“பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது”
(பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்)
(08-11-2018 சாய் டி.வி.யிலும் கணேச சர்மா சொன்னார்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம் என்பதற்கெல்லாம் நேர ஒதுக்கீடு கிடையாது. பிக்ஷை’ பண்ண வேண்டியிருக்கிறதே!’ என்பது போல விட்டேற்றியாகப் பிக்ஷை செய்வார்கள்.
ஆனால், அவருக்குத் தொண்டு செய்யும் பக்தர்களுக்கு அப்படி இருக்க முடியுமா?
காலம் கடந்து கொண்டு இருப்பதை, வயிறு நினைவூட்டுகிறது. பெரியவாள் பிக்ஷை செய்யாதிருக்கும்போது, இவர்கள் உணவு கொள்ள முடியாதே? அப்படி ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது.
சாயங்காலம் மணி நாலு ஆனாலும், உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்
.அணுக்கத் தொண்டர்களுக்கு ஆத்திரமாக வரும். என்ன செய்ய? பெரியவாளுக்கு நினைவுபடுத்த முடியுமா? அல்லது பக்தர்களைத்தான் விரட்ட முடியுமா?
துணிச்சலான ஒரு தொண்டர்,ஓர் உபாயம் கூறினார்.
பெரியவாள் அறையில் அவர்கள் கண்ணில் படுகிற மாதிரி ஒரு டைம் – பீஸ் இருக்கும். அதை அவ்வப்போது பார்க்கவும் செய்வார்கள்.”இதைப் பாருங்கோடா…மணி மூணரை ஆகியிருக்கும் .போதே கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி நாலரை ஆக்கி விடுகிறேன்..சரியா?- துணிச்சல் தொண்டர். உடன் உழைக்கும் நாலைந்து பேரும் ‘சரி’ என்று தலையாட்டினார்கள்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அன்றைக்கு கடிகாரத்தையே பார்க்கவில்லை பெரியவாள்.ஒரு மணி நேரம் தள்ளி வைத்து மணி ஐந்தைக் காட்டியதும் சாவகாசமாக எழுந்தார்கள், பிக்ஷைக்கு.
நாலைந்து நாள்கள் இப்படியே கழிந்தன.பெரியவாளை, கொஞ்சம் ஏமாற்றிவிட்ட அசட்டுத் திருப்தி தொண்டர்களுக்கு
ஒரு பக்தர் வந்தார்.பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி.
“பெரியவாள்…சாட்சாத் பரமேஸ்வரன் அவதாரம்..சுத்தஸத்வஸ்வரூபம்..ஸ்படிகம் மாதிரி.. சச்சிதானந்தம்… ஞானத் திருவுரு…” என்றெல்லாம் மனமுருகித் தோத்திரம் .செய்தார்.
அவர் பேசி முடித்ததும், பெரியவாள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.;
” நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லை. எங்கிட்ட என்னசக்தி இருக்கு? இதோ இருக்கிற இந்தக் கடிகாரம் கூட சரியான நேரம் காட்றதில்லே ..ரொம்ப வேகமாப் போறது! எங்கிட்ட ஏதாவது அபூர்வ சக்தி இருந்தா, அந்த முள்ளைப் பின்னுக்குத் தள்ளி வைக்க மாட்டேனா?”
துணிச்சல்காரத் தொண்டர் தடாலென்று விழுந்து தேம்பினார்.
“சரி…சரி…எழுந்திரு. எனக்குக் கடிகாரம் வேண்டாம். காலண்டர் போதும். உங்களுக்குப் பசிக்கும் என்கிற எண்ணம் எனக்குத் தெரியாமல் போயிடுத்தே!”
அத்தனை தொண்டர்களும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்புக் கோரினார்கள்.
பெரியவாளை ஏமாற்றவும் முடியாது;(தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது