் போட்டு கூப்பிட்ட பெரியவா, “ஆமா, வடக்கு சன்னிதியில நீ குடியிருக்கற அகத்துக்குப் பக்கத்துல இன்னும் ரெண்டு அகம் இருக்கே, அங்கே யார் இருக்கா!” கேட்டார் பெரியவா.

  இரண்டு பேர் பெயரைச் சொன்னார் அவர். அவர்கள்ல ஒருத்தரோட பேரைச் சொன்ன பெரியவா, “அவர்தான் மேல போயிட்டாரே..அவரோட வாரிசுகளும் ஏதோ ஆபீசுல வேலை செஞ்சுண்டு இருக்கா மடத்துல வேலை செய்யறவாளுக்கு தானே நாம வீடு குடுக்கணும். அவா யாரும்தான் இங்கே வேலை செய்யலையே.அப்புறம் அவாளுக்கு ஏன் அந்த வீட்டை விட்டிருக்கேள்?” அவர்கள் திகைத்து நிற்க ஆசாரியார் தொடர்ந்து சொன்னார்.

  “ஒண்ணு பண்ணு.அவாளை அங்கேர்ந்து பொறப்படச் சொல்லிட்டு,இந்தப் பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்குப் போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ!”

  பெரியவா பேச்சுக்கு மறு பேச்சு ஏது? அப்படியே செஞ்சு முடிச்சா.இது நடந்து மூணு மாசத்துக்கு அப்புறம் ஒருநாள் காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டு, வடக்கு சன்னதி வழியா நடந்து வந்துண்டு இருந்த பெரியவா சட்டென்று ஒரு வீட்டின் முன்னால் நின்னார்.

  என்னவோ ஏதோன்னு எல்லாரும் குழம்ப,”ரெண்டு மூணு நாளா பாட்டி மடத்துக்கு வரக்காணோம் உள்ள போய்ப் பாரு ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ!” உடன் வந்த ஒரு பக்தர்கிட்டே உத்தரவிட்டார் மகாபெரியவா.

  பெரியவா உத்தரவுப்படி அந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்ச பக்தர் அப்படியே திகைச்சுட்டார். ஒரு குமுட்டி அடுப்பு, ரெண்டே ரெண்டு பாத்ரம் இதைத்தவிர எதுவுமே இல்லை வீட்டுல.அங்கே ஒரு மூலையில முடங்கிண்டு முனங்கிண்டு இருந்தா அந்தப் பாட்டி.அவளைப் பார்த்ததுமே காய்ச்சல்னு புரிஞ்சுடுத்து.மெதுவா அவ பக்கத்துல போய், பெரியவா வாசலில் நிற்கிற விஷயத்தை அந்த பக்தர் சொன்னதுதான் தாமதம்! அத்தனை அவஸ்தையையும் மறந்து சட்டுன்னு எழுந்து ஓடோடி வந்து மகாபெரியவா திருவடியில விழுந்தா.

  “சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?” அப்படின்னு சொல்லி பிரதட்சணம் பண்ணினா.

  வலம் வந்த வேகத்துலயே அந்தப் பாட்டியோட காய்ச்சல் குணமாகி அவ பூரண நலம் அடைஞ்சுட்டான்னு புரிஞ்சுது.

  பரமாசார்யாளே தேடிண்டு போய் பார்க்கறார்னா, அந்தப் பாட்டி எவ்வளவு பெரிய பாக்கியசாலின்னு அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-