“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.
(என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே,
என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம,
முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக்
காப்பாத்தியிருக்கேளே ஸ்ரீகண்டன்)
சொன்னவர்-ஸ்ரீகண்டன்.(தொண்டர்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-11-2015 தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)
பரமாசார்யா எங்கே போனாலும் அவர் கூடவே ஸ்ரீகண்டனும் போவாராம்.ஒரு சமயம் ஏதோ காரணத்தால வெளீல போயிருந்த ஸ்ரீகண்டன் மடத்துக்கு வர்றதுக்குள்ளே பெரியவா எங்கேயோ புறப்பட்டுப் போயிட்டாராம்.
‘பெரியவா கூட போகமுடியாம போச்சே… பெரியவா என்னை விட்டுட்டுப் போயிட்டேளே, எப்பவும் கூடவர்ற நான் இப்போ வரலையே, என்னோட நினைப்பே உங்களுக்கு கிடையா’தாங்கற மாதிரி மனசுக்கு தோணினதையெல்லாம் நினைச்சுண்டு மடத்துல ஒரு அறையில் உட்கார்ந்து திருகையில மாவரைச்சுண்டு இருந்தாராம்.
அந்த சமயத்துல மடத்துல இருந்து ஒருத்தர் வேர்க்க விறுவிறுக்க ஒடிவந்து, “நீ என்ன வேலை பண்ணிண்டு இருந்தாலும்,அதை அப்படியே போட்டுட்டு,உடனடியா உன்னைக் கூட்டிண்டு வரச்சொன்னா பெரியவா!” அப்படின்னு சொன்னாராம்.
மாவு படிஞ்சிருக்கற கையை அலம்பிக்கலாம்னு போனவரைக்கூட,”அதெல்லாம் பரவாயில்லை உடனே வா!”ன்னு வெளியில் அழைச்சுண்டு வந்தாராம் வந்தவர்.
அவா அந்த அறையை விட்டு வெளீல வந்த மறு நிமிஷம், ஸ்ரீகண்டன் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த தூண் சரிஞ்சு, அந்தக் கட்டடம் அப்படியே நொறுங்கி சாய்ஞ்சுதாம்.ஒரு விநாடி தாமதிச்சிருந்தாலும் என்ன ஆகியிருக்கும்கறதை நினைச்சு ஸ்ரீகண்டன் அப்படியே விக்கிச்சுப்போய் நின்னாராம்.
என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே, என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக் காப்பாத்தியிருக்கேளே ,பெரியவா என்னை மன்னிக்கணும்னு, அந்த ஞானிமுன்னால படபடக்கப்போய் அவர் நின்னதும், அமைதியா ஒரு புன்னகை மட்டும் பண்ணினாராம் பரமாசார்யா.