spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்காரமடை ரங்கநாதர் கோயில் மாசித் திருவிழா பிரமோத்ஸவ கொடியேற்றம் கோலாகலம்!

காரமடை ரங்கநாதர் கோயில் மாசித் திருவிழா பிரமோத்ஸவ கொடியேற்றம் கோலாகலம்!

- Advertisement -

காரமடை .அருள்மிகு .அரங்கநாதர் ஆலயம். தேர்த்திருவிழா . கொடியேற்று விழா உத்ஸவம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

காரமடை அரங்கநாதர் கோயிலில் மாசி மாத தேர்த்திருவிழா வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாசி தேர்த்திருவிழா வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக மார்ச் 1ஆம் தேதி நேற்று இரவு 11.30 மணி அளவில் கிராம சாந்தி நடைபெற்றது.

மார்ச் 2ஆம் தேதி இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரவு அன்ன வாகனத்திலும், 3ஆம் தேதி நாளை சிம்ம வாகனத்திலும், 4ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 5ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கருட சேவையும் நடைபெற உள்ளது.

6ஆம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 7ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணி அளவில் யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மார்ச் 8ஆம் தேதி அதிகாலை அரங்கநாதர் ஸ்ரீதேவி,பூதேவி சமேதமாக திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 9ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா, 10ஆம் தேதி தெப்போத்ஸவம், 11ஆம் தேதி சந்தான சேவை மற்றும் 12ஆம் தேதி வசந்த உத்ஸவம் ஆகியவை நடைபெறுகின்றன.

கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சத்தைப் போல், செல்வ வளம் பெருகுவதற்காக வணங்கப்படும் தெய்வாம்சம் பொருந்தியது காமதேனு என்ற பசு.

பசு இருந்தால் குடும்பத்தில் பஞ்சம் பறந்தோடும் என்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில்… கொங்கு மண்டலத்தில் மேற்கு மலைத் தொடரை ஒட்டி அமைந்த பசும் புல்வெளி நிறைந்த இடம். அங்கே தொட்டிய நாயக்கர் பிரிவைச் சேர்ந்த மக்கள் பசுக்களைக் காத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒருவரிடம், அதிக அளவில் பால் தரும் அதிசய பசு ஒன்று இருந்தது. அதன் தயவில் அவர் சுகமாக வாழ்க்கையை ஓட்டி வந்தார். ஆனால்… ஒரு நாள் திடீரென்று அந்தப் பசு பால் சுரக்க மறுத்தது. காரணம் புரியாமல் விழித்தார் அவர். தொடர்ந்து சில நாட்கள் இப்படிச் செய்யவே, கோபமடைந்த அவர், யாரோ இந்தப் பசுவின் பாலைக் கறந்து கொள்கிறார்களோ என்று சந்தேகம் கொண்டார்.

ஒரு நாள்… அந்தப் பசுவின் பின்னே தொடர்ந்து சென்றார். பசு கோரைப் புற்கள் நிறைந்த ஒரு இடத்தில் நின்று, தானாக பால் சொரியத் தொடங்கியது. வியப்பும் கோபமும் ஒருங்கே கொண்ட அவர், கையில் வைத்திருந்த அரிவாளால் புற்களை வெட்டத் தொடங்கினார்.

ஆனால்… அந்த நேரம் பெரும் வெடிச்சத்தம் எழுந்தது. அவர் கையிலும் ஏதோ பிசுபிசுத்தது. என்னவென்று பார்த்தால் கை முழுதும் ஒரே ரத்த மயம். கோபம் இப்போது பயமாக மாறியது. புற்களை விலக்கினால், அங்கே சுயம்பு லிங்க வடிவில் கல்லாலான ஓர் உருவம்.

சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தோர் ஓடி வந்தனர். லிங்க உருவைக் கண்டு அதிசயித்தனர். அன்று இரவு, அந்தத் தொட்டிய நாயக்கரின் கனவில் வந்த அரங்கநாதர், சுயம்பு லிங்க உருவம் தாமே என்றும், அதற்கு சந்தனக் காப்பு சாற்றி வழி பட்டால் உடனே அச்சம் தீர்ந்து செல்வம் பெருகும் என்றும் உரைத்தார். அரங்கனின் உத்தரவை சிரமேற்கொண்ட அவர், அங்கே சிறு குடில் கட்டி, சுயம்பு உருவத்துக்கு சந்தனக் காப்பிட்டு வழிபடத் தொடங்கினார்.

இப்படி உருவானதுதான் காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் என்கிறது கோயிலின் தலபுராணம்.

பின்னாளில் விஜயநகர மன்னர்களும், மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் மற்றும் நாயக்கர்களும் கோயிலுக்கு பெரும் நிபந்தங்கள் ஏற்படுத்தி வழிபாடுகள் சிறப்பாக நடக்கக் காரணமானார்கள். திருமலை நாயக்கர் தனக்கு ஏற்பட்ட நோய் இங்கே வந்து வேண்டிக்கொண்டு குணமடைந்ததால், நன்றிப் பெருக்கோடு இந்நாளில் நாம் காணும் வடிவில் திருமதில் எடுத்து ஆலயத்தைக் கட்டினாராம்.

கொங்கு மண்டலத்தின் செல்வ வளத்துக்கு காமதேனுவாக அமைந்த தலம் இந்தத் தலம். செல்வ வளம் தரும் சீர் அரங்கனை வேண்டிக்கொண்டு இங்கே எண்ணற்றோர் வருகின்றார்கள்.

வைணவ ஆசார்யரான பகவத் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருநாராயணபுரம் செல்லும் போது, இந்தக் கோயிலுக்கு வந்து, அரங்கநாதரை வணங்கிச் சென்றார் என்கிறார்கள்.

இந்தக் கோயில் குறித்த ஒரு சுவையான அனுபவத்தை ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

சுற்றுலா மையமாகத் திகழும் நீலகிரிக்கு மேட்டுப்பாளையம் வழியே ரயில் பாதை அமைக்கும்போது, இந்தக் கோயில் இருக்கும் பாதையில்தான் ரயில் பாதை வரைபடம் தயாரித்தார் ஆங்கிலேயரான பொறியாளர் ஒருவர்.

அதன்படி கோயில் இருக்கும் பாதையில் ரயில் பாதை அமைக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவரின் கனவில் வெண்குதிரையில் ஏறி அரங்கநாதர் வரும் காட்சி தோன்றியதாம். வியப்பில் ஆழ்ந்த அவர், தன் முயற்சியைக் கைவிட்டு, கோயிலுக்கு வந்து ரங்கநாதரை வணங்கி மரத்தாலான வெண்குதிரையை உத்ஸவங்கள் நடக்க காணிக்கையாக செலுத்தினாராம். இன்றும் அந்தக் குதிரை வாகனத்தில்தான் பெருமாள் உத்ஸவ காலங்களில் புறப்பாடு கண்டருள்கிறார் என்கிறார்கள்!

கோவை பகுதியின் இரண்டாவது மிகப் புராதனமான கோயில் இந்த அரங்கநாதர் ஆலயம். சுயம்பு வடிவில் அரங்கன் காட்சிதரும் வைணவத் திருத்தலம் எனும் வகையில் தனிச்சிறப்போடு திகழ்கிறது இந்தக் கோயில்.

வைகுண்ட ஏகாதசி நேரத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கே வருகிறார்கள். கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநில மக்களும் அதிகம் வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் மூலவர் அரங்கநாதர். உத்ஸவர் வேங்கடேசப் பெருமாள். தாயார் ரங்கநாயகி என்றும், பெட்டத்தம்மன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கே தல விருட்சமாகத் திகழ்வது காரை என்னும் ஒரு வகை மரம். இந்த மரத்தில் கயிறு கட்டி நேர்ந்துகொண்டால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலுக்குள் நுழையும்போது, முன் மண்டபத்தில் ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலர் காட்சி தருகிறார். நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் என ஆழ்வார் ஆசார்யர்களின் திருக்கோலத்தை தரிசித்துவிட்டு, கோயிலை வலம் வரும்போது பிராகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர் ஆகிய சந்நிதிகளை தரிசிக்கலாம்.

கோயில் கருவறையில் பெருமாள் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது. அழகிய கவசம் போர்த்தி, வெள்ளியாலான கிரீடம் அணிவித்து, கண்மலர், மூக்கு, வாய், திருமண்காப்பு என அனைத்தும் சாற்றியிருக்கிறார்கள். அருகே வெண்ணெய் கிருஷ்ணன், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் சிறிய திருமேனிகள் உள்ளன.

திருப்பதி திருமலையில், பெருமாள், மலையிலும், அலர்மேல்மங்கைத் தாயார் மலையடிவாரத்திலும் கோயில் கொண்டனர். ஆனால் இங்கே, பெருமாள் அடிவாரத்திலும், தாயார் அருகிலுள்ள மலையிலும் கோயில் கொண்டனர். இங்கே ரங்கநாயகித் தாயாரை பெட்டத்தம்மன் என்று அழைக்கிறார்கள்.

அரங்கநாதருக்கும், இந்தத் தாயாருக்கும் திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது. மாசி பிரம்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து மலைக் கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து கோயிலுக்கு எடுத்து வருகிறார்கள். அப்போது பெருமாள் சந்நிதியில் இருந்து ராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கிறார்கள். பின்னர் கலசத்தை கருவறையில் வைத்து பூஜை செய்கின்றனர். மறுநாள் அதிகாலை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது.

பின்னாளில், ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகி தாயாருக்கு என்று தனிச் சந்நிதி ஒன்றைக் கட்டினார்களாம். இந்தக் கோயிலில், மூலவர் சந்நிதியில் உள்ள ராமபாணத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆயுத பூஜை அன்று மட்டுமே இந்த பாணத்துக்கு பூஜை செய்கிறார்கள்.

மூலவர் சந்நிதியில் சடாரிக்கு பதிலாக, ராமபாணத்தால் ஆசியளிக்கிறார்கள். இதில் ஸ்ரீசுதர்ஸனர், ஆதிசேஷன் ஆகியோரின் வடிவம் உள்ளதாம். வழக்கம்போல் உற்ஸவரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது.

மாசி பிரம்மோற்ஸவத்தில், மக நட்சத்திரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளுகிறார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றுடன் கலந்த பிரசாதத்தை வைத்துக்கொண்டு, “ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்” எனச் சொல்லி ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள். இதனை, “கவாள சேவை” என்கிறார்கள். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் தண்ணீர் சேவை, கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும் பந்த சேவை ஆகியவை நடைபெறுகிறது.

பெட்டத்தம்மன், ரங்கநாதர் ஆகியோரின் வழிபாடுகள் பெரும்பாலும் இங்குள்ள மலைவாழ் பழங்குடி இனத்தவரின் பாரம்பரிய வழிபாட்டு முறையை உள்ளடக்கியது. ஆலய விழாக்களிலும் மிகப் பெரும்பான்மையாக கொங்கு பிரதேச மலைவாழ் இன மக்களே கலந்து கொண்டு, “கொங்கு நாட்டு ரெங்க ராஜா, எங்க நாட்டு ரங்க ராஜா” என்று மெய்சிலிர்த்து வணங்குகின்றனர்.

மாசி மாத பிரமோத்ஸவத்தில் தேர்த் திருவிழாவின் போது, தேரை நோக்கி இந்த மக்கள் வாழைப்பழங்களை வீசி எறிவது கண்கொள்ளாக் காட்சி. வாழைப் பழங்கள் தேரைச் சுற்றிலும் மலையாகக் குவிந்திருக்க தேர் நிலைக்கு வந்து சேருகிறது.

குடும்பத்தில் செல்வ வளம் பெருக, ஐஸ்வர்யம் என்றும் நிலைத்திருக்க கொங்கு மக்கள், ரங்கநாதரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன், அரங்கநாதருக்கு பால் திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். கோயிலுக்கு பசு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் உண்டு.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ., தொலைவில் இருக்கிறது காரமடை. காரமடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்தே சென்று ஆலயத்தை அடையலாம். தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில். காலை 5.30 மணி முதல்1 மணி வரையிலும், மாலை 4 முதல் 9 மணி வரையிலும் சந்நிதி திறந்திருக்கிறது.

தகவல்களைப் பெற… ஆலய தொலைபேசி எண்கள் : ஈ.ஓ., : 04254-272318 / 273018.

கோயில் பட்டர் : சுதர்ஸன பட்டர் : 8248045247

கட்டுரை: – செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe