June 19, 2021, 2:23 pm
More

  ARTICLE - SECTIONS

  ராம நாமத்தால் கட்டுண்ட ஈசன்!

  மகேசுவரா ! ஸ்ரீ ராமன் கடவுள் என்றால் நரர்களுக்கான அசுவமேத யாகம் செய்வதேன் ? என்னுடைய ஆண்மைக்கும் வீரத்திற்கும் களங்கம் உண்டாகும்படி நான் பணிந்து செல்ல விரும்பவில்லை.

  sivan
  sivan

  அயோத்தியை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆண்டுவரும் காலத்தில் உலக நன்மை குறித்து அசுவமேத யாகம் செய்ய முடிவு செய்தார். அதன் பொருட்டு அசுவமேதக் குதிரையும் நாடுகளை சுற்றி வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு அசுவமேதக் குதிரை வலம் வரும்பொழுது ஒரு நதியில் இறங்கி சற்றைக்கெல்லாம் அனைவரது பார்வையிலும் இருந்து மறைந்தது. அது மறைந்த வழியே தேடிச் சென்ற அனுமன், சத்ருக்கனன், மந்திரி சுமதி ஆகியோர் அங்கு ஒரு ஒளி பொருந்திய நகரத்தையும் அந்நகரின் நடுவே ஒரு பெண் தவசியையும் கண்டனர். அத்தவசியிடம் அனுமர் தாங்கள் வந்த காரணத்தைக் கூறி ஸ்ரீ ராமபிரான் காரியமாக வந்ததாகவும் கூறினார். அவ்வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த தவசி பின் வருமாறு பதில் உரைத்தார்.

  ” ஆஞ்சனேயா ! இதுவரை உங்களுக்குச் சிரமம் இல்லை. இனிமேல்த்தான் சிரமங்கள் வரக்கூடும். உங்களை எச்சரிக்கவே குதிரையை இங்கு வரவழைத்தேன். வீரமணி என்ற மகாவீரன் ஒருவன் இந்தக் குதிரையைக் கட்டிவிடுவான். அவனை வெல்வது உங்களால் முடியாது. ஆகவே, இந்த ராமகவசம் என்ற மந்திரத்தைக் கொண்ட அஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதைக் கொண்டு அவனை வெல்லலாம். ” என்று கூறி, அவ்வஸ்திரத்திற்கான மந்திரத்தையும் உபதேசித்தாள்.

  வீரமணி மகா சிவபக்தன். அவன் பக்திக்குக் கட்டுப்பட்ட ஈசுவரர் அவன் அரண்மனையிலேயே சான்னித்தியம் கொண்டிருந்தார். அவன் மைந்தன் ருக்மாங்கதன் தந்தையின் புகழுக்கேற்ப விளங்கிவந்தான். மிகுந்த பராக்கிரமசாலியாவான். தம் பட்டணத்திலே நுழைந்த அசுவமேதக் குதிரையை ருக்மாங்கதன் பிடித்துக் கட்டிப்போட்டு விட்டான். அவனிடம் வந்து அக்குதிரையை விடுமாறு கேட்டுக்கொண்ட சத்ருக்கனன் முதலியோரின் கோரிக்கையை மறுத்துத் தன்னிடம் போர் புரிந்து வென்றே அக்குதிரையை மீட்க முடியும் என்று கூறிவிட்டான். ” அடே, எங்கள் வலிமை உணராது சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறாய். ஸ்ரீ ராமனை பகைத்துக் கொண்டவன் ஒருநாளும் தப்ப முடியாது ” என்றான் சத்ருக்கனன் மகன் புஷ்கரன். ” என் தந்தையின் பிரதாபம் உங்களுக்குத் தெரியவில்லை போலும். என் தந்தையின் விருப்பத்திற்கிணங்கி ஈசன் எப்போதும் எம் அரண்மனையில் தங்கி இருக்கிறார். வீணாக உயிரை இழக்காதீர் ” என்றான் ருக்மாங்கதன். ” அடே, சிவபக்தனாகிய இராவணனைக் கொன்றவர் ராமர் என்பதை மறந்துவிடாதே. குதிரையை விடுகிறாயா அல்லது உன் தந்தையுடன் போருக்கு வருகிறாயா ? ” என்று கர்ஜித்தான் புஷ்கரன்.

  வீரமணி சிவ பூஜையில் இருந்தான். ஈசன் அவன் முன் தோன்றி, ஸ்ரீ ராமனிடம் விரோதம் கொள்வது தவறு என்றும், குதிரையை விட்டுவிடுமாறும் கூறினார். அதற்கு, ” மகேசுவரா ! எனக்குத் தாங்கள் அருளவேண்டும். ராமனுடைய சேனையை வெல்ல உதவ வேண்டும் ” என்று பிரார்த்தித்தான் வீரமணி. ” பக்தனே, உன் கோரிக்கை எனக்கு விசித்திரமாகப் படுகிறது. பேதமையால் நீ இவ்வாறு கேட்கிறாய். யார் யாரை எதிர்ப்பது ? ராம சேனையுடன் யுத்தம் செய்வது ராமனுடன் யுத்தம் செய்வது போன்றே ஆகும், அவ்வாறு அபவாதம் செய்வதற்கு என் உதவியை நீ கேட்கலாமா ? எவ்வாறு சிவத்திற்குள் சக்தியும் அடக்கமோ அவ்வாறே விஷ்ணுவும். நீ கேட்கும் வரத்தில் எவ்வித நியாயமும் இல்லையே ” என்று கேட்டார் ஈசன்.

  ” மகேசுவரா ! ஸ்ரீ ராமன் கடவுள் என்றால் நரர்களுக்கான அசுவமேத யாகம் செய்வதேன் ? என்னுடைய ஆண்மைக்கும் வீரத்திற்கும் களங்கம் உண்டாகும்படி நான் பணிந்து செல்ல விரும்பவில்லை. எனக்குத் தாங்கள் உதவி செய்துதான் ஆகவேண்டும். என்னைக் கைவிட்டு விடாதீர்கள். நான் யுத்தம் செய்வதென்று தீர்மானித்துவிட்டேன்.அந்த முடிவிலிருந்து என்னைப் பின்வாங்கச் செய்யாதீர்கள் ” என்று மன்றாடினான் வீரமணி.

  அவனுடைய உறுதியைக் கண்ட ஈசன் ஸ்ரீ ராம தரிசனத்தை அவனுக்குக் கிடைக்கச் செய்து அவனை ராம பக்தனாக்கி, அவனுக்கு உண்மையை உணர்த்த முடிவு செய்தார். வீரமணி பூஜையை முடித்துக்கொண்டு வீரர்களுடன் யுத்தத்திற்கு வந்தான். இருபடைகளும் மிக உக்கிரமாக மோதின. ஆஞ்சனேயர் மிக உக்கிரத்துடன் போர்க்களத்தில் புகுந்து ருக்மாங்கதனையும் அவன் வீரர்களையும் அடித்துத் தள்ளினார். வீரமணியோ தன் அஸ்திர மழையால் சத்ருக்கனன், புஷ்கரன் ஆகியோரை திக்குமுக்காடச் செய்தான். வீரமணியின் வேகம் அதி உக்கிரமாவதைக் கண்ட சத்ருக்கனன் தான் முன்னர் தவசியிடம் பெற்ற ராமபாணத்தால் அவனின் மார்பில் தாக்கி மூர்ச்சையாக்கினான்.

  பக்தன் படுகளத்தில் வீழ்ந்ததைக் கண்ட ஈசன் சக்தியுடனும், வீரபத்ரருடனும் யுத்தகளம் புகுந்தார். சத்ருக்கனன் ஈசனை எதிர்த்தான், புஷ்கரன் வீரபத்ரரை எதிர்த்தான், ஆஞ்சனேயர் சக்தியுடன் போர் புரிந்தார். யுத்தபூமி உக்கிர பூமியானது. ஈசனின் சினத்திற்கு முன் சத்ருக்கனன் எம்மாத்திரம். நொடிப்பொழுதில் நினைவிழந்து வீழ்ந்தான், அதே நிலையே அவன் மனுக்கும் ஏற்பட்டது வீரபத்ரரால். அவர்கள் இருவருடைய நிலையையும் கண்ட ஆஞ்சனேயர் தாமும் அக்கதிக்கு ஆளாக விரும்பாமல் தேவியிடம் இருந்து விலகி ஈசனிடம் வந்து அவரை துதித்தார்.

  ” மகேசுவரா ! சத்ருக்கனன் தம்முன் எம்மாத்திரம் ? அவனை வீழ்த்துவதால் உங்களுக்கு பெருமை உண்டாகுமோ ! தங்களின் ருத்திர ரூபமான என்னை வீழ்த்துங்கள் ” என்று சொல்லி இராம நாமத்தை ஜெபித்தபடி ஈசன் முன் இரு கைகளையும் கட்டியபடி நமஸ்கரித்து நின்றார். அமிர்தத்திற்கு நிகரான ராம நாமத்தில் ஈசன் நொடிப்பொழுதில் தம்மை மறந்தார். அவர் சினம் சடுதியில் அடங்கியது. ” ஆஹா ! மாருதியின் சாமர்த்தியம் தான் என்னே ! ” என்று வியந்த ஈசன் அனுமரைத் தொட்டு உலுக்கினார்.

  ” ஆஞ்சனேயா ! வீரமணி பக்தியால் என்னைக் கட்டிவிட்டான், நீயோ இப்போது என்னை ராம நாமத்தால் கட்டுப்படச் செய்துவிட்டாய், இருவராலும் கட்டுண்டு நிற்கிறேன் நான். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ” என்றார் ஈசன். ” கைலாசநாதா ! எனக்குத் தங்கள் அனுக்கிரகம் தான் வேண்டும். என்னைத் தடுக்காது அனுமதி கொடுங்கள். சஞ்சீவி பர்வதம் எடுத்துவந்து சத்ருக்கனனையும் மற்றவரையும் எழுப்புகிறேன். அதுவரை தாங்கள் இங்கேயே இருக்கவேண்டும்.” என்று வேண்டினார் அனுமன். ” பக்தா ! உன் வேண்டுகோளின்படி நான் இங்கேயே காத்திருக்கிறேன் ” என்று கூறி அருளினார் ஈசன்.

  பர்வத மலையை எடுக்க முயன்ற அனுமரைத் தடுத்த இந்திரனுடைய சேனையை அடித்து விரட்டி மலையை எடுத்துப் புறப்பட்டார் மாருதி. சினம் கொண்ட இந்திரன் வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் அனுமனைத் தாக்க. எதிரில் வந்த பிரகஸ்பதி ” இந்திரா ! என்ன காரியம் செய்யத் துணிந்தாய் ! பழையன மறந்து விட்டதா உனக்கு ? அனுமனிடம் உன் ஆயுதம் பலிக்குமா ? அதைவிட முக்கியம் அனுமன் எத்ற்காக அம்மலையை எடுத்துச் செல்கிறார் என்று உணர்ந்தாயா ? ராம காரியத்திற்காக எடுத்துச் செல்லும் அவரை தடுக்க உன்னால் இயலுமா ? இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் அனுமனின் வரவை எதிர்பார்த்து யுத்த களத்தில் காத்திருப்பது தேவதேவராகிய ஈசுவரர். வீணாகப் பதட்டத்தில் ஏதாவது செய்து ராமர், ஈசுவரர் இருவருடைய கோபத்திற்கும் ஆளாகாதே ! என்று அறிவுரை கூறினார்.

  யுத்த களத்தை அடைந்த அனுமன் மலையை இறக்கி வைத்தார். ஆனால் ஈசுவரரோ அதுகண்டு நகைத்தார். சிவனாரின் நகைப்பு அனுமரை சிந்திக்க வைத்தது. அனுமருக்கு அதன் உட்பொருள் விளங்கிவிட்டது. ” மகேசுவரா ! என் அறியாமையை பொறுத்தருளுங்கள். மகத்தான ராம நாமம் இருக்கும் போது அறிவிலியாய் நான் சிரமப்பட்டு மலையை எடுத்து வந்தது எத்துனை அபத்தமானது ! எப்படிப் பட்ட தவறை செய்துவிட்டேன் ” என்று கூறி வருந்திய மாருதி கண்மூடி ஸ்ரீ ராமரைத் தியானித்து ராம நாமத்தை ஜெபித்தபடி அனைத்து வீரர்களையும் எழுப்பினார்.

  பரமேசுவரர் மறுபடியும் தம் வில்லில் நானைச் சுண்டி சப்தத்தை உண்டாக்கினார். அனைவரையும் ராம நாமத்தை ஜெபிக்கும்படி சொன்னார் ஆஞ்சனேயர். யுத்தகளத்தில் ராம நாம கோஷம் வான்முகடு வரை எழுந்து எதிரொலித்தது. பார்த்தார் ஈசன், ராம நாமத்தைக் கேட்கக் கேட்க அவர் மனம் மகிழ்ச்சியில் லயித்ததே தவிர யுத்தம் செய்ய முயலவில்லை. ஈசன் மனதில் நினைத்ததுமே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி யுத்த களத்தின் நடுவே பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, தர்ப்பையும் பவித்திரமும் கைவிரல்களில் தரித்து யாகதீட்சையோடு தரிசனம் தந்தார். ஈசன் வீரமணியை எழுப்பி ராமபிரானை தரிசிக்கும்படி கூறினார். அந்த திவ்ய மங்கள ரூபத்தைக் கண்ட வீரமணி பக்தி பொங்க பரவசத்தோடு கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். ” பிரபோ ! தங்கள் தரிசனம் பெற்றதோடல்லாமல் தங்களுக்கும் தாசனாகும் பாக்கியம் பெற்றேன். என்னை மன்னித்தருளவும் ” என வேண்டி ஈசனையும் ராமரையும் வணங்கினான். ஸ்ரீ ராமரும் அவனிடம் அன்பு கொண்டவராய் என்றைக்கும் தம்மிடம் பக்தி குன்றாதிருக்க அருள் செய்தார். 

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,256FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-