― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்இத செஞ்சா எந்த பரிகாரமும் எதுக்கும் வேண்டாம்! ட்ரை பண்ணுங்க!

இத செஞ்சா எந்த பரிகாரமும் எதுக்கும் வேண்டாம்! ட்ரை பண்ணுங்க!

- Advertisement -

ஜோதிடர் சொன்ன “எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே..இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…”

பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.

பரிகாரம் தொடர்பான குட்டிக் கதை.

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.

நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி,வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து

“ஐயோ… அம்மா”என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே,யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதை உடைய சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்ல வில்லை. அறியாமல் நடந்த தவறு இது.

போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்….”

தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.

அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன். நான் தண்டிக்கப்பட வேண்டியவன்.பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.

இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.

அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்.”

என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்து போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?

மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில்சொல்வது செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்

“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள்.

நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?

“ஐய்யய்யோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக் கிறதேஎல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான்,

“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை.

நான் விரும்பியது எதுவோ அது கிடைத்து விட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக் கண்ணீர் விட்ட தோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.

அது ஒன்றே எனக்கு போதும். மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.

ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.

மன்னர் தான் செய்த தவறுக்கு மனப் பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந் தன்மையா…? இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.

இந்த கதை கூறும் நீதி.

அந்த மன்னன் தான் நாம்.

நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன்.

இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.

பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி, தங்க ஆபரணங் களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத் தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்,

ஆனால் ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது. ஆனால்இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,இறைவனிடம்…
(மனதுக்குள் வேறு எந்த சிந்தனையுமின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து,)

இறைவா….
அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஒரு முறை மன்னித்து விடு ! என உளமுருகி மன்றாடி கேளுங்கள்.

ஆண்டவன் முன் நீங்கள் கண்மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான். கருணை புரிவான். நீங்கள் இதை உணர்வு பூர்வமாக பெற்று விடுவீர்கள்.

இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும். ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.

ஆனால், நாம் என்ன நினைத்து இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கிறோம்,
அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.

நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.

நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் சரி…எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி செய்த பாவத்திற்கு மனம் திருந்தி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு பரிகாரம் என்பது கிடையாது.

” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர் கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம்.

தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற, சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார்.

வந்தவர்களுக்கோ வாழ்த்தி அனுப்புவார் என எண்ணி வந்தோம், இவரோ பாகற்காயை தருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என எண்ணி வாங்கிக் கொண்டு சென்றனர்.

புண்ணிய நீராடி சில நாட்கள் கழித்து சாதுவிடம் வந்து தாங்கள் கொடுத்த பாகற்காயை எல்லா புண்ணிய நதிகளில் நனைத்து எடுத்து வந்துள்ளோம்,

எங்களை போன்றே இந்த பாகற்காயும் மிகவும் புண்ணியம் படைத்தது என கூறினர்

சாதுவோ தனது சீடரை அழைத்து இந்த காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வா என கூற, அந்த பாகற்காய் துண்டுகளில் ஒன்றை சாது எடுத்துக் கொள்ள மீதியை மற்றவர்களிடம் நீட்ட அவர்களும் எடுத்து வாயில் போட்ட வேகத்தில் ஒரே கசப்பு என தரையில் துப்பினர்.

அப்போது சாது, புண்ணிய நதிகளில் நீராடிய பாகற்காயின் தன்மை எப்படி
மாறவில்லையோ அது போன்றது தான் உங்கள் புனித நீராடலும் “

மனம் வருந்தாமல், சிறு நெருடல், உறுத்தல் கூட இல்லாமல் செய்யும் எந்த பரிகாரமும் பாகற்காயை போன்றே தன்மை மாறாது.

அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு பாவத்திற்கு பிராயச்சித்த மாகத்தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்த கால முன்ஜென்ம தவறுக்கு வருந்தி கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில் தான் ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.

மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள் உடனடியாக பலன் நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version