― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்தர்மத்தின் சூட்சமம் அறிந்து செயல்படு: ஆச்சார்யாள் அருளமுதம்!

தர்மத்தின் சூட்சமம் அறிந்து செயல்படு: ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -

பெற்றோர்களுக்கு ஒருவன் கீழ்படிதல் வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனினும் தந்தையின் கட்டளைகளும் தாயின் கட்டளைகளும் எதிர்மறையாக இருந்துவிட்டால் அப்பொழுது மிகவும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும். அவன் தாய் அல்லது தந்தையின் கட்டளைக்கு கீழ்படிந்தால் தந்தை அல்லது தாயின் கட்டளையை மீறியதாகி விடும். இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை ராமபிரான் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது. அவர் இந்த தர்ம குழப்பத்தை எப்படி தீர்த்தார்?

பட்டத்து ராஜாவாக ஸ்ரீராமருக்கு தசரதர் முடிசூட்ட போகிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட கைகேயியின் வேலைக்காரி மந்திரை ராமருக்கு எதிராக ராணியின் நெஞ்சில் நஞ்சை விதைத்தாள். ஆகையால் தசரதர் கைகேயியை பார்க்க சென்றபோது அவள் தனது ஆசையை நிறைவேற்றி தருவதாக சத்தியம் செய்து கொடுக்கும்படி கேட்டாள். அவளை சந்தேகப்பட தசரதர் அதற்கு சம்மதித்தார். பிறகு கைகேயி தனது கணவரின் வாக்குறுதிக்கு சாட்சியாக எல்லா தேவதைகளையும் கூப்பிட்டாள். முன்பு தனக்கு தசரதர் அளித்த இரண்டு வரங்களை அப்பொழுது கைகேயி கேட்டாள். பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இரண்டு வரங்கள் கேட்டாள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனதை மாற்றிக் கொள்ளுமாறு அவளிடம் மன்றாடினார் இதற்காக அவர் காலில் விழுந்து கெஞ்சினார். ஆனால் அவள் அவருக்கு இரக்கம் காட்ட மறுத்து விட்டாள். சொன்ன சொல் தவறாத உத்தமர் ஆன தசரதர் ராமரிடம் மிகுந்த பிரேமையை வைத்திருந்த போதிலும் கைகேயியின் கோரிக்கைகளை புறக்கணிக்க முடியாமல் தவித்தார். எனவே அவர் ராமனை அழைத்து வருமாறு சொன்னார்.

ராமர் தசரதர் அரண்மனைக்குச் சென்றபோது அங்கே அரசர் மிகவும் வருத்தத்தோடு இருந்ததை பார்த்தார். தந்தை அழைத்தத்திற்கான காரணத்தை கேட்டார். அப்பொழுது கைகேயி தசரதர் தனக்களித்த இரண்டு வரங்களை பற்றி ராமரிடம் தெரிவித்தாள். நிச்சயம் பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்வதாக அவளுக்கு ராமர் உறுதிமொழி அளித்தார். பிறகு கைகேயி யை பார்த்து நீங்கள் எனக்கு ஆணையிட்டு இருந்தாலே போதுமே நான் ராஜ்யத்தை சந்தோஷமாக பரதனுக்கு கொடுத்து இருப்பேனே அப்படி இருக்கையில் என் தந்தையின் ஆணை என்றறியும் போது அதுவும் தங்களின் திருப்திக்காக என்று இருக்கையில் நான் எவ்வளவு சந்தோஷத்துடன் இழக்க தயாராக இருக்கிறேன் தெரியுமா? தந்தையின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் எனக்கு இதில் வாய்ப்பு கிடைக்கிறதே என்று ராமர் கூறினார். நிலைமை இப்படியிருக்க தசரதர் பரதனுக்கு முடிசூட்ட போவதாக தம்மிடத்தில் நேரடியாகக் கூறாமல் கண்களில் நீர் மல்க தரையை உற்று நோக்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது மனம் மிகவும் வருவதாகக் கூறினார் ராமர். தாயாக இருக்கின்ற காரணத்தால் தந்தையைக் காட்டிலும் அவளுக்கு தம்மிடம் அதிகாரத்தை செலுத்த நிறைய உரிமை உண்டு என ராமர் கைகேயியிடம் கூறினார். நல்ல குணம் எதுவுமே தன்னிடம் இருக்க வாய்ப்பில்லை என அவள் நினைத்ததால் தான் தனக்கு நேரடியாக உத்தர விடாமல் தந்தையின் மூலமாக கூற வேண்டியதாயிற்று என நினைத்தார் ராமர். கௌசல்யாவிடம் சொல்லிக்கொண்டு அன்றைக்கே காட்டிற்கு புறப்பட போவதாகக் கூறி அவளுக்கு அவர் நம்பிக்கை ஊட்டினார்.

பிறகு ராமர் தனது தாயை காணச் சென்றார் அச்சமயம் அவள் காலை பூஜையில் ஈடுபட்டு இருந்தால் ராமரை பார்த்ததும் அவரை அன்பாக அணைத்துக் கொண்டாள். ராமர் நடந்த சம்பவங்களை மிகவும் மென்மையாக அவளுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் அவள் மூர்ச்சித்து கீழே விழுந்தாள். மயக்கம் தெளிந்ததும் நடந்த சம்பவத்திற்காக தனது கோபத்தை வெளிப்படுத்தினாள். கௌசல்யை அவரைப் பார்த்து உனது தந்தை உனக்கு எவ்வளவு பூஜிக்கத் தக்கவரோ அப்படியே உனது தாயான நானும். மேலும் ஒரு தாயின் கடமைகளை நான் மிகவும் அக்கறையுடன் செய்து வந்திருக்கிறேன். உன் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்து இருக்கிறேன். நீ காட்டிற்கு செல்ல கூடாது. அதற்கான அனுமதியை நான் உனக்கு தர மாட்டேன். இங்கேயே தங்கியிருந்து எனக்கு சேவை செய்வதன் மூலமாக தர்மத்தை அனுஷ்டி. பெற்ற தாய்க்கு செய்யும் சேவை மிக உயர்ந்த தர்மமாக செல்லப்பட்டுள்ளது.

காஷ்யப முனிவரின் மகன் வீட்டிலேயே தங்கி தனது தாயின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இதன் காரணமாக இறந்த பிறகு அந்த தபஸ்வி சொர்க்கத்திற்குச் சென்று சிருஷ்டித் தொழிலுக்கு அதிபதியான பிரஜாபதியின் ஸ்தானத்தை அடைந்தான். இந்த உலகத்தில் உள்ள எல்லாஜீவராசிகள் இடத்தும் தமது ஆதிக்கத்தை செலுத்தும் ஒரு பதவியை காட்டிலும் உன் அருகில் ஒரு மணி நேரம் இருப்பதையே நான் பெரிதாக கருதுகிறேன். மாறாக நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் நான் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கி விடுவேன். உண்மையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக சபதம் எடுத்துக் கொள்வேன் என்றாள். என் துயரங்களுக்கும் இறப்பிற்கும் நீதான் பொறுப்பு. இதனால் உனக்கு பெரும் பாவம் வந்து சேரும். சாமுத்ரா தனது சொந்த தாய்க்கு பெரும் துயரத்தை விளைவித்ததன் காரணமாக நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஆகையால் அவன் வழியை நீ பின்பற்றாதே என்று கூறினாள். வெளிப்படையாகவே ராமர் காட்டிற்கு செல்வதை தடுத்ததன் விளைவாக அவள் கட்டளையும் தந்தையின் கட்டளையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை ராமபிரான் சந்திக்க வேண்டியதாயிற்று.

தந்தை ஏற்கனவே இரண்டு வரங்களை அளித்து இருந்ததால் அவர் அவற்றை கொடுக்க வேண்டியதாயிற்று என்று ராமர் தன் தாய்க்கு எடுத்துக் கூறினார். கைகேயி கேட்ட வரங்கள் சக்கரவர்த்தியை பெரிதும் புண்படுத்தி இருந்தாலும் ராமரிடம் அவர் அளவு கடந்த அன்பு வைத்து இருந்த போதிலும் கொடுத்த வாக்கிலிருந்து பின் வாங்காத உத்தம சீலராக அவர் விளங்கியதால் கைகேயின் வார்த்தைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டியதாயிற்று. எனவே தசரதரின் செயல் தர்ம நெறிகளுக்கு உட்பட்டு இருந்தது. தந்தையின் சொற்படி நடப்பது ஒரு மகனின் கடமை. தர்மத்திற்கு விரோதமான சில கட்டளைகளை தந்தை கூறிய போதும் மகன் என்ற முறையில் அவற்றை அப்படியே கடைபிடித்து காட்டிய மகா புருஷர்களும் இருந்தார்கள். உதாரணத்திற்கு பசுவைக் கொல்வது பாவச் செயல் என்று அறிந்திருந்தும் காண்டு மகரிஷி தனது தந்தையின் கட்டளைக்கிணங்க பசுவைக் கொன்றார். அதே போல் சித்ரரதன் என்ற அரசனின் மேல் மையல் கொண்ட காரணத்திற்காக தந்தையின் ஆணைப்படி தனது சொந்த தாயான ரேணுகாவை பரசுராமர் கொன்றார். இவ்வாறு இருக்கையில் தசரதரின் ஆணையை மகன் என்ற ரீதியில் ராமர் கடைபிடித்தல் எல்லா விதத்திலும் நியாயமே.

கௌசல்யையின் கட்டளைகள் தவறானவை என்று ராமர் அவளுக்கு எடுத்துரைத்தார். தர்ம மார்க்கத்தில் கணவன் செல்லும் பொழுது அவருடன் சேர்ந்து இருப்பது தான் ஒரு பத்தினிக்கு அழகு. கணவனை பின்பற்றி வரும் தர்மத்தை செய்ய விடாமல் அவள் தடுப்பது தவறு என்று ராமர் எடுத்துரைத்தார். தசரதர் ஒரு சக்கரவர்த்தியாய் இருந்ததால் நாட்டு பிரஜைகள் எல்லோரும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்பது நியதி. அவருடைய கட்டளைகளை தான் மட்டுமின்றி அவளும் மரியாதை கொடுக்கவண்டும் என்று கூறினார். ராமர் தந்தையின் கட்டளை தர்மத்திற்கு உட்பட்டு உள்ளது என்றும் தாயின் கூற்று அவ்வாறு இல்லை என்பதையும் விளக்கினார்.

தந்தையின் ஆணைப்படி தாம் காட்டிற்கு செல்வது தான் உயர்ந்த தர்மம் என்று முடிவெடுத்தார் ராமர். கௌசல்யாவை தான் காட்டிலிருந்து திரும்பி வரும் வரையில் காத்திருக்குமாறு வேண்டிக்கொண்டார். ராமரின் விளக்கத்தைக் கேட்டு சாந்தமான கௌசல்யை அவர் கருத்தை ஏற்றுக் கொண்டாள். எனினும் தான் ராமனுடன் காட்டிற்கு வரப் போவதாக கூறினாள். நீதிநெறி தவறாத உத்தமரான கணவரை உதாசீனப்படுத்திவிட்டு காட்டிற்கு வந்து மகனான தம்முடன் வசிப்பது தர்மம் ஆகாது என்று மீண்டும் ராமர் எடுத்துரைத்தார். வரப்போகும் மரணத்தின் நிமித்தம் அவர் ஏற்கனவே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். போதாதற்கு கைகேயியின் நம்பிக்கை துரோகத்தால் மனமுடைந்து காணப்படுகிறார். இத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் அவள் விட்டுப் பிரிந்து சென்றால் மிகவும் கொடூரமான செயல் அது. அவள் அவரை பிரிவதால் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் கௌசல்யாவிற்கு ராமர் எடுத்துக் கூறினார். ராமரின் விளக்கத்தைக் கேட்டு திருப்தி அடைந்த கௌசல்யா அவரை மெச்சி முழுமனதுடன் தனது ஆசீர்வாதங்களை அவருக்கு அளித்தார். மகனே தடுமாற்றம் அற்ற மனதுடன் செல்வாய் எந்த தர்மத்தை நீ முனைப்புடன் கடைபிடிக்கிறாயோ அது உன்னைக் காப்பாற்றட்டும். உனது சத்தியத்தால் காப்பாற்றப்பட்டு நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாயாக. காட்டில் சுற்றித் திரியும் போது நீ உன் தாய் தந்தைக்கு ஆற்றிய சேவைகளால் மகிழ்ச்சியுற்ற தேவதைகள் உனக்கு எப்பொழுதும் சந்தோஷத்தை கொடுக்கட்டும். உனது வருகைக்காக அயோத்தியில் நான் ஆவலுடன் காத்து இருப்பேன் என்று கூறினாள் தாயின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதும் அவள் பாதங்களில் விழுந்து வணங்கி விடைபெற்றுக் கொண்டார் இராமர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version