Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்!

ஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்!

துறவுக்கான பாதை கத்தி முனை போன்று கூர்மையானது. தீரரான சிலருக்கானதே தவிர அனைவருக்குமானதன்று. ஆத்மாவைப் பற்றிய அறிவும், வைராக்யமுமே இத்துறவுக்கான இரண்டு முன் நிபந்தனைகள்.

“இந்த முழு உலகமும் கற்பதற்கான ஒரு மேடைதான். உனக்கு போதிப்பதற்கு என்னை மட்டுமே நீ சார்ந்திருக்கலாகாது. அனைத்திலிருந்தும் நீ பாடம் கற்க வேண்டும்” என்று என் குரு தேவர் கூறுவது வழக்கம்.

ஒரு முறை அவர் என்னிடம் கூறினார், “மகனே! நீ டார்ஜீலிங் செல்ல வேண்டும். நகரத்தை தாண்டி ஒரு நீரோடையும் அதன் கரையில் ஒரு சுடுகாடும் உள்ளது. நீ அங்கே தங்கியிருந்து 41 நாட்கள் ஒரு குறிப்பிட்ட சாதனையை செய்ய வேண்டும். என்ன ஆனாலும் சரி. உன் மனம் எத்தனைதான் உன்னை தடுத்தாலும் நீ அவ்விடத்தை விட்டு நகராமல் நான் சொல்லித்தரும் இச்சாதனையைச் செய்து முடிக்க வேண்டும்” என்றார்.

“சரி, குருதேவா! அப்படியே செய்கிறேன்” என்றேன்.

சாதாரண மக்கள் அந்த மாதிரி இடங்களில் தங்க யோசிப்பார்கள். விசித்ரமான கற்பனைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் எனக்கு பயமொன்றும் ஏற்படவில்லை. நான் என் மாஸ்டர் கூறிய இடத்தில் ஒரு சிறு குடிசை அமைத்துக் கொண்டு, சிறு நெருப்பை மூட்டி சமையல் செய்து சாப்பிட்டு, ஆன்மீக சாதனையில் ஈடுபட்டேன். அந்நாட்கள் எனக்கு கல்லூரியின் கோடை கால விடுமுறை நாட்கள். “சாதனையில் விடுமுறையைக் கழிப்பது எனக்கு நன்மையே பயக்கும்” என்று கூறிக் கொண்டேன்.

முப்பத்தொன்பது நாட்கள் என் குருநாதர் கூறியபடி சாதனைகளை செய்து வந்தேன். ஒன்றும் பெரிதாக ஆன்மீக அதிசயம் என்னுள் நிகழ்ந்து விடவில்லை. திடீரென்று மிகவும் சக்தி வாய்ந்த எண்ணம் என் மனதில் தோன்ற ஆரம்பித்தது. என் மனம் என்னை நோக்கிச் சாடலாயிற்று. “இது என்ன பைத்தியக்காரத்தனம்? உலகத்தொடர்பை முறித்துக் கொண்டு, தனிமையில் இளமையின் அழகான பகுதியை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்” என்று பலவாறு உபதேசிக்க ஆரம்பித்தது.

ஆனால் என் குருநாதர் முன்பே கூறியிருந்தார், ” நினைவில் வைத்துக் கொள். சரியாக நாற்பத்து ஒன்றாம் நாள் கட்டாயம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உனக்குள் தென்பட ஆரம்பிக்கும். அதற்குள் அவசரப்பட்டு உன் சாதனையை நிறுத்தி விடாதே. மனம் கூறும் சால்ஜாப்புகளுக்கு ஆட்பட்டு சஞ்சல மடையாதே” என்று எச்சரித்திருந்தார்.

நானும் “சரி” என்று அவரிடம் வாக்களித்திருந்தேன். ஆனால் அதையும் மீறி முப்பத்தொன்பதாம் நாள் என் மனம் என்னிடம் ஒன்றின் மேல் ஒன்றாக பல காரணங்களை சொல்லி என்னை அவ்விடத்திலிருந்து அகற்றப் பார்த்தது. நானும் சிறிது சிறிதாக அதன் பக்கம் சாய ஆரம்பித்தேன். என் திட சங்கல்பம் ஆட்டம் கண்டது.

“இந்த மூன்று நாட்களில் என்ன பெரிய வித்தியாசம் வந்து விடப் போகிறது? முப்பத்தொன்பது நாட்களில் தெரியாத முன்னேற்றம் இனிமேலா வரப் போகிறது? என் நண்பர்களுக்கு விடுமுறையில் கடிதம் எழுதுவதாகக் கூறியிருந்தேன். ஆனால் நான் செய்வது என்ன? இங்கு வந்து இறந்தவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது என்ன ஆன்மீக சாதனை? இப்படி ஒரு போதனை செய்து என்னை ஏன் என் குருநாதர் சித்திரவதை செய்கிறார்? அவர் ஒரு நல்ல குரு அல்ல போலும்!” என்று நினைக்க ஆரம்பித்து, அதே நினைவு தீவிரமாகி அவ்விடத்தை விட்டு விலகத் தீர்மானித்தேன்.

எரியும் நெருப்பில் ஒரு வாளி தண்ணீரைக் கொட்டி அணைத்து விட்டு அச்சிறு குடிசையையும் பிய்த்து எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அது ஒரு குளிர் நிறைந்த இரவாக இருந்ததால், ஒரு கம்பளி சால்வையை போர்த்துக் கொண்டு நகரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நகரத்தின் பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருக்கையில் அந்நள்ளிரவில் சங்கீத வாத்தியங்களின் இனிமையான இசை என்னை ஈர்த்தது. ஒரு பெண் இனிமையாக பாடிக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தாள். பாடலின் பொருளாவது, “வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் மிகச் சிறிதளவே எண்ணெய் மீதமிருக்கிறது. இரவோ மிக நீண்டிருக்கிறது” என்பதாகும். அவள் அவ்வரியை திரும்பத் திரும்ப பல முறை பாடினாள். இவ்வரிகள் என் நடையைத் தடுத்து நிறுத்தின. தபலாவின் ஓசை என்னைப் பார்த்து, “சீச்சீ! என்ன காரியம் செய்தாய்?” என்று இடித்துக் காட்டுவது போலிருந்தது.

நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் நினைக்கக ஆரம்பித்தேன், “பாக்கி இருக்கும் இறுதி இரண்டு நாட்களையும் நான் ஏன் சாதனை செய்து முடித்திருக்கக் கூடாது? எந்த முகத்துடன் என் குருநாதரின் முன் போய் நிற்பேன்? அவர் நிச்சயம் என்னைக் கண்டிப்பார். “நீ உன் சாதனையை சரிவர பூர்த்தி செய்ய வில்லை. மரம் வளரும் முன்பே கனியை எதிர்பார்த்தால் கிடைக்குமா?” என்று கேட்பார்.

நான் திரும்பச் சென்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து என் சாதனையை தொடர ஆரம்பித்து, மீதி இருந்த இரண்டு நாட்களையும் பூர்த்தி செய்தேன். நாற்பத்தோராவது நாள் என் குருநாதர் கூறியிருந்தபடியே எனக்கு அந்த ஆன்மீக சாதனையின் பலன் கிடைத்தது. நான் அளப்பிலா ஆனந்தமடைந்தேன்.

மீண்டும் நகரத்தை நோக்கி நடந்தேன். நேராக அந்த நாட்டிய மங்கையின் வீட்டை அடைந்தேன். அவள் ஒரு அழகான இளம் மங்கை. விலைமகள் என்று அழைக்கப்படுபவள். ஒரு வாலிப வயது சாது தன் வீட்டை நோக்கி வருவதைக் கண்ட அவள் அதிர்ந்து போனாள். “நில்லுங்கள். இங்கே வர வேண்டாம். தவறான இடத்துக்கு வருகிறீர்கள். இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல!” என்று தடுக்கப் பார்த்தாள். ஆனால் நான் தொடர்ந்து அவள் வீட்டை நெருங்கினேன். அவள் வீட்டுக் கதவை மூடிவிட்டு, தடித்த, பெரிய மீசையோடு கூடிய வலிமை பொருந்திய வேலைக்காரன் ஒருவனை அழைத்து என்னை விரட்டும்படி ஆணை இட்டாள். அவன், ” இளைய சாதுவே! திரும்பி போ! இப்படிப்பட்ட இடத்திற்கு நீ வரக் கூடாது” என்று உறுதிபடக் கூறினான்.

“இல்லை. அப்பெண்ணை நான் கட்டாயம் பார்க்க வேண்டும். அவள் என் தாய்க்கு சமம். அவள் எனக்கு செய்த உதவிக்கு நன்றி கூற வந்துள்ளேன். அவள் தன்னுடைய பாடலால் என்னை எச்சரித்திருக்காவிட்டால் நான் என் சாதனையை பூர்த்தி செய்திருக்க மாட்டேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் கழிக்க வேண்டி இருந்திருக்கும்” என்ற என் வார்த்தைகளைக் கேட்ட அம்மங்கை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். “நீ உண்மையிலேயே என் அம்மாதான்” என்று நாத்தழு தழுக்க நான் அவளை வணங்கினேன்.

நடந்ததை எல்லாம் அவளிடம் விவரித்தேன். அவள் என் குருநாதரின் பெயரை அறிந்திருந்தாள். நான் புறப்பட எழுந்த போது “உண்மையாகவே இனி நான் உங்கள் தாயாகவே வாழப் போகிறேன். உங்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் தாயாகவே வாழப் போகிறேன். எனக்கு விழிப்படையும் நேரம் வந்து விட்டது. I am inspired” என்றாள் உணர்ச்சி பூர்வமாக.

மறு நாளே அவள் இந்தியாவின் கல்விக்கூடமான வாரணாசியை சென்றடைந்தாள். அங்கே அவள் ஒரு படகு வீட்டில் வாழ்ந்து கொண்டு மாலை நேரத்தில் கங்கைக் கரை மணலில் அமர்ந்து இறைவனின் பெயரைக் கூறி பாடுவாள். ஆயிரக்கணக்கான மக்கள் அவளுடன் சேர்ந்து பாடுவார்கள். அவள் தன் படகு வீட்டில் இவ்விதம் எழுதி இருந்தாள், “என்னை சாத்வியென்று தவறுதலாக எண்ணி விடாதீர்கள். நான் ஒரு விலைமகளாக இருந்தவள். என் பாதத்தை யாரும் தொட வேண்டாம்”. அவள் யாரையும் நேருக்கு நேராக பார்ப்பதில்லை , யாருடனும் பேசுவதில்லை. யாரேனும் அவளுடன் பேச விரும்பினால், அவள் கூறுவது இதுதான், “என்னுடன் அமர்ந்து இறைவனின் நாமத்தை ஓதுங்கள்”. யாரேனும் “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “ராமா’ என்பதே அவள் பதில். வேறு யாரேனும், “உங்களுக்கு ஏதாவது தேவையா? ஏதேனும் கொண்டு தரட்டுமா?” என்று கேட்டாலும், “ராமா” என்பதை தவிர வேறு பதில் அவளிடமிருந்து வராது.

ஒரு நாள் ஐந்து அல்லது ஆறாயிரம் மக்களின் முன்னிலையில் அவள் அறிவித்தாள், ” நாளை விடியற்காலையில் நான் உடலை பிரியப் போகிறேன். என் உடலை தயவு செய்து மீன்களுக்கு உணவாக நீரில் வீசி எரிந்து விடுங்கள்” என்று கூறி விட்டு மவுனமானாள். மறுநாள் அவள் கூறியபடியே உடலை விட்டுப் பிரிந்தாள்.

விழிப்புணர்வு வரும் போது நம் கடந்த கால வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு முழுமையாக நம் குணத்தை மாற்றிக் கொள்ளமுடிகிறது. உலகின் மிக உயர்ந்த முனிவர்கள் முதலில் மிகவும் கெட்டவர்களாக இருந்தவர்கள் தாம். உதாரணத்திற்கு “சவுல்” (Saul) என்பவர் பின்னாளில் “புனித பால்” ஆக மாறினார். டெமாஸ்கசுக்குப் போகும் வழியில் திடீரென்று சவுலுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு அவர் இயல்பு முழுமையாக மாறிவிட்டது. ராமாயணத்தின் ஆசிரியரான வால்மீகிக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

உங்களை நீங்களே குறை கூறிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு தீயவராகவோ, சிறியவராகவோ உங்களை நீங்கள் எண்ணிக் கொண்டாலும் உங்கள் முழு குணத்தையும் மாற்றி கொள்வதற்கு கட்டாயம் உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும். உண்மையான ஆன்மீக சாதனையாளர், நிச்சயம் தளைகளில் இருந்து பந்தங்களில் இருந்து விடுதலை அடைந்து உண்மைத் தத்துவத்தை அடைவார். ஒரே ஒரு க்ணத்தில் நம்மை நாம் உணர முடியும்.

A true seeker can always realize the reality and attain freedom from all bondage and miseries. In just one second you can enlighten yourself.

LIVING WITH HIMALAYAN MASTERS – SPIRITUAL EXPERIENCES OF SWAMI RAMA.
Page 165 – My experience with a dancing girl.

  • தமிழாக்கம் – ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version