“முகாமில், ஒரு தாய்ப்பன்றி,ஏழெட்டுக் குட்டிகளுடன்உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக”.
“(“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம் .அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-180
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஆந்திர மாநிலத்தில் யாத்திரை.ஒரு குக்கிராமத்தில்முகாம்.
பின் தங்கிய மக்களே வசித்து வந்த ஒரேயொரு தெரு. எனவே சற்றுத் தள்ளினாற்போல்,கிராம மக்கள் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டுத் தந்திருந்தார்கள். கொட்டகை முழுவதும் பசுஞ்சாணி தெளித்து சுத்தம் செய்திருந்தார்கள். ஒரு மூலையில் மகாப் பெரியவாளுக்கு தனி இடம். கொட்டகைக்கு வெளியே நின்று கிராமத்தாருடன் சம்பாஷித்து விட்டு, சிப்பந்திகள் எல்லாரும் உள்ளே நுழைந்த போது, ஒரு தாய்ப்பன்றி ,ஏழெட்டுக் குட்டிகளுடன் உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக.
சிப்பந்திகள் கற்களை வீசி எறிந்தார்கள்…..
‘சூ…..சூ..போ…போ…என்று.. (பீஜாக்ஷர மந்திரங்கள் போல் ஒற்றைச் சொற்களை இரைந்து சொன்னார்கள்)
ஊஹூம்,பெரியதாக இருந்த தாய்ப்பன்றி அசையவேயில்லை. பயப்படவேயில்லை என்றால் குட்டிகளோ ஆனந்தமாக அட்டகாசம் செய்து கொண்டு,தாயின் மேல் விழுந்து புரண்டன.
பெரியவாள் சிப்பந்திகளை அழைத்தார்கள்.
“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு, பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம். அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள். பகவான் ‘வராஹ அவதாரம்’ செய்து பூமியை ரட்சத்திருக்கிறார். அம்பாளின் அம்சமாக வாராஹி தோன்றியிருக்கிறாள். தெய்வங்களைப் பூஜை செய்கிற நாமே, அவற்றை விரட்டியடித்தால் எப்படி? அதுகள் தானாகப் போகிற போது போகட்டும்.பகவானைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு இந்தப் பக்கமா உட்கார்ந்திருப்போம்..”
கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாற்கால் பிராணிகள், நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிவிட்டன.
மறுபடியும் ‘அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து,சுத்தம் செய்து சிப்பந்திகள் அலுவல்களைத் தொடங்கினார்கள்.
பெரியவாள், கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.
வராக ஸ்தோத்திரமாக இருக்குமோ? வாராஹி மந்திரமாக இருக்குமோ?
சந்திரமௌளீஸ்வரருக்குத்தான் தெரியும்!