Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் தீபாவளி ஸ்பெஷல்: செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளி அன்று இதைப் பண்ணுங்க!

தீபாவளி ஸ்பெஷல்: செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளி அன்று இதைப் பண்ணுங்க!

லக்ஷ்மி குபேர பூஜை !

இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது.

அதிகாலையிலேயே எழுந்து ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.

லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும்.

வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும்.

அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி… அஷ்டலட்சுமியே போற்றி… குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். நாணய வழிபாடு: அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு,

அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும்.

அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.

தீபாவளி நல்வாழ்த்துகள் !

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version