கருணைக் காஞ்சி – கனகதாரை – பாகம் 1

  கனகதாரை எனில் மகாலக்ஷ்மி நினைவே வரும். ஒரு மகாலக்ஷ்மியம்மாள் இந்த உலகு முழுவதற்கும் ஈய்ந்த கருணை – ஞானக் கனகதாரைதான் ஸ்ரீ மகா பெரியவாள். அவரது பீடாதிபத்தியப் பொன்விழாவையொட்டி அவருக்குக் காஞ்சியில் கனகாபிஷேகம் செய்தபோது அவர் காஞ்சிக்கும் கனகதாரைக்கும் உள்ள பொருத்தத்தை அவருக்கே உரிய அரிய பார்வையில் கண்டு, அவையோருக்குப் பொன்னுரையாக வழங்கினார். காஞ்சி பீடத்தின் ஆதாரசக்தியான அம்பிகை, அப்பீடத்தைப் புதுப்பொலிவோடு நிறுவி, தாமே அங்கு புதிதாக உள்ள கனகதாரைத் தொடர்பை எடுத்துரைத்தார். பாலப் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் ஸ்ரீசங்கரர் பிக்ஷை எடுத்தபோது ஒரு த்வாதசி அன்று ஒரு ஏழை அந்தண மாடு அவருக்கு ஈய ஏதுமில்லையே என்று தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து,த்வாதசிப் பாரணைக்கு என்று வைத்திருந்த ஒரே ஒரு பண்டமான அழுகல் நெல்லிக்கனியை பிக்ஷையிட்டாள். அதைக் கண்டு உருகியே கருணைச் சங்கரர் திருமகளைத் துதித்து அவளுக்குக் கனகதாரையை பொன் நெல்லிக்காய் மழையாக வரவழைத்துக் கொடுத்து விட்டார் என்று நயமுரக் கூறினார். ஏழை மாதின் அன்பு கண்ணீர் தாரையாகவும், அருளாளர் சங்கரரின் கருணை கனகதாரையாகவும் ஆனதைக் காட்டினார். முன்வினைப் பாபந்தான் அவளை வறுமையெனும் வெப்பத்தால் பொசிக்கிற்று என்றாலும் கூட, கருணை என்ற காற்றில் திருமகள் கடாக்ஷ முகிளை அவளிடம் தள்ளிவந்து திரவிய மழை பொழிய வேண்டும் என பாலா சங்கரர் வேண்டியதைக் குறிப்பிட்டார். வாழ்க்கை தொடக்கத்தில் இவ்வாறு கருணைக் கனகதாரை பெருக்கிய அந்த பாலா பிரஹ்மச்சாரியே ஸன்னியாசச் சக்கரவர்த்தியான ஸ்ரீ சங்கர ஜகத்குருவான பின் வாழ்க்கையின் இறுதியில் இந்தக் காஞ்சிக்கு வந்த பொது, உக்ர ரூபிணியாக இருந்த காமாக்ஷியை அனுக்ரஹ மூர்த்தியாக்கிக் கருணை தாரை பொழிய வைத்ததையும் சொன்னார். அதோடு நில்லாமல், அபூர்வமான பூர்வ கதையொன்றும் சொல்லி அந்தக் காமாக்ஷியும் கனகதாரை பொழிந்திருப்பதை விவரித்து அவையோரைப் புளகிக்க வைத்தார். காமக்ஷியின் உக்ரகோபம் ஓர் இடைக்காலத்தே அவைதிகப் புற மதத்தாரின் வழிபாட்டால் ஏற்பட்டதுதான். அதற்கு முன் அவள் கருணைத் தாயகத்தான் இருந்தாள். கண்ணோக்கால் மக்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேற்றுவதாலேயே “காமாக்ஷி” என்ற நாமம் பெற்றவள் வேறப்படி இருந்திருபாள்.? அப் பூர்வக்காலத்தில் காஞ்சியைச் சூழ்ந்த தொண்டை மண்டலத்தில் பஞ்சம் மக்களை வருத்திற்று. மக்களின் பாபம்தான் இப்பஞ்சத்திற்குக் காரணம் – அந்தண மாதின் பாபமே அவளுடய வறுமைக்குக் காரணமானது போல, அப்படி இருந்தும் அன்னையாரான லக்ஷ்மியும், காமாக்ஷியும் ஓர் அளவுக்கு மேல் மக்களின் துயரம் சென்றபோது கர்மத்தை மன்னித்துக் கருணை காட்டினர். அந்தண மாது ஒருத்திக்கு மட்டும் லக்ஷ்மி கனகதாரை வர்ஷித்தாள் எனில் காமாக்ஷியோ தொண்டை மண்டலம் முழுவதும் அப்பகுதி மக்களுக்கென பொன்மழை பொழிந்தாள். இதற்கு மேலும் ஒன்று காமாக்ஷியின் பெருமையைத் தெரிவிப்பதாக எடுத்துக் காட்டினார் நமது ஆச்சாரியப் பெருமான். பொன்னை மாத்திரம் கொடுத்தால் போதாது; அது மீண்டும் மக்களைப் பாபத்தில் தூண்டினாலும் தூண்டும்** என்று காமாக்ஷி அன்னை எண்ணி இயற்கையாகவே கோணல் வழியில் செல்லும் மக்களின் பாபப் போக்கையே நீக்கி, ஞானச் செல்வமான “ப்ராதிப ஸ்ரீ”யை அவர்களுக்கு வளப்புடன் அளித்து அதன் பின்னரே தொண்டை மண்டலம் முழுவதும் கனகதாரை வர்ஷித்தாளாம்! பொன்மழை போலவே இந்த அறிவுக் கொடையையும், விடாமற் பெய்யும் பெருமழையாகப் பெய்தாளாம் – அலுப்பு சலிப்பு இல்லாமல் பெய்தாளாம்! இவ்வபூர்வ விருந்தாந்தத்தைக் காமாக்ஷி மீது ஸ்ரீமுககவி பாடிய ஐநூறு அமுதப் பாக்கள் கொண்ட “மூக பாஞ்சசதீ”யின் ஆதாரத்திலேயே கூறிய நமது ஸ்ரீசரணர் அந்த ச்லோகத்தையும் மதுரமாக ஓதினார். பொருட்செல்வம், அறிவுச்செல்வம் இரண்டும் பெறப் பாராயணம் செய்யவேண்டிய ச்லோகம் இது என்று ஸ்ரீசரணாள் கூறுவார். கண்டகீக்ருத்ய பிரக்ருதி குடிலம் கல்மஷம் ப்ராதிபஸ்ரீ- கண்டீரத்வம் நிஜபதஜூஷாம் சூன்யதந்த்ரம் திசந்தீ| துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டி-ப்ரதாத்ரீ சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ரசூடால சூடே|| (தனது திருவடியை அண்டிய மக்களின் இயற்கையிலேயே வக்கிரமான பாபப் போக்கை கண்டனம் செய்து அருவிச் செல்வத்தின்  நிறைவைச் சோம்பலின்றி வழங்கிக் கொண்டு “துண்டீரம்” என்னும் தொண்டை மண்டலமான மகிமை வாய்ந்த நாட்டில் பொன்மழை பொழியும் சண்டிகா பரமேச்வரி சந்த்ர மௌலீச்வரனிடம் ப்ரேமை புரிகிறாள்.) **தைத்திரீய உபநிஷத்தில் முதலில் அறிவை வேண்டி, அதன்பின் பொருட் செல்வம் அருள வேண்டியிருப்பதையும், அதற்குப் பொன் மழை பொழிவித்த ஆசார்யாளே தமது பாஷ்யத்தில் “அறிவற்றவரிடம் பொருள் சேர்ந்தால் அனர்த்தமேயாகும்.” என்று விளக்கம் தந்திருப்பதையும் ஸ்ரீ மஹாபெரியவாள் எடுத்துக்காட்டுவார். .-. மழை வர்ஷிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
66FollowersFollow
0FollowersFollow
2,821FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-