November 30, 2021, 9:23 am
More

  “‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் “

  “‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும் ” 

  ( உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த  ஒரு பெண்ணுக்கு) (மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை,  கைவிட்டதுமில்லை )

  (வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு  அருள்) ;(தெய்வத்தின் குரல் 7 பாகமும் தன் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டவர்) 

  :சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம்.  கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது.  அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை.   படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான்,  அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை,  எங்கும் போகக் கூடியவராயிற்றே…

  ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார்.  படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை.  தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

  அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன.  எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள்.  எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு,  தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

  சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு.  எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார்.  பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது .  மகானின்  கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

  மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

  “அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும். ”  என்றார்.

  “அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே”  என்று மெதுவாக  மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். 

  அதனாலென்ன ?  தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே !   திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்”  என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

  அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள்.  சற்று தூரம் வந்தவுடன்,  மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’  என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது.  இவர்களும் ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும்.  இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ?  தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்?  மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு,  திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்

  .மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.  ஒரே மாதம்தான்…  மீனாள் பூரண குணமடைந்தாள்.  மனக் கோளாறு முழுமையாக விலகி,  இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார்,  பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு.

  மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை,  கைவிட்டதுமில்லை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-