June 21, 2021, 2:39 am
More

  ARTICLE - SECTIONS

  தமிழ்மறை தந்த பன்னிருவர்: பேயாழ்வார்!

  peyazhwar e1573018837665 - 1

  பேயாழ்வார் திருச்சரிதம்

  மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *
  நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்
  என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *
  நின்றது உலகத்தே நிகழ்ந்து.
  – மணவாளமாமுனிகள் அருளிய உபதேசரத்னமாலை

  அவதரித்த ஊர்  : திருமயிலை (மயிலாப்பூர்)
  அவதரித்த மாதம்  : ஐப்பசி
  அவதரித்த நட்சத்திரம்  : சதயம்
  அவதார அம்சம்  : நந்தகாம்சம்
  அருளிச் செய்த பிரபந்தம்  : மூன்றாம் திருவந்தாதி

  (குருபரம்பரைப்படி…)

  துலாசதபிஷக்ஜாதம் மயூரபுர கைரவாத்
  மஹாந்தம் மஹதாக்யாதம் வந்தே ஸ்ரீநந்தகாம்சகம்.
  ஸ்ரீநந்தகத்தின் அம்சத்தில்,
  பூதத்தாழ்வார் அவதரித்த தினத்திற்கு மறுதினமான தசமி திதி
  வியாழக்கிழமை கூடிய சதய நட்சத்திரத்தில்,
  திருமயிலை நகரில்,
  ஒரு கிணற்றிலே மலர்ந்த செவ்வல்லிப் பூவிலே அயோநிஜராய் அவதரித்து,
  எம்பெருமான் திருவடிகளில் பிரியா அன்புள்ளவராய் எழுந்தருளியிருந்தார்.

  இவர் அருளிச்செய்த பிரபந்தம் மூன்றாந்திருவந்தாதி, 100 பாசுரங்கள்.
  மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-15.

  peyalwar - 2

  பேயாழ்வாரின் திருச்சரிதம்!

  திருமயிலை என்னும் திருத்தலம் பண்டைய சிறப்பும் பொலிவும் பெற்றுத் திகழும் திருத்தலம். இப்போது மிகவும் பெரிய நகரமாகக் காட்சியளிக்கும் இந்தத் தலம், அந்நாட்களில் புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. இந்தத் தலத்துக்குப் பெருமை சேர்க்கும் ஆலயங்கள் இரண்டு. வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை என்று ஆண்டாள் பாடியபடி, மாதவப் பெருமாளும் கேசவப் பெருமாளும் தனித்தனியே கோயில் கொண்டு இங்கே அருள்பாலிக்கிறார்கள்.

  சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் கேசவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் ஓர் அதிசயமான செவ்வல்லிப் பூ மலர்ந்திருந்தது. அந்த மலரிலே, சித்தார்த்தி வருடம், ஐப்பசி மாதம் தசமி திதியில், சதய நட்சத்திரத்தில், திருமாலின் ஐம்படைகளில் ஒன்றாகிய நந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார் (கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி). திருமாலின் திருவருளால் பெரும் புலமை கைவரப் பெற்றார்.

  திருமால் திருவடிகளில் தம் சிந்தையைச் செலுத்தி வாழ்நாளை அவன் பணிக்கே அர்ப்பணித்தார். அவர் உள்ளம், பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமானிடமே நிலைத்து, எப்போதும் நினைக்கலாயிற்று. மற்றொன்றும் நாடாது, மண் மனை வேண்டாது, அவன் திருவடிகளையே எண்ணி எண்ணிக் காலம் கழித்தார்.

  கண்களே நாராயணாவென்று திருப் பெயர்கள் பல சொல்லி, தம் கைகளால் தொழுது மண்ணுலகை உண்டு உமிழ்ந்த வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கண்ணனையே என்றும் காண்பீராக என்பார். வாயே என்றும் இறவாத சீரிய இணையடிக்கே ஆளாகி ஒவ்வொரு நாளும் செம்மை பொருந்திய திருமாலை வாழ்த்துவாயாக என்பார். நாளும் திருமாலின் திருப்புகழையே பாடுக என் நெஞ்சே! என்பார்.

  அரங்கனின் அருட் புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் பேயாழ்வார். அப்போது அவர் நெஞ்சம் உருகி விடும். கண்களில் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோ டும். பரமனின் திருவடிக்கே பரகதியருளும் தன்மை உண்டு என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து பாடியாடுவார்.

  பெருமாளைப் போற்றிப் பாடுவதோடு, வைணவ அடியார் குழாங்களோடு கூடி, அவன் பெருமைகளைச் சொல்லி அனைவரையும் அந்தப் பேரின்பத்திலே திளைக்க வைத்தார். திருமால் பெருமை பாடிக் களிப்புற்று ஆடித் திரிவார். அவரைக் கண்டார், இவர் கருவிலேயே ஞானமாகிய திருவுடையராய் அவதரித்தவர் என்று போற்றினார்கள்.

  செந்தாமரையிலுள்ள இனிய மதுவை உண்ட வண்டுகள், அதனுள் மயங்கிக் கிடப்பது போன்று, இவரும் திருமாலின் மேல் ஆராக் காதல் கொண்டு, வேறு எதையும் நினைத்திலேன் என்று அவனுள்ளேயே மூழ்கிக் கிடந்தார். பகவான் மீதான பக்திப் பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார்; தொழுவார்; ஆடுவார்; பாடி அரற்றுவார். இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து, பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனால் பக்தர்களால் அவர் பேயாழ்வார் என்று போற்றப்பட்டார்.

  பேயாழ்வார், திருத்தலங்கள் பல சென்று திருமாலைப் போற்றிப் பாடி வந்தார். இவருடைய தீவிரமான பக்தியின் தன்மையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்த எண்ணி, பொய்கையாழ்வாரையும் பூதத்தாழ்வாரையும் இவரையும் கூட்டிவைத்து, இவர்களோடு தானும் சேரத் திருவுள்ளம் கொண்டான் திருமகள்நாதன். அந்த நாளும் வந்தது.

  முதலாழ்வார்கள் மூவரும் சந்தித்த சம்பவம்

  முதலாழ்வார்கள் என்று மக்கள் போற்றிப் பணிந்த பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய இம்மூவரின் பெருமையையும் பக்தி நிலையையும் உலகுக்குக் காட்ட எண்ணினான் பரந்தாமன்.

  தனித்தனியாகத் தன்னுடைய புகழைப் பாடிவரும் இம்மூவரையும் ஒன்றிணைத்து, ஒரே சங்கமமாக ஆக்கி, அவர்களின் மகிமையைக் காட்ட எண்ணிய பாற்கடல்வாசன், ஒரு நாள் இம்மூவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்தான்.

  பொய்கையார், பூதத்தார், பேயார் – இம்மூவரும் ஒரு நாள் ஒருவரை ஒருவர் அறியாமல், பல்வேறு ஊர்களுக்கும் யாத்திரை செய்துவிட்டு, திருக்கோவிலூர் திருத்தலத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள பெருமானை சேவித்து மகிழ்ந்தனர். உலகளந்த உத்தமனான அப்பெருமான், இம்மூவரின் பக்தியை உலகுக்குக் காட்ட எண்ணினார்.

  முதலில் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வார் திருக்கோவிலூர்பிரானின் தரிசனம் முடிந்து ஒரு வீட்டின் திண்ணையில் ஒட்டிக் கொண்டார். அவருக்குப் படுத்துக் கொள்ளப் போதுமான இடம் கிடைத்தது. ஸ்ரீமந் நாராயணனின் கருணையைப் பாடியபடியே அவர் அந்தத் திண்ணையில் படுத்துக்கொண்டார்.

  ஸ்ரீமந் நாராயணன் விருப்பப்படி, சற்று நேரத்துக்கெல்லாம் பூதத்தாழ்வாரும் அவ்விடத்துக்கு வந்து சேரவே, திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த பொய்கையாழ்வார் எழுந்து அவரை வரவேற்று, இந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம் என்று சொல்லி அமரச் செய்தார்.

  இருவரும் எம்பிரான் பெருமைகளைப் பாடியபடியே நேரம் போக்கினர். அப்போது சற்றே மழை தூறியது. முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார் அவசரமாக அடைக்கலம் தேடி அவ்விடத்துக்கு வந்து சேர, அந்தத் திண்ணையில் அமர்ந்திருந்த பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் எழுந்து நின்று அவரை வரவேற்று, இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லி வரவேற்றனர்.

  பெருமழை பெய்ததால் வேறு எங்கும் செல்ல வழியின்றி, அந்தத் திண்ணையில் மூவரும் நின்று கொண்டனர். இடநெருக்கடியால் மூவரும் நெருக்கிக் கொண்டு நின்றவாறு, பெருமானின் பெருமைகளை ஒவ்வொருவரும் சொல்லிப் போற்றிக் கொண்டிருந்தனர்.

  திடீரென அங்கே இன்னும் இடநெருக்கடி அதிகமாயிற்று. அம்மூவருக்கும் இடையில் இன்னும் ஒருவர் நின்று அங்கு இட நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தாங்கள் வணங்கும் ஸ்ரீமந் நாராயணனே என்பதை உணர்ந்து கொண்டனர் அம்மூவரும்!

  இவர்களுக்குக் காட்சியளித்த பெருமானின் பெருமையை, தாங்கள் தரிசித்து உணர்ந்து கொண்ட அப் பெருமானின் சிறப்புகளை, தனித்தனியாக பாசுரங்களால் மூவரும் பாடத் தொடங்கினர். அப்படியே பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியும், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியும், பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியும் அங்கே உருவானது

  முதலில் பொய்கையாழ்வார் பாடத் தொடங்கினார்…

  வையம் தகளியா வார்கடலே நெய்யாக
  வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
  சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
  இடராழி நீங்குகவே என்று.

  என்று தொடங்கி,

  ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்
  ஈரடியும் காணலாம் என்னெஞ்சே – ஓரடியில்
  தாயவனைக் கேசவனைத் தண்துழாய் மாலைசேர்
  மாயவனையே மனத்து வை

  – என்று நிறைவு செய்து நூறு அந்தாதிப் பாடல்களால் முதல் திருவந்தாதியைப் பாடினார்.

  தொடர்ந்து, பூதத்தாழ்வார் பாடத் தொடங்கினார்.

  அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
  இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
  ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
  ஞானத் தமிழ்புரிந்த நான்.

  – என்ற பாடலை முதல் பாடலாக வைத்துப் பாடத் தொடங்கினார்.

  மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு
  மேலா! வியன்துழாய்க் கண்ணியனே! – மேலால்
  விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்றன்
  அளவு அன்றால் யானுடைய அன்பு.

  – என்ற பாடல் முடிவாக வர இரண்டாம் நூற்றந்தாதியைப் பாடி முடித்தார்.

  மூன்றாவதாக பேயாழ்வார் பரமனின் பெருமையைப் போற்றும் வண்ணம், பரமனின் திருக்காட்சியைக் கண்ட அந்த அனுபவத்தைப் பாசுரங்களில் பாடத் தொடங்கினார்…

  திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
  அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
  பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
  என்னாழி வண்ணன்பால் இன்று.

  – என்ற பாடலைப் பாடத் தொடங்கி, நூறு பாசுரங்களைப் பாடினார். மூன்றாவது திருவந்தாதியின் நூறாவது பாசுரமாக,

  சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான், தண்துழாய்த்
  தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் – கார் ஆர்ந்த
  வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங்கண்,
  தேன் அமரும் பூமேல் திரு.

  – என்ற பாசுரத்தைப் பாடி முடித்தார்.

  இப்படி மூவரும் தங்கள் முதல் சந்திப்பின்போதே இறையனுபவத்தைக் கண்டு உணர்ந்தார்கள். அதன் பின்னர் தம் பாசுரங்கள் கொண்டு மூவரும் சேர்ந்து பல தலங்களுக்கும் சென்று பரமன் புகழ் பாடி பக்தி மார்க்கம் பரப்பினர்.

  இனி, பேயாழ்வாரின் சில பாசுரங்களில் இருந்து அவருடைய இறையனுபவத்தைக் காண்போம்.

  திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று அவனைக் கண்ட அனுபவத்தை அடுத்த பாடலில் இப்படிச் சொல்கிறார்.

  இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்,
  பொன் தோய் வரைமார்பில் பூந்துழாய், – அன்று
  திருக்கண்டு கொண்ட திருமாலே! உன்னை
  மருக்கண்டு கொண்டு என் மனம். (2)

  – என்று திருமாலே உனைக் கண்டுகொண்ட இந்தக் கணத்திலிருந்து, எல்லாப் பிறவிகளையும் இனித் தொடரமுடியாதபடி அறுத்துவிட்டேன் என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார். அவன் தரிசனம் கண்ட அடுத்த கணமே பிறவாப் பெருவீடு நிச்சயம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் பாசுரம் மூலம்.

  பகவானின் பெருமையைப் பாடிப் பரவுவதே பக்தனின் பணி என்பதை எடுத்துக்காட்டும் ஆழ்வார், அவனின் பெருமையைச் சொல்ல அந்த சரஸ்வதியாலும் இயலாது என்கிறார். பல இடங்களில் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷனாலும் நின் பெருமையை விவரிக்க முடியாது; அவ்வளவு பெருமை பெற்றவன் என்று உயர்வு நவிற்சி தோன்றப் பாடியிருக்கும் பாங்கை நாம் காண்கிறோம்.

  ஆனால் பேயாழ்வார் இங்கே, நாவுக்கு அரசியான பிரம்மனின் நாயகி சரஸ்வதியாலேயே, பூமகள் கேள்வனான திருமாலின் பொலிவை வர்ணிக்க முடியாது… அப்படி இருக்கும்போது, நாமெல்லாம் என்ன செய்து விடப்போகிறோம்? என்ற எண்ணம் தோன்ற இந்தப் பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார்.

  நிறம் வெளிது; செய்து; பசிது; கரிது என்று
  இறை உருவம் யாமறியோம் எண்ணில்  -நிறைவு உடைய
  நாமங்கை தானும் நலம் புகல வல்லளே
  பூமங்கை கேள்வன் பொலிவு?

  அவன் நிறம் வெள்ளையா, சிவப்பா, பச்சையா, கறுப்பா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாது. ஞானத்தில் நிறைந்த சரஸ்வதியே திருமகள் கணவனின் பொலிவை வர்ணிக்க முடியாது போகும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற கருத்து எழுகிறது. என்றால், அவன் பொலிவை வர்ணிப்பதற்குக்கூட, ஒரு ஞானம் தேவைப்படுகிறது என்பது புரியும்.

  இந்த ஞானம் அடைவதற்கு முன்னர், மனம் பலவித நிலைகளில் அலைபாயும். அதுதான் மனித மனத்தின் இயல்பு. குரங்கு கிளைவிட்டு கிளை தாவுதல்போலே, அக்கரைக்கு இக்கரை பச்சை என்று கண்கள் உணர்த்துதலால் அங்கும் இங்கும் தாவிப்போக மனம் ஆசைப்படும். ஆனால், எல்லாம் உணர்ந்த அனுபவசாலிகளே உண்மை எதுவென உரைத்து உலகோரை நல்வழிப்படுத்துவர். அந்த ஒரு நிலையில் ஆழ்வார் தம் அனுபவத்தால் கண்ட உண்மைப் பரம்பொருளை இவ்வாறு கூறுகிறார்.

  அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
  மது நன்று தண் துழாய் மார்பன் – பொது நின்று
  பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள்
  முன்னம் கழலும் முடிந்து

  – என்னும் பாடலால், அன்பர்களே உங்கள் உள்ளத்திலே ஒரு சிறிதும் ஐயம் கொள்ள வேண்டாம். அது நல்லது, இது கெட்டது ஆதலால் இதை விட்டு அதைப் பற்றுவோம் என்றும் எண்ண வேண்டாம். எது நல்லது எது கெட்டது என்ற சந்தேகங்களும் வேண்டவே வேண்டாம். தேன் சிந்தும் குளிர்ந்த துளசி மாலையை அணிந்த மார்புடைய திருமால் எல்லோருக்கும் பொதுவாக நின்றவன். அவனுடைய அழகுப் பாதங்களை வணங்குங்கள். அதுபோதும்… உடனே உங்கள் வினைகள் எல்லாம் நீங்கள் தொழுது முடிப்பதற்கு முன்பேயே ஓடிப்போய்விடும். மீண்டும் உங்களை அவை தொடரவே மாட்டா. முடிவாக விலகிப் போய்விடும் என்று தேர்ந்து தெளிந்து அறிவிக்கிறார்.

  சிவனையும் திருமாலையும் ஒருங்கே கண்ட பொன்திகழு மேனிப் புரிசடையும் என்ற பொய்கையாழ்வாரின் கருத்தைப் போல், பேயாழ்வாரும் தம் பாசுரத்தில் காட்டுகிறார்.

  தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
  சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்  -சூழும்
  திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
  இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து –

  – என்று பாடுகிறார்.

  ஒருபுறம் தாழ்ந்த சடை. மறுபுறம் நீண்ட திருமுடி. ஒரு பக்கம் அழகிய மழு. மறுபக்கம் சக்கரப் படை. சுற்றிய நாகம் ஒருபுறம். பொன் அரைஞாண் மறுபுறம். இவ்வாறு சேராச் சேர்த்தியாக, சங்கரநாராயண வடிவில் நாற்புறமும் அருவி விழும் திருவேங்கடத்தில் ஒரே வடிவமாய் பொருந்தி விளங்குவது என்ன ஆச்சரியம்! தனக்கே உரிய உருவில் தன்னைப் பெறத் தவம் செய்பவன் உருவம் சேர்ந்ததே என்று ஆச்சர்யத்தால் பாடுகிறார்.

  பேயாழ்வார் தான் சென்ற வைணவத் திருத்தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்:-

  விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
  மண் நகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
  தென்குடந்தை தென் திருவரங்கம் தென்கோட்டி
  தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.

  மாவலியிடம் தன் உள்ளங்கையில் நீர் ஏற்ற திருமால், தன் நீர்மை குணத்தால் எழுந்தருளிய திருப்பதிகள், திருவிண்ணகரம், திருவெஃகா, நீர் வளமுள்ள திருவேங்கடம், மாடங்கள் உள்ள திருவேளுக்கை, பூமியின் நடுநாயகமாகத் திகழும் திருக்குடந்தை, தேன் துளிர்க்கும் சோலைகள் கொண்ட திருவரங்கம், தென்புறத்தே உள்ள திருக்கோஷ்டியூர் என்று அடுக்குகிறார்.

  பேயாழ்வார் வாழி திருநாமம்

  திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
  சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
  மருக்கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே
  மலர்க்கு அரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே
  நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
  நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
  பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே
  பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

  • செங்கோட்டை ஸ்ரீராம்

  பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-