11/07/2020 1:35 PM
29 C
Chennai

மகிமைகளின் நிதி ஸ்ரீ துர்கா சப்தசதி

சற்றுமுன்...

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு!

எந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன

அருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து!

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்

கொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்!

அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்

கொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா!

பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.

“மஹிமைகளின் நிதி ஸ்ரீதுர்கா சப்தசதி”:-

“கலௌ சண்டீ விநாயகௌ” என்பது பெரியோர் வாக்கு. அதாவது இந்த கலியுகத்தில் சண்டீ பரதேவதையையும் விநாயகரையும் வழிபட வேண்டும். வணங்கி நம் வாழ்க்கையை உய்வித்துத் கொள்ள வேண்டும்.

மகிமைகள் நிறைந்த ஸ்துதியான ஸ்ரீ துர்கா சப்தசதி, வேத வியாசர் படைத்த மார்க்கண்டேய புராணத்தில் 73வது அத்தியாயம் முதல் 85 வது அத்தியாயம் வரை மொத்தம் 13 அத்தியாயங்கள் உள்ள ஒரு பாகம்.

சுரதன் என்ற அரசனும், சமாதி என்ற வைசியனும் காட்டுக்கு விரட்டப்பட்டவர்கள். அவர்களுக்கு சுமேதன் என்ற முனிவர் அம்பாளின் மஹிமையை எடுத்துக் கூறி விவரிக்கும் விதமாக துர்கா சப்தசதி தொடங்குகிறது.

இது கர்ம, ஞான, பக்தி யோங்களின் சிறப்பினை விளக்குகிறது. பிரதமம், மத்யமம், உத்தமம் என்று மூன்று வரலாறுகள் கொண்ட ஸ்ரீ துர்கா சப்தசதியில் மொத்தம் 700 சுலோகங்கள் உள்ளன. எனவேதான் இதற்கு துர்கா சப்த(7) சதி(100) என்றும், தேவீ சப்தசதீ என்றும் சண்டீ சப்தசதி என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

யாகங்களில் அஸ்வமேதம், தேவதைகளில் விஷ்ணு சிறந்தவர்கள். அதே போல் ஸ்தோத்திரங்களில் சிறந்தது துர்கா சப்தசதி. இதை விட மேன்மையான ஸ்தோத்திரம் இல்லை. இது பக்தியையும் முக்தியையும் அளிக்கக் கூடியது. மிகவும் புண்ணியமானது. பவித்திரங்களுக்கெல்லாம் பவித்ரமானது.

சப்தசதி வேதத்தைப் போலவே பழமையானது. கிடைத்தற்கரியது. இதில் சுருதி, ஸ்ம்ருதி, புராணம், தந்திரம், தரிசனங்களின் சாராம்சம் பொதிந்துள்ளது. எனவேதான் இதன் தத்துவம் அந்த பராசக்திக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். விஷ்ணுவுக்கு மூன்றில் ஒரு பாகமும், பிரம்மாவுக்கு பாதி, வேத வியாசருக்கு நான்கில் ஒரு பாகம், மற்றவர்களுக்கு கோடியில் ஒரு பாகம் தெரியும் என்று மேரு தந்திரம் என்ற நூல் கூறுகிறது.

இதில் மறைமுகமான மந்திரங்கள் எத்தனையோ உள்ளன. எனவே இது மந்திர சாஸ்த்திரத்திற்கு சூத்திரம் போன்றது. இதன் பாராயணத்தால் அந்த மந்திரங்களை ஜபம் செய்த பலன் கிடைக்கிறது.

சப்தசதியில் உள்ள பிரதம சரித்திரத்தில் தாமச சக்தியான மகா காளியின் வரலாறு, மத்திம சரித்திரத்தில் ராஜஸ சக்தியான மகாலட்சுமியின் வரலாறு, உத்தம சரித்திரத்தில் சாத்வீக சக்தியான மகா சரஸ்வதியின் வரலாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.

பிரதம சரித்திரம், “ஸ்ரீ மகாகாளீ ப்ரீத்யர்த்தம் தர்மார்த்தம்” – (ஸ்ரீமகா காளியை மகிழ்விப்பதற்காகவும், தர்மத்திற்காகவும்) ஜபம் செய்யப்படுகிறது. இதில் முதல் அத்தியாயம் மகாகாளி, விஷ்ணுவின் மூலம் மது, கடபர்களை சம்ஹாரம் செய்வது காணப்படுகிறது.

மத்தியம சரித்திரத்தில் இரண்டாம் அத்தியாயம் முதல் நான்காம் அத்தியாயம் வரை “மஹாலட்சுமி ப்ரீத்யர்த்தே அர்தார்தே” (மகாலட்சுமியை மகிழ்விப்பதற்காகவும் பொருளுக்காகவும்) ஜபம் செய்யப்படுகிறது.

மகாலட்சுமி இராண்டாவது அத்தியாயத்தில் மகிஷாசுரனுடைய சைன்யத்தையும், மூன்றாம் அத்தியாயத்தில் மகிஷாசுரனையும் வதை செய்கிறாள். நான்காம் அத்தியாயத்தில் இந்திரன் போன்றோர் துதிப்பது காணப்படுகிறது.

இனி, இறுதியாக உத்தம சரித்திரத்தில் ஐந்தாம் அத்தியாயம் முதல் 13ம் அத்தியாயம் வரை, “மஹா சரஸ்வதி ப்ரீத்யர்த்தே காமார்தே” (மஹாசரஸ்வதியை மகிழ்விப்பதற்காகவும் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகவும்) ஜபம் செய்யப்படுகிறது.

5ம் அத்தியாயத்தில் தேவிக்கும் தூதருக்குமான சம்வாதமும் ஆறாவது அத்தியாயத்தில் தூம்ரலோசன வதமும், ஏழாம் அத்தியாயத்தில் சண்டமுண்டாசுர சம்ஹாரம், 8ஆவது அத்தியாயத்தில் ரக்தபீஜ வதம், 9வது அத்தியாயத்தில் நிசும்ப வதை, 10ல் சும்பாஸுர சம்ஹாரம், 11ல் நாராயணீ ஸ்துதி, 12ல் பகவதி வாக்கியம், 13ல் சுரதனுக்கும் வைச்யனுக்கும் வர பிரதானம் என்ற விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

சுக்ருத, துஷ்கிருதங்களுக்கு மது, கைடபர்களும், அகங்கார மமகாரங்களுக்கு சும்ப, நிசும்பர்களும், க்ரோத, லோபங்களுக்கு சண்ட, முண்டர்களும், குரோதத்திற்கு தூம்ர லோசனனும், காமத்திற்கு மகிஷாசுரனும், ரக்த பீஜனும் உருவகங்கள். அதே போல் சுரதன் என்ற அரசன் கர்ம யோகத்திற்கும், சமாதி என்ற வைசியன் ஞான யோகத்திற்கும் சின்னங்கள்.

பிரதம சரித்திரத்தின் தேவதை மகா காளி. அவள் பத்து கைகளோடு பத்துவித ஆயுதங்களை தரித்து உள்ளாள். அந்த மாதாவின் முக்கிய பீஜாக்ஷரத்திற்கு பதில் சரஸ்வதீ பீஜாக்ஷரம் உபயோகிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் த்விதீய சரித்திரத்தின் தேவதை மகாலட்சுமி. இந்த அன்னையின் முக்கிய பீஜாக்ஷரத்திற்கு பதில் புவனேஸ்வரி பீஜாக்ஷரம் உள்ளது. அதே போல் உத்தம சரித்திரத்தின் தேவதை மஹா சரஸ்வதி. அந்த மாதாவின் பீஜாக்ஷரத்திற்கு பதில் காமராஜ பீஜம் இருப்பது கவனிக்கத்தக்க முக்கிய அம்சம்.

சப்தசதியின் அதிதேவதை மஹாலட்சுமி. இவள் ராஜஸ சக்தியானாலும் மகிஷாசுரனை வதைப்பதற்கு சகல தேவதைகளின் சக்திகளோடும் 18 கைகளோடும் அவதாரம் செய்கிறாள். அவளுடைய தாமச ரூபம் மஹா காளி. சாத்வீக ரூபம் சரஸ்வதி. எனவே சப்தசதியின்படி மஹாலட்சுமியின் சொரூபம் முக்குணங்களோடு கூடிய ஒரு மகா சக்தி.

எனவே மத்தியம சரித்திரத்தின் தொடக்கத்தில் அந்த சொரூபத்தை
“அக்ஷ ஸ்ரக் பரசும் கதேஷுகுலிசம் பத்மம் தனு: குண்டிகாம்.
தண்டம் சக்திமஸிம் ச சர்ம ஜலஜம் கண்டாம் சுராபாஜனம்!
சூலம் பாச சுதர்சனே ச தததீம் ஹஸ்தை: ப்ரவாலப்ரபாம்
ஸேவே சௌரிபமர்தினீ மிஹ மஹாலக்ஷ்மீம் சரோஜ ஸ்திதாம்!!” என்று துதிக்கப்படுகிறாள்.

அதேபோல் சாத்வீக சொரூபிணியான சரஸ்வதி உத்தம சரித்திரத்தின் ஆரம்பத்தில் –
“கண்டா சூலஹலானி சங்க முஸலே சக்ரம் தனு: ஸாயகம்
ஹஸ்தாப்ஜைர் தததீம் கனாந்த விலஸத் சீதாம்சு துல்யப்ரபாம்!
கௌரீ தேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதாம் ஆதாரபூதாம் மஹா
பூர்வாமத்ர சரஸ்வதீமனுபஜே சம்பாதி தைத்யார்தினீம்!!”
என்று துதிக்கப்படுகிறாள். இந்த அன்னை சும்ப, நிசும்பர்களை சம்ஹாரம் செய்வதற்காக அவதரித்தவள்.

பிரதம சரித்திரத்திற்கு பிரம்மா ருஷி. இது ருக்வேத சொரூபம். மத்தியம சரித்திரத்திற்கு விஷ்ணு ருஷி. இது யஜுர் வேத சொரூபம். உத்தம சரித்திரத்தின் ருஷி ருத்ரன். இது சாமவேத சொரூபம். அதாவது சப்தசதியின்மூன்று சரித்திரங்களும் த்ரிமூர்த்திகளோடு கூடியது. மூன்று வேதங்களின் சொரூபம். ஸ்வரத்தைப் பிரதானமாகக் கொண்ட வேத பாராயணம் அனைவரும் செய்யக் கூடியதல்ல. ஆயினும் இந்த சப்தசதி பாராயணம் மூலம் அதே பலனைப் பெறலாம்.

“யதா யதா பாதா தாவவோத்தா பவிஷ்யதி
ததா ததா உ வதீர்யாஹம் கரிஷ்யாம்யரி சம்க்ஷயம்”
என்று ஜகன்மாதா தேவதைகளுக்கு அபயமளித்தாற்போலவே அசுர சம்ஹாரம் செய்வதற்கு அந்தந்த உருவங்களோடு அவதரித்து துஷ்ட சிட்சணை சிஷ்ட ரட்சணை செய்கிறாள்.

ஸ்ரீ தேவி பாகவத்திலுள்ள மகிஷாசுரன் போன்றவர்களின் வதைகள் சப்தசதியில் சுருக்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளன.

சப்தசதி பிரதம சரித்திரத்தில் கர்ம காண்டம், மத்தியம சரித்திரத்தில் உபாசனா காண்டம், உத்தம சரித்திரத்தில் ஞான காண்டம் நிழல் போல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

சப்தசதீ பாராயணத்தில் முதலில் ஸ்ரீ துர்கா கவசம், அர்களம், கீலகம் படிப்பது சம்பிரதாயம்.
கவசம்:-
“தேவ்யாஸ்து கவசேனைவ சுரக்ஷித தனு: சுதீ:
பதமேகம் ந கச்சேத்து யதீச்சேச்சுப மாத்மன:”

-‘தன் க்ஷேமத்தை விரும்புபவர்கள் இந்த தேவீ கவசத்தால் சரீரத்தை ரக்ஷனை செய்து கொள்ளாமல் ஒரு அடி கூட முன்னால் வைக்க இயலாது’.

இந்த கவசத்தின் தொடக்கத்தில் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்ற நவ துர்கைகள் குறிப்பிடப்படுகிறார்கள்.

அதே போல் எட்டாவது அத்தியாயத்தில் சும்ப, நிசும்பர்களின் சம்காரத்திற்காக துர்கா மாதாவிற்கு ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, ஐந்த்ரி என்ற பெயர்களோடு மாத்ருகர்கள் நெருங்கி வந்து அவளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.

சண்டீ கவச பாராயணத்தினால் சாமுண்டா தேவி பத்து திசைகளிலும் பத்து திக் பாலர்களான பல வித மூர்த்திகளோடு அவதரித்து நம்மைக் காக்கிறாள்.
(“ப்ராச்யாம் ரக்ஷது மா மைந்த்ரீ… ஏவம் தச திசோ ரக்ஷேச் ச முண்டா சவ வாஹனா” ).

கவசத்தில் நம் சரீரத்திலுள்ள முக்கிய அங்கங்களும் பிற அங்கங்களும் ரக்ஷிக்கப்படுவதற்காக தேவீ நாமத்தை நினைத்து பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதன் மூலம் உடலிலுள்ள அவயவங்களனைத்தும் துர்கா மாதாவின் திவ்ய சக்தி மூலம் சைதன்யம் பெற்று ஒளி பொருந்தியதாகிறது. இந்த கவசத்தைப் பாராயணம் செய்வதால் உடல் நோய்களை மட்டுமின்றி மன நோய்களையும் போக்கிக்கொள்ளலாம்.

பக்தி சிரத்தையுடன் செய்யும் நித்திய கவச பாராயணம் சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் நம்மைக் காத்து, சகல விருப்பங்களையும் நிறைவேறச் செய்கிறது. ஒவ்வொரு நாளும் கவசத்தால் காக்கப்படுபவன் எங்கு சென்றாலும் அங்கு பொருள் லாபம் பெற்று வெற்றி பெறுவான்.

“கவசே நாவ்ருதோ நித்யம் யத்ர யத்ரைவ கச்சதி
தத்ர தத்ரார்த்த லாபஸ்ஸ்யாத் விஜய: சர்வ காலிக:”

விரும்பிய கோரிக்கைகளனைத்தும் நிறைவேறும். இணையற்ற அகண்ட ஐஸ்வர்யம் கிடைக்கப்பெறும். தேவதைகளுக்கு கூட கிடைப்பதற்கரிதான இந்த கவச பாராயணத்தால் புகழ் பெருகுகிறது. வம்சம் ஸ்திரமாக நிலை பெறுகிறது. அவனிடம் தெய்வீகக் களை ஏற்படுகிறது. ஸ்தாவர ஜங்கமங்களால் ஏற்படும் இயற்கையான விஷமோ, செயற்கையான விஷமோ பாதிக்காது. அவன் மீது பிரயோகிக்கப்பட்ட அபிசார கர்மங்கள், மந்திர, யந்திரங்கள் இந்த பாராயணத்தினால் நசிந்து போகிறது. மரணத்திற்குப் பின் அவன் மஹா மாயையின் அருளால் தேவதைகளுக்கு கூட கிடைப்பதற்கு அரிதான உத்தம பதத்தினை அடைகிறான்.

“தேஹாந்தே பரமம் ஸ்தானம் யத் ஸூரைரபி துர்லபம் ஸம்ப்ராப்னோதி மனுஷ்யோ சௌ மஹாமாயா பிரசாதத:”

எனவேதான் சகல ரட்சணையை அருளும் புண்ணியமான இந்த கவச பாராயணத்தை எல்லா நேரங்களிலும் எப்போதும் செய்ய வேண்டும்.
“சர்வ ரக்ஷாகரம் புண்யம் கவசம் ஸர்வதா ஜபேத்”.

அர்களா ஸ்தோத்ரம்:-
கவச பாரயாணத்தின் பிறகு அர்களா ஸ்தோத்ரம் படிக்க வேண்டும். ‘அர்களா’ என்றால் துவாரத்தை மூடும் குறுக்கு கட்டை… தடை.. “துர்கா தேவி பிரசாத சித்யர்தம்” செய்யும் இந்த பாராயணத்தினால் எப்படிப்பட்ட தடைகளும் இல்லாமல் மனிதன் தன் விருப்பங்களைப் பெறலாம். துர்கா தேவி துராச்சாரத்தை தூரம் செய்கிறாள், துக்கத்தை நீக்குகிறாள், துர்கதியைப் போக்கி, துராசையை விலக்குகிறாள். பாவங்களை நசிக்கச் செய்கிறாள்.

அர்களா ஸ்தோத்திரத்தில் ‘ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி’ என்கிறோம். “அம்மா! எனக்கு அழகு, வெற்றி, புகழ் இவற்றை அளித்து என் விரோதிகளை (காமம், க்ரோதம் போன்ற) அழித்து விடு” என்று பிரார்த்திக்கிறோம்.

அது மட்டுமல்ல, “எனக்கு சௌபாக்கியம் கொடு. ஆரோக்கியத்தை அருள் செய். பரம சுகத்தை ஏற்படுத்து”(‘தேஹி சௌபாக்யமாரோக்யம் தேஹிமே பரமம் சுகம்’) என்றும், “என்னை கல்வியறிவாளனாக, கீர்த்தி பொருந்தியவனாக, செல்வம் பெற்றவனாகச் செய்வாயாக” என்றும், “சம்சார சாகரத்தை உய்வித்து, என் மனதை அனுசரித்து நடந்து கொண்டு என் மனதினை ரமிக்கச் செய்யும் பத்தினியை அருள்” (பத்னீம் மனோரமாம் தேஹி மனோ வ்ருத்தானு ஸாரீனீம், தாரிணீம் துர்க சம்சார சாகரஸ்ய கோலோர்ணவாம்” என்ற பிரார்த்தனையும் இதில் காணப்படுகிறது.

கீலகம்:-
அதன் பிறகு கீலக ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். மந்திரங்களின் ரகசியமான உட்பொருளை கீலகம் என்பர். உட்பொருளை அடையும் தடையை நீக்காமல் சண்டீ பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறாது. இதே கருத்தை

(“சர்வ மேதத் விஜானீயாத் மந்த்ராணாமபி கீலகம்
சோஉபி க்ஷேம மவாப்னோதி சததம் ஜாப்ய தத்பர:”)
– “மந்திரங்கள் அனைத்தின் கீலகத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், இந்த கீலக ஸ்தவத்தை நிரந்தரம் ஜபம் செய்பவர் க்ஷேமத்தை அடைவர்” என்று கூறப்பட்டுளளது.
இந்த ஸ்தோத்திரத்தினால் உச்சாடனம் முதலிய செயல்கள் அனைத்தும் சித்தியாகின்றன. (“சித்த்யந்த்யுச்சாடனாதீனி கர்மாணி சகலான்யபி”).

“கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அன்றோ அல்லது அஷ்டமி அன்றோ ஒருமித்த மனதுடன் தேவியை வழிபட்டு பிரசாதத்தைப் பெறுபவர்களுக்கு தேவியின் அருள் கிடைக்கிறது. வேறு எந்த விதானத்தாலும் தேவி பிரசன்னமாக மாட்டாள். இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூட கூறப்பட்டுள்ளது.

இவ்விதம் சண்டீ சப்தசதி மஹாதேவர் கூறிய கீலகத்தோடு (கீலிதம் ஆகியுள்ளது) இணைந்துள்ளது. “இத்தம் ரூபேண கீலேன மஹாதேவன கீலிதம்”.

பெண்களில் காணப்படும் சௌபாக்கியம் முதலிய மங்களங்கள் அனைத்தும் சண்டீ பாராயணத்தால் ஏற்பட்ட அனுக்ரகமே! ஆகவே பவித்ரமான சண்டீ பாராயணத்தை தவறாமல் செய்ய வேண்டும்.

“சௌபாக்யாதி ச யத்கிஞ்சித் த்ருச்யதே லலனாஜனே!
தத்சர்வம் தத்பிரசாதேன தேன ஜாப்யமிதம் சுபம்”

இதன் பாராயணத்தால் ஐஸ்வர்யம், சௌபாக்கியம், ஆரோக்யம், சம்பத்து அனைத்தும் வந்து சேரும். சத்ரு பயம் இருக்காது. மோக்ஷம் கிடைக்கப் பெரும் அப்படியிருக்கையில் யார் தான் அவளைத் துதி செய்யாமல் இருப்பார்கள்?

“ஐஸ்வர்யம் தத் பிரசாதேன சௌபாக்யாரோக்ய சம்பத:
சத்ருஹானி: பரோ மோக்ஷ: ஸ்தூயத ஸா ந கிம் ஜனை:”

ராத்ரி சூக்தம்:-
இது ராத்திரி தேவதையைப் பற்றி விவரிக்கிறது. ருக் வேதத்தில் உள்ள இந்த சூக்தத்தை இரவு வேளையில் ஜபம் செய்தால் கெட்ட சொப்பனங்கள் வராது. மோக்ஷ பலன் கிட்டும்.

நவார்ண மந்திரம்:-
இது ஒன்பது அட்சரங்கள் கொண்ட மகா மந்திரம். இதில் முதலில் சந்திர ஒளி போன்ற வாக் பீஜம், பின் சூரிய தேஜஸ் போன்ற மாயா பீஜம், அதன் பின் அக்னி போன்ற காம பீஜம் உள்ளன.

இந்த மந்திர ஜபத்தினால் யானைகளாலோ, பாம்புகளாலோ, அக்னியாலோ, திருடர்களாலோ, சத்ருக்களாலோ பயம் இருக்காது. வீட்டில் சகல செல்வங்களும் ஏற்படும். எப்படிப்பட்ட நோய்களானாலும் மாயமாகி விடும். இந்த மந்திர ஜபத்தால் உபாசகர்கள் ஆத்ம விகாசம் பெறுகிறார்கள், இந்த மந்திரம் அதிக சந்தோஷத்தை அருளுகிறது. பிரம்ம சாயூஜ்யத்தை அருளுகிறது. மனிதனிடம் ஒரு புதிய சைதன்யத்தை உதிக்கச் செய்து போஷிக்கிறது.

நவார்ண மந்திர ஜபம் மிகவும் உயர்ந்தது. கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு இதை விட சிறந்த உபாயம் வேறொன்றில்லை. ஆனால் இந்த மந்திரத்தை குருவிடமிருந்து உபதேசம் பெற்று மட்டுமே ஜபம் செய்ய வேண்டும்.

ந்யாஸம்:-
மந்திர ஜபத்திற்கு முன்னால் ந்யாஸம் செய்ய வேண்டும். ந்யாஸம் என்றால் வைப்பது அல்லது ஸ்தாபிப்பது என்று பொருள். அங்கந்யாஸ, கரந்யாசங்களோடு தொடர்புடைய மந்திரங்களால் உபாசகன் தன் அவயவங்களில் பல்வேறு தேவதைகளை தியானம் செய்து அவற்றை ஜாக்ருதம் செய்வது அதாவது உயிர்பிப்பது நிகழ்கிறது. ந்யாஸம் செய்வதால் தேவதைகளின் தத்துவம் சித்தியாகிறது. ந்யாஸம் செய்யாமல் ஜபம், பூஜை போன்றவற்றைச் செய்வதால் எத்தனையோ தடைகள் ஏற்படுகின்றன. அதனால் ஜபம் பங்கமடைகிறது.

பாராயண முறைகள்:-
சண்டீ சப்தசதி பாராயணம் செய்வதில் பலவித வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. முதலில் கவசம், அர்களம், கீலகம், நவார்ண மந்திர ஜபம், ராத்திரி சூக்தம், சப்தசதி, தேவீ சூக்தம் வரிசையாக படிப்பது ஒரு முறை.

முதல் நாள் முதலாம் அத்தியாயம் இரண்டாம் நாள் இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்கள், மூன்றாம் நாள் நான்காம் அத்தியாயம் 4ம் நாள் ஐந்திலிருந்து எட்டு அத்தியாயங்கள் வரை, 5ம் நாள் ஒன்பது, பத்து அத்தியாயங்கள், 6ம் நாள் பதினோராவது அத்தியாயம், 7ம் நாள் பன்னிரண்டு, பதின்மூன்றாம் அத்தியாயங்கள், ரஹஸ்ய த்ரயம் படித்து பூர்த்தி செய்வது மற்றுமொரு முறை.

மூன்று நாட்களில் மூன்று சரித்திரங்கள் பாராயணம் செய்யும் முறை கூட காணப்படுகிறது.

சத சண்டீ, சஹஸ்ர சண்டீ பாராயணம் செய்வது கூட சிறந்த பலனை அளிக்கக் கூடியது. பல் வேறு பலன்களுக்காக பீஜாக்ஷர சம்புடீகரணத்தோடு செய்யும் பாராயணம் கூட பிரசித்தியாக உள்ளது.

அபராத ஸ்தவம்:-
பாராயணம் பூர்த்தி ஆன பின் அபராத ஸ்தவம் படித்து சண்டீ பரதேவதையிடம் மன்னிப்பு கோர வேண்டும். இறுதியில் பாராயணத்தின் பலனை தேவியின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

சித்த குஞ்சிகா ஸ்தோத்திரம்:-
சண்டீ சப்தசதி பாராயணத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் சித்த குஞ்சிகா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்று கூறும் ஒரு சம்பிரதாயம் கூட உள்ளது..

இதில் உள்ள தேவீ சூக்தத்தை இரவும் பகலும் மூன்று ஆண்டுகள் பாராயணம் செய்தால் மிக உயர்ந்த நிலை கிடைக்கப் பெறுகிறது. சப்தசதியை பூர்த்தியாக பாராயணம் செய்ய இயலாதவர்கள் இதிலுள்ள ராத்திரி சூக்தம், சக்ராதி ஸ்துதி, நாராயணீ ஸ்துதி, தேவீ சூக்தம் பாராயணம் செய்தாலும் பலன் உண்டு.
சுபம்!!!

தெலுங்கில் எழுதியவர்- டா.எஸ்.பிரகாசராவ்
தமிழில்- ராஜி ரகுநாதன்

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad மகிமைகளின் நிதி ஸ்ரீ துர்கா சப்தசதி

பின் தொடர்க