spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்உங்க பசங்க படிப்பில முதல்ல வரணுமா? இத சொல்ல சொல்லுங்க..!

உங்க பசங்க படிப்பில முதல்ல வரணுமா? இத சொல்ல சொல்லுங்க..!

- Advertisement -

காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது.

காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் குமரகுருபரர் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார்.

மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார்.

“கிழவரே… நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை…. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்… தருகிறேன்.” – சொல்லிவிட்டு எழுந்து போனார்.

அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது.

ஞானிகள் என்போர், எளிமையானவர்கள் எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள்.

எதிரே இருப்பவன் அரசனோ ஆண்டியோ இரண்டும் ஒன்றுதான் அவர்களுக்கு .எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை , ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும் , ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.

ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது .

மறுநாள்… விடிந்தது.

காசி தேசத்துச் சான்றோர்கள், அவையில் கூடினார்கள்.

பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்று கூடினார்கள்.

எங்கே அந்த மதுரைக் கிழவர் நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார்..” யாரோ சொல்ல, சபை சிரித்தது.

“அப்படியா… ஆயுசுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்…”மறுபடி சபை சிரித்தது.

“அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்.” – யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.

“அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே… வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே…”

“இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில், நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்..” – ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.

“சில சவுக்கடிகள்…” அவருக்கு உபயம் என உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.

“ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா…””வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார்.

நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா…”

“ஆமாம்… ஆமாம்…” என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.

வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.

குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும்… அவரையும் சிங்கம்போல் காட்டின ,

அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன.நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.

“என்ன இது…” கத்தினான்.

“நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்!!”

“இதுவா ஆசனம்… இது சிங்கமல்லவா…”

“இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா…

சிங்கங்கள் சபை முழுவதும் சுற்றித்திரிந்தன .நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான் சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.

உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.

குமரகுருபரர், “இங்கே வா..” என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன.

நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.

குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவர் கண்கள் சிரித்தன ,முகச் சுருக்கங்கள் சிரித்தன ,
இதழ்க் கடைகள் சிரித்தன , காது வளையங்கள் சிரித்தன ,
அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.

நவாப் சலாம் செய்தான்.

”உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்…” மீண்டும் சலாம் செய்தான்.

“தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் .

“நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே….

நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..! “

ஆமாம்! பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி… எப்படி இது சாத்தியமாயிற்று , ?

“இறையருள்.”

எந்த இறைவன்… உங்கள் இறைவனா…”

உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு.

“ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?”ஒரு நொடியில் கொடுத்தான்.

எப்படி ,,, ?

சகலகலாவல்லி மாலை என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.

மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.

கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்…” நவாப் பணிவாகப் பேசினார்.

source : கங்கைக்கரை ரகசியங்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்.

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் இயற்றிய சகலகலாவல்லி மாலை

கட்டளைக் கலித்துறை

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe