To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் “நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?” -பெரியவா

“நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?” -பெரியவா

“நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?” -பெரியவா

(உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு  ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே… .  வாங்கித்தரியான்னு  இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!”-பக்தர்)( தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற  பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெரியவா)  

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயத்துல ஆந்திராவுல இருக்கிற சித்தூருக்கு ஒரு தரம் விஜயம் பண்ணியிருந்தார் பரமாசார்யா. அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினா.

அந்த சமயத்துல ஒரு பக்தர் மகாபெரியவாகிட்டே ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

“பெரியவா நமஸ்காரம். இந்த தேசத்துல பலப்பல க்ஷேத்ரங்கள், உங்களோட திருப்பாதம் பட்டுப் புனிதம் அடைஞ்சிருக்கு. அந்த பாக்யம் எங்க ஊருக்கும் கிடைக்கணும்னு ப்ரியப்படறோம். தயவு செஞ்சு எங்க ஊருக்கு ஒருதரம் நீங்க எழுந்தருளணும்!”

பக்தர் கேட்டதும் மென்மையா புன்னகைச்ச ஆசார்யா,  “ஒங்க ஊர் எது? அது எங்கே இருக்கு?” அப்படின்னு கேட்டார்.

பக்தர் சொன்ன ஊர், அந்த சமயத்துல ஆசார்யா தங்கியிருந்த  இடத்துலேர்ந்து மூணுமைல் தொலைவுல இருந்தது. அதை மகாபெரியவாகிட்டே சொன்னார்,அவர்.

“நீயே என்னை அழைச்சுண்டுபோறியா?”மகாபெரியவா  இப்படிக்   கேட்பார்னு எதிர்பார்க்காத பக்தர், சந்தோஷத்துல  திணறிப்போனார். அன்னிக்கு ராத்திரி அவரை அங்கேயே தங்கச் சொன்ன மகாபெரியவா, நாளைக்குக் கார்த்தால நித்யானுஷ்டானம் முடிஞ்சதும் புறப்படலாம்னுட்டார்.

சொன்னமாதிரியே மறுநாள் கார்த்தால பக்தர்கூட அவரோட ஊருக்குக் கிளம்பிவிட்டார், மகாபெரியவா. வழியில வெயில் அனலா கொளுத்தித்து.கொஞ்சம் கூட சலிச்சுக்காமலும்  ஒடம்பு வருத்தத்தை வெளியில காட்டிக்காமலும் நடந்தார் மகாபெரியவா.அந்த பக்தருக்கு தான்,தப்புப் பண்ணிட்டோமோ.. பெரியவாளை கஷ்டப்படுத்தறோமோ! என்றல்லாம் தோணித்து.

ஒரு வழியா ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும்,ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பூர்ணகும்பம் தந்து பரமாசார்யாளுக்கு வரவேற்பு குடுத்தா.”இங்கே நான் தங்கறதுக்கு எங்கே ஜாகை ஏற்பாடு செஞ்சிருக்கே?” என்று கேட்டார், மகாபெரியவா.  

பக்தர் ஒரு இடத்தைச் சொன்னார். அதைக் கேட்ட பரமாசார்யா, “அங்கே வேண்டாம். இங்கே பாதி கட்டிண்டு இருக்கற கட்டடம் ஒண்ணு இருக்கும் பார். அங்கே நான் தங்கிக்கறேன்” அப்படின்னார்.

பக்தருக்கும் அங்கே இருந்தவாளுக்கும் ஆச்சரியம்! ஊர்ல அந்த சமயத்துல ஒரே ஒருத்தர்தான் வீடு கட்டிண்டு இருந்தார். அது பரமாசார்யா வந்த வழியில் எங்கேயும் இல்லை.ஊர்ல  இன்னொரு கோடியில இருந்தது.அதை எப்படி மகாபெரியவா  தெரிஞ்சுண்டார்ங்கறது அவாளுக்கு வியப்பா இருந்தது. ஆனா, அதைவிடப் பெரிய ஆச்சரியம் ஒண்ணு மறுநாள் நடக்கப் போறதுங்கறது அவாளுக்குத் தெரியாது.

புதுசா கட்டிக் குடித்தனம் வராத அந்த அகத்துல மகாபெரியவர் தங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சா.அந்த வீட்டுக்கு சொந்தக்காரர், பரமாசார்யாமேல பரமபக்தி உள்ளவர். வயசு ரொம்ப   ஆயிட்டதால தரிசனத்துக்குப் போகமுடியலையே, ஆசார்யாளுக்கு எதுவும் கைங்கர்யம் பண்ண   முடியலையேன்னு ஏங்கிண்டு இருந்தார் அவர். இப்போ ஆசார்யாளே தன்னோட அகத்தைத் தேடிவந்து தங்கிக்கறதா சொன்னதும் அவருக்கு சந்தோஷம்  பிடிபடலை. ஒரு நாள் முழுக்க ஆசார்யா அங்கேயேதான் இருக்கப்போறார். பக்கத்துலயே இருந்து பார்த்துண்டே இருக்கலாம் . மனசெல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சு இருந்தது அவருக்கு.

அன்னிக்கு அங்கேயே தங்கி இருந்து எல்லாருக்கும் தரிசனம்  குடுத்தார், மகாபெரியவா. ஊர்க்காராள்லாம் மறுநாளும் அங்கே இருந்து அருளம்ணு ரொம்பவே வேண்டிண்டதால அங்கேயே தங்கினார்.

அடுத்த நாள் பொழுது விடியறதுக்கு முன்னாலயே யாரோ கிணத்துலேர்ந்து தண்ணீர் இறைச்சுண்டு இருக்கற சத்தம் கேட்டுது. அந்த இடத்தோட சொந்தக்காரருக்கு. இந்த நேரத்துல யாரா இருக்கும்னு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். மகாபெரியவாதான் எழுந்திருந்து தன்னோட மரச் செம்பால ஜலம் இறைச்சு ஸ்நானம் பண்ணிண்டு இருந்தார்.

அடடா…ஆசார்யா ப்ரம்ம முகூர்த்தத்துலயே  எழுந்துட்டார்ங்கறதை புரிஞ்சுண்டு அவசர அவசரமா அவருக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணலாம்னு நினைச்சுண்டு கிட்டே ஓடினார் அந்த பக்தர்.

அவரைப் பார்த்ததும்,”என்ன,நீயும் எழுந்துண்டுட்டியா? எனக்கு ஒத்தாசை பண்ணலாம்னு வந்தியாக்கும்.இந்த ஜலம் இறைக்கறதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இதோ இந்த   மரச்சொம்பைப் பார்த்தியா. ஒடைஞ்சு போய் கையெல்லாம் கிழிக்கறாப்புல இருக்கு. நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு   வாங்கித்தரியா?” ஆணை இடவேண்டிய ஆசார்யா,  செய்யறியான்னு கோரிக்கை மாதிரி கேட்டதும் அப்படியே குழைஞ்சுபோனார் அந்த பக்தர். அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.

“பகவானே உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே…. வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல  ஆழ்த்திட்டேளே..!” தழுதழுத்தார் பக்தர்.

கொஞ்ச நேரத்துல பொழுது நன்னா விடிஞ்சதும் திருப்பதிக்குஆள் அனுப்பி கொஞ்சமும் ஆசாரம் குறையாதபடிக்கு  மரச்சொம்பு, கமண்டலு, தண்டம் எல்லாம் வாங்கிண்டு வரச் சொன்னார், அந்த பக்தர்.மகாபெரியவாளோட அன்னிக்கு சாயங்கால அனுஷ்டானத்துக்கு அதையெல்லாம் அவர் முன்னால வைச்சு சமர்ப்பிச்சார்
.
“நன்னா வழவழப்பா இருக்கு. கையைக் கிழிக்காதபடிக்கு பார்த்து வாங்கிண்டு வந்து குடுத்திருக்கே. எல்லாரும் பரம சௌக்யமா இருக்கணும்!” ஆசிர்வதிச்ச ஆசார்யா, அன்னிக்கு  ராத்திரியே அங்கேர்ந்து புறப்பட்டு மடத்தோட ஜாகை இருந்த சித்தூருக்குப் போய்ட்டார்.

பக்தர் கூப்பிட்டதுமே அவரோட ஊருக்கு வரேன்னு பெரியவா ஒப்புத்துண்டதுக்குக் காரணம் அந்த பக்தர்மேல இருந்த அன்பு மட்டும் இல்லை .அங்கே தனக்குத் தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற இன்னொரு பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்க்கணும்கற கருணையும்தான்   அப்படிங்கறது அதன்பிறகுதான் புரிஞ்சுது எல்லாருக்கும்  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − six =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.