ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். (19)
பொருள்
கண்ணா, தூப தீபங்களுக்கு மத்தியில், தந்தத்தால் ஆன கட்டிலின் மீது விரிக்கப்பட்டுள்ள மென்மையான பஞ்ச சயனத்தின் மீது பள்ளிகொண்டிருக்கும் நப்பின்னையை மார்போடு மார்பாக அணைத்தவாறு உறங்குபவனே, உன் திருவாய் மலர்வாயாக! அழகிய கண்களை உடைய பிராட்டியே, நாங்கள் வரம் கேட்டு வந்திருக்கிறோம். பரந்தாமனோ சோதித்து விளையாடுபவன். அதனால் உறக்கத்தில் இருப்பதாக நடிக்கிறான். இது அவன் இயல்பு. ஆனால் பக்தர்கள் அழைப்பதற்கு முன்னாலேயே அவர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் இயல்பு படைத்த தாயே, நாங்கள் உன் அறைவாசலுக்கு வந்த பின்னரும் பரந்தாமனை எழுப்பாமல் இருக்கிறாயே. அவனைப் போலவே நீயும் சோதித்து விளையாட ஆரம்பித்துவிட்டாயா? இது உன் இயல்புக்கு விரோதமானது அல்லவா? உனக்கு இது தகுமா?
அருஞ்சொற்பொருள்
கோட்டுக் கால் கட்டில் – யானைத் தந்தத்தால் செய்த கால்களை உடைய கட்டில்
பஞ்ச சயனம் – ஐந்து பொருட்களால் (பஞ்சு, பட்டு, மென்மையான கம்பளம், மலர், தளிர்) செய்யப்பட்ட படுக்கை
கொத்தலர் பூங்குழல் – கொத்துக் கொத்தாக மலர்களைச் சூடிய பூங்குழல் (மென்மையான கூந்தல்)
கொங்கை – திருமார்பு
மலர்மார்பன் – விரிந்த மார்பை உடையவன், மலர் போன்ற மென்மையான மார்பை உடையவன்
மைத்தடங்கண்ணினாய் – மை தீட்டிய பெரிய கண்களை உடையவளே
எத்தனை போதும் – எவ்வளவு நேரமானாலும்
துயிலெழ ஒட்டாய் – விழித்தெழ விட மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கிறாய்
பிரிவாற்றகில்லாயால் – பிரிவைத் தாங்க முடியாமல் இருக்கிறோம்
தத்துவம் – ஸ்வபாவம், இயல்பு
தகவு அன்று – பொருத்தமானது அல்ல
தத்துவம் அன்று தகவு = தத்துவத்துக்குத் தகவு அன்று
மொழி அழகு
பெருமானை எழுப்பாமல் எங்களைச் சோதிக்கிறாயே என்று தாயாரிடம் சிணுங்கும் வேளையில் ஆண்டாள், தாயாரை மைத்தடங்கண்ணி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்று வர்ணிப்பது கவனிக்கத் தக்கது. மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம் (கண்ணுக்கு மை தீட்டிக் கொள்ளாமல், தலையில் பூச்சுடாமல்) என்று பாவை விரதம் ஏற்றிருக்கும் கோபிகைகள் வந்திருக்கிறோம் என்பதை எவ்வளவு சூசகமாகத் தெரிவிக்கிறாள்!
ஆன்மிகம், தத்துவம்
தத்துவமன்று தகவு –
பெருமாளின் திருநாமங்களையும் அவனது மகிமைகளையும் ஆண்டாள் விவரித்துச் சொல்லும் அழகு அலாதியானது. அதேநேரத்தில், தாயாரைப் போற்றும் வரிகள் குறைவானவையே. இருந்தாலும், தத்துவமன்று தகவு என்ற இரண்டே வார்த்தைகளின் மூலம் தாயாரின் மகிமையை ஒட்டுமொத்தமாக விளக்கிவிடுகிறாள்.
‘அம்மா, அவன் மாயாவி. வேஷக்காரன். அவன் பக்தர்களைச் சோதிப்பான். அவனால் இப்படிக் கல்நெஞ்சனாக இருக்க முடியும். ஆனால், நீ தாயார் அல்லவா? நாங்கள் வருவதற்கு முன்பே உனது கருணை மழை எங்களை நோக்கிப் பாயுமே! பக்தர்களை உன்னால் எப்படிச் சோதித்து விளையாட முடியும்! ஆனால், நீயே இப்போது பெருமாளைத் துயில் எழுப்பாமல் தாமதப்படுத்தி எங்களைச் சோதிக்கிறாயே! இந்த மாயாவித்தனம் உனக்கு அழகல்ல’ என்பது இதன் விளக்கம்.
***
‘தாயாரைப் புருஷாகாரமாகக் கொண்டு’ என்பது வைணவத்தில் அடிப்படையான விஷயம். நாம் தாயாரைச் சரணடைவதன் மூலம் மட்டுமே பெருமாளின் அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாவோம் என்பது இதன் கருத்து. இந்தக் கருத்து திருப்பாவையில் அநேக இடங்களில் வலியுறுத்தப்படுவதை உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். எனினும், நப்பின்னை துயிலெழுப்பப்படும் பகுதியில் இது மிகவும் தூக்கலாகத் தெரிகிறது.
***
அரி துயில்வது அறிதுயில் என்பார்கள். உறக்கம் என்பது உணர்வுகளை மறந்த நிலை. ஆனால், அவனோ பரப்பிரம்மம். அவனுக்கு ஏது உறக்கம்? உண்மையில், சைதன்யனாகிய (அறிவு ஸ்வரூபியாகிய) அவன் மாயையால் மூடப்பட்டவனாக நமக்குக் காட்சி தருகிறான். இதுவே அறிதுயில். அதாவது, விழிப்புணர்வுடன் தூங்குவது .