பூலோக வைகுண்டம் ஆன திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் துலா மாத பிறப்பை ஒட்டி காவிரியிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும் வைணவ தலைமை பீடமாகவும் பூலோக வைகுண்டம் ஆகவும் பக்தர்களால் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் துலா மாத வைபவம் இன்று காலை தொடங்கியது.
இதனை ஒட்டி திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து தங்கக் குடம் எடுத்து வரப்பட்டது. அதில், அம்மா மண்டபம் புனித திருக் காவிரியில் இருந்து திருமஞ்சனத்துக்கான புனிதநீர் நிரப்பப் பட்டு, கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது
ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பர். துலா ராசியில் சூரியன் பிரவேசிக்கும் தொடக்க நாளான இன்று, கோவில் யானை ஆண்டாள் மீது தங்கம், வெள்ளிக் குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு ஐப்பசி மாதம் முழுவதும் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது!
கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வார் பாடிய படி, காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்! காவிரி புனித நீராடல் முடிந்து நம்பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.
காவிரியில் நீர்வரத்து சற்று அதிகமாக இருந்ததால் பக்தர்கள் பாதுகாப்புக்காக போலீசார் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்!