“பாம்பு கடித்ததா, இல்லையா?”
(அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை தீபமும்)
(பெரியவாளின் பாம்புக்கடி வைத்தியம்)
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா
.தட்டச்சு;வரகூரான் நாராயணன்
கும்பகோணம் மடத்தில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜை முடிந்து,பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.
ஸ்ரீமடத்துடன் தொடர்பு உடைய ஒரு குடியானவர் பரபரப்புடன் வந்து பெரியவா காலில் விழுந்து, “என் மகனைக் காப்பாத்துங்க,கடவுளே” என்று கதறினார்.
“என்ன நடந்தது?” என்று அவரிடம் கேட்கச் சொன்னார்கள்-பெரியவா.
குடியானவருக்கு ஒரே பையன்.அவன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு பாம்பு அவன் உடம்பில் ஏறி,அப்பால் போயிருக்கிறது.
பையனுக்கு ஏற்பட்ட பயத்தில் மூர்ச்சை போட்டு விழுந்திருக்கிறான்.பையனை, பாம்பு கடித்ததா, இல்லையா? – என்பது தெரியவில்லை. பாம்புக் கடிக்கு மந்திரிக்கும் வழக்கம் உண்டு. ஆனால் அந்த மந்திரம் தெரிந்தவர் யாரும் அருகில் இல்லை. என்ன செய்வது?
“சாமி தான் காப்பாத்தணும்….”
பெரியவா விபூதிப் பிரசாதம் வழங்கினார்கள்.
“பையன் நெத்தியிலே பூசு…”
“சரிங்க…”
“வீட்டிலே அரப்புப் பொடி இருக்கா?”
“இருக்கு”…என்று தலையை ஆட்டினார்.
“பையன் உதட்டைப் பிரிச்சு,வாயிலே அரப்புப் பொடி போட்டு மெதுவா தடவி விடு.பையன் கசக்கிறதுன்னு துப்பினா,பாம்பு கடிக்கல்லேன்னு அர்த்தம்; தித்திக்கிறதுன்னு சொன்னா, பாம்பு கடிச்சிருக்குன்னு அர்த்தம்.அதற்கு வைத்யம் பண்ணணும். போய் அரப்பு கொடு….”
குடியானவர் ஓடிப்போய், பெரியவா சொன்னபடியே செய்தார். பையனின் வாயில் அரப்பைப் போட்டதும் “கசக்குது கசக்குது” என்று துப்பினான்.
“அப்பா! பாம்பு கடிக்கல்லே!…..
நிலைமை சரியானதும், அந்தப் பையனையும் அழைத்துக் கொண்டு தரிசனத்துக்கு வந்தார்கள், குடியானவ தம்பதிகள்.
“வீட்டிலே, தினமும் நல்லெண்ணை தீபம் ஏற்று” என்று அந்தப் பெண்ணிடம் பெரியவா கூறினார்கள்.