Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் உலகம் பொய்யானது: ஆச்சார்யாள் அருளுரை!

உலகம் பொய்யானது: ஆச்சார்யாள் அருளுரை!

ஒரு சிறுவன் தன் தாயிடம் எனக்கு கதை கேட்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சொல்வாயா என்று கேட்டான். தாய் அவனுடைய ஆசைக்கு சம்மதித்து சுவாரசியமான ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

இல்லாத ஒரு நகரத்தில் அழகான மூன்று இளவரசர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் துணிவுடனும் நேர்மையுடனும் விளங்கினார்கள். அவர்கள் இருவர் பிறக்கவே இல்லை மூன்றாவது இளவரசனும் தன் தாயின் கருப்பையை அடைய வில்லை. வாழ்வில் உன்னதமானதை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் அவர்கள் மூவரும் ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். நன்கு பழுத்த கனிகள் ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் வழியில் பார்த்தார்கள். விதவிதமான கனிந்த சுவையான பழங்களை அம்மரங்களில் இருந்து அவர்கள் பறித்து உண்டு மகிழ்ந்தார்கள். தங்கள் பயணத்தை தொடர்ந்த அவர்கள் சிற்றலைகளோடு விளங்கிய அழகான மூன்று நதிகளைக் கண்டார்கள். அவற்றுள் இரண்டு நதிகளில் ஒரு சொட்டு நீரும் இல்லை. மூன்றாவது நதி முழுவதும் வற்றிப் போயிருந்தது. வற்றிப்போன நதியில் அவர்கள் மூவரும் குதித்து விளையாடினார்கள். பிறகு அந்த நீரை அவர்கள் ஆசை தீர பருகிவிட்டு பெரிய நகரத்தை சென்றடைந்தார்கள்.

உருவாகவே இல்லாத அந்த நகரத்தில் மக்கள் எல்லோரும் ஆடிப்பாடி பேசி கழித்துக் கொண்டிருந்தார்கள். விசாலமான நகரத்தில் அவர்கள் மூன்று அழகிய மாளிகைகள் பார்த்தார்கள் மூன்றில் இரண்டு மாளிகைகள் கட்டப்படவில்லை மூன்றாவது மாளிகையில் தூண்களும் சுவர்களும் தென்படவில்லை இவர்கள் மூவரும் மூன்றாவது மாளிகையினுள் நுழைந்து பார்த்த பொழுது அவர்களுக்கு மூன்று தங்கப் பாத்திரங்கள் கிடைத்தன. அவற்றுள் இரண்டு பாத்திரங்கள் நொறுங்கிப் போயிருந்தன. மூன்றாவது பாத்திரம் பொடிப்பொடியாக இருந்தது. 100 பிடி அரிசியிலிருந்து 100பிடி அரிசியை எடுத்து விட்டு மீதி அரிசியை அவர்கள் மூன்றாவது பாத்திரத்தில் இட்டு நிரப்பினார். அதை சமைத்து வாய் இல்லாத போதிலும் சாப்பாட்டு பிரியர்களாயிருந்த எண்ணற்ற பிராமணர்களுக்கு அவர்கள் விருந்தளித்தார்கள். மீதி இருந்த அன்னத்தை அவர்கள் உண்டு தங்கள் பசியை ஆற்றிக் கொண்டார்கள்.

தோன்றவேயில்லாத நகரத்தில் மூன்று ராஜகுமாரர்களும் வேட்டையாடியும் மற்ற கேளிக்கைகளில் ஈடுபட்டும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள்.

தாயின் கதையை சிறுவன் மெய்மறந்து கேட்டால் அவனுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. கதையில் வந்த நிகழ்ச்சிகள் யாவும் பொருத்தமற்றவை என்று அவனுக்கு சிறிதும் தோன்றவே இல்லை. அவனை பொறுத்தவரையில் ஏதோ ஒரு காலத்தில் நடந்த உண்மையான சம்பவம் தான் தாய் தனக்கு கூறியிருக்கிறாள் என்று அவன் கருதினான். பகுத்தறிவற்ற குழந்தை எப்படி அந்த கற்பனையை உண்மை என நம்பி விட்டதோ அதே போல் ஞானம் அடையாத மக்களும் தங்கள் பார்த்துக்கொண்டும் நினைத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகத்தை சத்தியம் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். இப்பிரபஞ்சம் எல்லாமே வெறும் தோற்றம் தான் என்று அவர்கள் உணர்வதில்லை மனதில் எண்ண அலைகள் தோன்றும் போதும் மறையும் போதும் முறையே தோன்றி மறையும் பிரபஞ்சத்திற்கு சுத்த சைதன்ய சொரூபமாக விளங்கும் இரண்டற்ற பரமாத்மாவை விடுத்து தனியாக இருப்பு ஏதுமில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version