
செவ்வாய்க் கிழமை இன்று அதிகாலை 3.40க்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், குரு பகவான் வழிபாடு ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் நவக்கிரங்களில் முதன்மையான சுப கிரகம் என அழைக்கப்பட்டு, நற்பலன்களை தரக்கூடிய கிரகமாக குருபகவான் கருதப்படுகிறார். குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதே குருபெயர்ச்சியாக அழைக்கப்படுகிறது. குருபார்க்க கோடி நன்மை என்று போற்றப்படும் குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
புகழ்பெற்ற சிவத் தலங்கள், தட்சிணாமூர்த்தி தலங்கள், குரு தலங்கள், குரு பரிகார தலங்களில் அதிகாலை முதலே அன்பர்கள் கூட்டம் அலைமோதியது. குருபகவானின் முக்கியத் தலங்களான ஆலங்குடி, தென்குடித்திட்டை, பாடி திருவலிதாயம், சிவகங்கை திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பட்டமங்கலம், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கோவிந்தவாடி அகரம், திருச்சியில் உள்ள உத்தமர் கோவில் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள புளியறை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வந்து குருபகவானை தரிசித்து அருள் பெற்றனர்.

நவக்கிரங்களில் குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானுக்கு இன்று அதிகாலை குருபெயர்ச்சி சிறப்பு யாகம், அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைப்பெற்றது.
தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள குருபகவான் சந்நிதியில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அபிஷேக மற்றும் ஹோம திரவியங்கள், மஞ்சள் வஸ்திரம் கொண்டக்கடலை மாலை போன்றவை செலுத்தி வழிபட்டனர்.
திருவள்ளூரில் உள்ள காக்களூர் ஸ்ரீ யோக ஞான தக்ஷிணாமூர்த்தி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, குருபகவானுக்கு ஹோமம், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்தும், பின்னர் பரிகார பூஜையில் பங்கேற்றும் வழிபாடு நடத்தினார்கள். இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள வட ஆரண்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் அமைந்துள்ள தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.