Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்: அர்த்தம் அறிவோம்.

ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்: அர்த்தம் அறிவோம்.

அம்பா சாம்பவி சந்த்ரமௌளி ரபலா அபர்ணா உமா பார்வதி
காலி ஹைமவதி சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
சாவித்ரி நவயௌவனா சுபகரி ஸாம்ராஜ்யலக்ஷ்மீ ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஶ்ரீராஜராஜேச்வரி”

ஶ்ரீராஜராஜேச்வரீ அஷ்டகம்

ஶ்ரீமத் சங்கராச்சார்ய விரசிதம்

“அம்பா — அணைத்துக் காப்பாற்றும் அன்னை வடிவானவள்.

சாம்பவி — ஶ்ரீசக்ரத்தின் ஒன்பதாவது ஆவரணமான ஸர்வானந்தமய மஹாபீடமாம் சாம்பவ பீடத்தில் உறைபவளதலால் இவள் “சாம்பவீ”.

சந்த்ரமௌலிரபலா — சிரஸின் முன்னுச்சியில் சந்த்ரகலையை சூடியவள்.

அபர்ணா — உலர்ந்த சருகுகளையும் உண்ணாமல் காமேச்வரனான பரமசிவனை அடைய உக்ரமான தவமியற்றியவள் அல்லது பக்தர்களிடத்து கடன்படாதவள்.

உமா — ஓங்காரத்தின் வடிவாகியவள். மேனையின் மகள். அகார உகார மகார வடிவான ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்திகளுக்கு அர்த்தமாத்ரையான பிந்துவின் வடிவில் உயிரளிப்பவள் உமை.

பார்வதி — மலையரசனான ஹிமவானின் மகள். பனி போர்த்திய வெண்மலையினால் தாமஸம் பொசுங்க, சிதக்கினி குண்டத்தில் ஆவிர்பவித்தது போன்று ஸத்வ குணவடிவான இமயபர்வதராஜனிடத்து தோன்றிய பரஞான வடிவானவள். ஆதலின் இவள் “பார்வதி”.

காலீ — சிவந்த ஞானத்தின் நெருக்கம் மேலும் அடர்த்தியாக சிவந்த த்ரிபுரஸுந்தரி கறுத்துக் காலியானாள். ஞானத்தின் அடர்த்தி கறுத்து ஏகமாம் அத்வைதமே ஸத்யம் என்பதைக் காட்ட மஹாகாலனையும் தனக்குள் ஒடுக்கிக்கொள்ளும் பரஞான வடிவினள். மஹாகாலி.

ஹைமவதி — கறுத்த மஹாகாலி ச்ருஷ்டியின் பொருட்டு வெளுத்து “ஹைமவதி” ஆனாள். “பஹுசோபமானாம் உமாம் ஹைமவதீம்!!” இது வேதம்!! உலகை ச்ருஷ்ட்டிக்கும் இச்சையுடன் ஞானஸாகரத்தில் வெளிப்பட்டு நின்ற பராசக்தியே ஹைமவதி.

சிவா — ரூபமில்லாத லலிதா பராபட்டாரிகை “ஶ்ரீசக்ர நகர ஸாம்ராஞ்ஞி” என வடிவங்கொண்டு பின் தன்னுருவை இரண்டாய் பிரித்து தானே “சிவனாக”, “சிவையாக” ஆனாள். சிவனுக்கு பத்னியாக “சிவையாக” ஶ்ரீத்ரிபுரஸுந்தரி விளங்கும் கோலம்.

த்ரிநயனீ — சந்த்ர சூர்ய அக்னிகளை மூன்று கண்களாய்க் கொண்டு ப்ர்ஹ்மா, விஷ்ணு, ருத்ரன் எனும் த்ரிமூர்த்திகளை ச்ருஷ்ட்டித்தாள் ஶ்ரீத்ரிபுரஸுந்தரி. அத்தகைய வடிவே “த்ரிநயனா”.

காத்யாயனி — மஹிஷாஸுரனின் அட்டஹாஸத்தை பொறுக்க முடியாத தேவர்கள் பத்ரிகாச்ரமத்தில் ஒளிரும் ஶ்ரீகாத்யாயன மஹருஷியை சரணம் அடைய ஶ்ரீபராசக்தி அவர்க்கு ஏற்கனவே அளித்த வரத்தின்படி காத்யாயனருக்கு பெண்ணாக “காத்யாயனீ” எனும் வடிவில் தோன்றி மஹிஷனை வதைத்தாள். ஸ்காந்த மஹாபுராணம்.

பைரவீ — ஶ்ரீயந்த்ரத்திலே ஶ்ரீமஹாஷோடஸி உபாஸகர்கள் பத்தாவது ஆவரணத்தில் பிந்துவிற்கு மேலுள்ள மஹாபிந்து ஸ்தானத்தில் “ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகா” எனவும், ஒன்பதாவது ஆவரண பிந்துவில் “ஶ்ரீமஹாத்ரிபுரபைரவீ” எனவும் பூஜிக்கும் வழக்கம் உண்டு. அத்தகைய மஹாத்ரிபுரபைரவி எனும் வடிவிலே ஜ்வலிப்பவள் பராசக்தியான லலிதை.

ஸாவித்ரி — ஸந்த்யோபாஸனையிலே “த்தஸவிதுர்” எனும் ஸாவித்ரி மஹாமந்த்ரத்தாலே உபாஸிக்கப்படும் ப்ரஹ்ம மூர்த்தம். ஸாவித்ரி அல்லது காயத்ரி எனும் மஹாமந்த்ரத்திற்கு அதிதேவதை ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரியே என்பதற்கு ப்ரமாணம் “த்ரிபுராதாபினி உபநிஷத்” மற்றும் “ஶ்ரீதேவீ மஹாபாகவதம்” ஆகியவற்றில் காணலாம். த்விஜர்கள் அனைவரும் இயல்பில் சாக்தர்களே. காயத்ரி ஸாக்ஷாத் புவனேச்வரியே என்பது ப்ராபல்ய தேவீ பாகவத வசனம்.

நவயௌவனா — என்றும் புதிய யௌவன பருவத்தோடே விளங்குபவள் ஶ்ரீத்ரிபுரஸுந்தரி. ஆதலின் இவள் “ஷோடஷீ”. பதினாறே வயதானவள். பதினாறு எழுத்துக்களையே தன்னுருவாய் உடையவள்.

சுபகரி — என்றும் மங்களத்தையே வழங்குபவள். மங்களமே வடிவான பராசக்தி. மோக்ஷத்தினை வழங்கும் ஶ்ரீபீடமான ஸர்வாநந்தத்திலே உறைபவள்.

ஸாம்ராஜ்யலக்ஷ்மி ப்ரதா — மனு முதற்கொண்ட பதிவிகளை நொடியில் வழங்குபவள். பதிமூன்று மந்வந்த்ராதிபதிகளும் ஶ்ரீபுவனேச்வரீ அம்பாளை ஶ்ரீவித்யோபாஸனையினால் மகிழ்வுறச்செய்து அப்பதவிகளை பெற்ற சரித்ரம் ஶ்ரீமத் தேவீ பாகவத மஹாபுராணத்தில் காண்க!! மேலும் அன்ய தேவதைகளைப் போல ஸாலோக்யம் முதலிய கீழான முக்திகளை ப்ரதானமாய் அளிக்காது “கைவல்யமான” மஹாமோக்ஷத்தையே தன் பக்தர்களுக்கு வழங்குபவள் ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரி.

சித்ரூபி — மற்ற தேவதைகளைப் போல சரீரம் இல்லாதவள். ஞானத்தையே தேகமாய் உடையவள். அக்ஷரங்களையே சரீரமாய் உடையவள். ஶ்ரீவித்யாம்ருதத்தின் வடிவானவள். ஞானத்தின் நெருக்கம் அடர்ந்து வெளுத்து “கௌரியாகவோ”, பச்சையாய் “பார்வதியாகவோ”, கறுத்துக் “காலியாகவோ” அல்லது சிவந்து “மஹாத்ரிபுரஸுந்தரியாகவோ” வடிவேற்று நிற்பவள். பார்வதி முதல் எவ்வடிவானாலும் ஞானமே சரீரமாய் உடையவள்.

பரதேவதா — தனக்கு மேல் ஒரு தேவதை இல்லாதவள் ஆதலின் இவள் “பரதேவதை!!”. தன் பீடத்திற்கு கால்களாகவும், பலகையாகவும் ஸதாசிவாதி பஞ்சப்ரஹ்மங்களையும் ஶ்ரீபரதேவதை. ஸகல தேவதா ஸமூஹங்களையும் அடக்கி ஆள்பவள்.

ஶ்ரீராஜராஜேச்வரி — அனேக கோடிக்கணக்கான ப்ரஹ்மாண்டங்களையும், அதில் விளங்கும் ப்ரஹ்மாக்களையும், விஷ்ணுக்களையும், ருத்ரர்களையும் ச்ருஷ்டித்து ஸம்ஹரித்து லீலா விநோதம் புரிபவள். கண் திறந்து மூடும் பொழுதில் கோடிக்கணக்கான ப்ரஹ்மாண்டங்களை உண்டாக்கி அழிப்பவள். தக்ஷிணகாலி முதற்கொண்ட தசமஹாவித்யா வடிவிலே வெளிப்படுபவள். ஸர்வமும் அடங்கும் ஏகமான “மஹாபூரண” வடிவானவள். உருவொன்றுமில்லாதவள். ஆயினும் இக்ஷுதண்டம், புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி மஹாகாமகலையாக கமலையாக காமாக்ஷியாக வெளிப்பட்ட ஶ்ரீராஜராஜேச்வரியானவள்.

அத்தகைய ஶ்ரீராஜராஜேச்வரியான சிவகாமஸுந்தரியைத் தவிர்த்து சரணமடைய வேறேது வஸ்து உண்டு!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version