வைகுண்ட ஏகாதசி 8.1.2017
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இங்கே திருவரங்க ராஜா அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இவ்விழா கடந்த டிச.28 அன்று இரவு 7 மணிக்கு கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டக பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்துத் திருநாள் 29-ம் தேதி தொடங்கியது. இந்தப் பகல் பத்து திருநாட்களில் உத்ஸவரான நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளுவது காணக் கண்கொள்ளாக் காட்சிதான். அவர் அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கே பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவில், பரமபத வாசல் திறப்பு பிரதான இடம் பெறும். சொர்க்க வாசல் திறப்பு என்று பாமர மக்களால் பய பக்தியுடன் போற்றிக் கொண்டாடப் படும் இந்த வைபவம், வரும் ஜனவரி 8-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். அந்த தினத்தில் இருந்து ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து திருநாளில் ஜனவரி14ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், 15ஆம் தேதி வேடுபறி,17ஆம் தேதி தீர்த்தவாரி, 18ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறும்.