― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்அனுமன் பற்றி அறிந்ததும் அறியாததும்..!

அனுமன் பற்றி அறிந்ததும் அறியாததும்..!

- Advertisement -

கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆஞ்சநேயருக்கு ஒரு மனைவியும் மகரத்வஜன் என்ற ஒரு மகனும் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் வரும் மயில்ராவணன் கதை, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராமாயணங்கள் கூறுகின்றன.

அனுமாரைப் போன்றே அவரது மகனும் பராக்கிரமசாலியாக இருந்தார் என்பதும், அந்த மகன் மச்சவல்லபன்’,சுறவக்கொடியோன்’ என்று தமிழிலும், `மகரத்வஜன்’ என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறார். மகரத்வஜன், ஆஞ்சநேயருக்கு மகனாகத் தோன்றியது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.

ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள் என்றும், இலங்கையைத் தீக்கிரையாக்கிவிட்டு, பற்றியெரிந்த வாலை அணைப்பதற்காக அனுமார் கடலில் இறங்கியபோது அவரில் இருந்து வழிந்த வியர்வையை ஒரு தேவமச்சக்கன்னி விழுங்கினாள் என்றும் இருவிதமாகக் கூறப்படுகிறது.

வியர்வையை உண்ட தேவகன்னிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் கன்னிகை, அதாவது அனுமாரின் மனைவி, சுவர்ச்சலா’ என்றும்சுசீலா’ என்றும் பெயர் கொண்டவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அனுமாரின் மகன்தான் மகரத்வஜன். ஆனால், தனக்கு மனைவி இருப்பதோ மகன் இருப்பதோகூட ஆஞ்சநேயருக்கு பிற்காலத்தில்தான் தெரியவந்தது.

ராவணனுடன் ஸ்ரீராமர் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, யுத்த களத்துக்கு வந்த நாரதர், எதிரிகளுடன் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த அனுமனை, ‘கல்யாண பிரம்மசாரி’ என்று அழைத்தபோது அனுமன் கோபம்கொள்கிறார். அது பற்றி ஶ்ரீராமரிடம் கேட்டபோது, அவரும் அனுமனுக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் இருப்பதாகவே கூறி, உரிய காலத்தில் அது பற்றி அனுமனுக்குத் தெரியவரும் என்றும் கூறுகிறார்.

இந்த விவரம் மயில்ராவணனுடன் போருக்குச் சென்ற வேளையில்தான் அனுமனுக்குத் தெரியவந்தது. ஒருமுறை மயில்ராவணன் விபீஷணனைப்போல் வேடம் அணிந்து வந்து, அனுமனின் காவலையும் மீறி ராம லட்சுமணர்களைக் கடத்திச் சென்றுவிடுகிறான்.

இந்த மயில்ராவணன், ராவணனுக்கு சகோதரன் என்றும் ராவணனைப்போலவே வீர பராக்கிரமங்கள் நிறைந்தவன் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. சில வடமொழி நூல்களில் மயில்ராவணன் இருவர் என்றும் அஹி ராவணன், மஹி ராவணன் என்ற சகோதரர்களே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ராம லட்சுமணர்களைக் கடத்திச் சென்ற மயில்ராவணன், அவர்களை பாதாளச் சிறையில் அடைத்துவிட்டு, மறுநாளே அவர்களை சண்டி தேவிக்கு நரபலி கொடுக்கப்போவதாக ராவணனுக்குத் தகவல் அனுப்புகிறான்.

இந்தச் செய்தியை அறிந்த அனுமார், அவர்களை மீட்க விரைகிறார். பாதாள லோகத்தை அடைந்த அனுமார் சிறைக்கு அருகே செல்ல முயல்கிறார். அப்போதுதான் குறுக்கிடுகிறான் அந்த வீர இளைஞன். இருவருமே யார் என்று தெரிந்துகொள்ளாத சூழலில் கடுமையாக மோதிக்கொண்டனர். இருவருக்குமே வெற்றி தோல்வி இல்லை என்ற நிலையில், அனுமார் அந்த இளைஞரைப் பற்றிய விவரம் அறிந்துகொள்ள விரும்பி விவரம் கேட்கிறார்.

அப்போது அங்கு வரும் அந்த இளைஞரின் தாயார், அனுமாரை வணங்கி, விவரங்களைச் சொல்லி மனைவியான தன்னையும், மகனையும் காக்குமாறு வேண்டுகிறாள். மாய மயில்ராவணன் அவர்கள் இருவரையும் சிறைப்பிடித்து வந்த செய்தியையும் சொல்கிறாள். தன் கடவுள்களான ராம, லட்சுமணரை மீட்ட பிறகு கட்டாயம் உங்களையும் பாதுகாத்து மீட்பேன் என்கிறார் அனுமார்.

பிறகு மகரத்வஜன் உதவியோடு மயில்ராவணனைச் சந்திக்கும் அனுமார் அவனை வென்று, கொன்று விடுகிறார். ஒரு பெட்டியில் ஐந்து வண்டுகளில் உள்ள மயில்ராவணனின் உயிரை ஒரே கடியால் கடித்தால் மட்டுமே உயிர் போகும் என்பது விதி.

அதன்படி, பஞ்சமுக வடிவம் கொண்ட அனுமார் ஐந்து வண்டுகளை ஒரே கடியாக கடித்து மயில்ராவணனைக் கொல்கிறார். அப்போது அனுமார் தனது சொந்த முகத்தோடு வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர்,கருடன் என ஐந்து வடிவம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

பின்னர் ஸ்ரீராமரின் ஆணைப்படி, பாதாள உலகின் அரசனாக மகரத்வஜனை நியமித்துவிட்டு அனுமார் திரும்புகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்தியாவில் உஜ்ஜயினி நகருக்கு அருகே உள்ள சா‌ன்வெ‌ர் என்ற இடத்தில் உள்ள கோயிலில் மகரத்வஜன் சிலை காணப்படுகிறது. நைமிசாரண்யத்திலும் மகரத்வஜன் சிலை காணப்படுகிறது.

கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் உள்ள கோயில்களிலும் மகரத்வஜன் சிலை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரம்மசரியம் கெடாமல் தனக்குப் பிறந்த மகன் தன்னைப்போலவே பலசாலி என்று மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டார் ஆஞ்சநேயர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version