பாகம் – 3 குட்டிக் கொள்ளும் போதே கணபதியையும், அவரது ஆவாஹன மந்திரத்தையும் நிப்பாட்டி விட்டு எங்கோ மேயப்போய்விட்டேனே என்று இப்போது என்னை நானே குறை சொல்லி, நொந்து கொள்ளப் போவதில்லை. சுவைக் குறைவான ஸ்ரீ மஹா பெரியவாளை இப்படித்தான் என்றில்லாமல் எப்படியோ ஒரு விதத்தில் சிந்தனையில் இருத்தி, அச்சுவையில் இதுதான் என்றில்லாமல் எதையும் ருசித்து இன்புறுவதுதான் நூலின் லக்ஷ்யம். எச்சுவையாயினும் அந்த இன்டரஸ்டிங் பெர்சனாலிடி குறித்தது ஆகையால் அதுவும் ஒன்று, ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்து நேராகவே இன்புறுத்தும், (ஆம், அவர் சராசரி மனுஷ்யராகத் தெரிவதுங்கூட “நம்மில் ஒருவரே” என்ற இறுக்க ஹவையே ஏற்படுத்தி இன்புறுத்தும். அஸாதாரணரின் ஸாதாரண நிலை என்பதாலேயே அதுவும் ரஸமாயிருக்கும்.) அல்லது அவர் சராசரிக்கும் கீழ் போல் காட்டி நொந்துகொள்ளும்போது நாமும் நோவுறுவதே நம் பாபத்தைச் சற்று கழுவி நமக்குத் தெரியாமலே நமது நித்திய இன்பத்திற்கு சற்று வழி திறந்து உதவும். பிற்பாடு,‘ஏனப்படிச் சொன்னார்?’ என்று யோஜிக்கும்போது ‘ஏன்’ என்று தீர்மானமாகப் புரிந்துதான் விடாது என்றாலும், புரியாததனாலேயே இன்டரஸ்டிங்காக இருக்கும்! ஆகையால், முக்யமாக ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டே இங்கு ஒவ்வொரு கட்டுரையும் எழுதப்பட்டிருக்கின்றதே அன்றி அவ்விஷயம் ஒன்றையே சொல்லவேண்டும் என்று இல்லை. அந்த நீரோட்டத்தில் இயல்பாக வேறு நதிகள் வந்து விழுவதற்கோ, பிரிவதற்கோ தடையில்லை. அந்த எல்லா நதிகளுக்கும் மூல நதி ஒன்றேயான அவர்தான் என்பதால். அவரும் அப்படித்தானே உபந்நியாசங்கள் செய்தார்? முக்யா விஷயம் என்று அவர் எடுத்துக் கொண்டு பேசியதில் எத்தனை வேறு விஷயங்களும் வந்து கலந்து பஞ்சாம்ருதமாக ஆகின? ஸ்ரீ சரணாளிடமே அனுமதி பெற்று அவரது வாழ்க்கை வரலாற்றை 1966 ஆகஸ்டில் ‘கல்கி’வெள்ளிவிழா இதழில் தொடராகத் தொடங்கினேன். ‘பூரணகும்பம்’ என்ற முகுடத்துடன் முகவுரை மட்டும் முதழிதலில் வெளிவந்தது. அடுத்து பிரஹ்மஸ்ரீ ஸாம்பமூர்த்தி சாஸ்திரியார் ஸ்ரீமடத்தில் இருந்து வந்தார். வேதாம்ருதம் போல் தொடங்கி அவர் கூறிய செய்தி விஷமாக முடிந்தது! இந்திர ஸரஸ்வதியார் வஜ்ராயுதம் ப்ரயோகம் செய்ததாகவே தோன்றியது! “கொழந்தை பூர்ணாகும்பம் குடுத்தான், வாங்கிண்டேன். அதுவே பூர்ணமா ரொம்பிடுத்து, மேற்கொண்டு தொடர் வரவேண்டாம்’னு உத்தரவாயிருக்கு” என்றார் ஸ்ரீ சாஸ்திரிகள். எனக்கு பேச்செழவில்லை. கலங்கிப் போன அந்நாள் கல்கி அதிபர் பவ்யமாக, “ஆசீர்வாதம் வாங்கிண்டு தானே ஆரம்பிச்சோம்?இப்ப வேண்டாம்-கிறதுக்கு என்னவாவது காரணம் சொன்னாளா? மறுபடி கேட்டுப் பாக்கலாம்னு தோன்றதா?” என்று கேட்டார். சாஸ்திரிகள் முதலில் கூறிய உத்தரவையே எழுத்துக்கெழுத்து திரும்பக்கூறி, “இவ்வளவுதான் சொன்னா, காரணம் ஒண்ணும் சொல்லலை. ஆனா, தீர்மானமா இப்ப இந்த தொடர் வேண்டாம்ங்ற அபிப்ராயத்துல இருக்கா-ன்னு மட்டும் தெரியறது. அவ்வளவு அவசரப்படுத்தி, ‘அடுத்த இஷ்யு வேலை இப்பவே ஆரம்பிச்சு நடந்திண்டிருக்கும், ஒடனே போய்ட்டு வா’ன்னு அனுப்பிசா” என்றார். வேறு வழியின்றி தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் அடுத்த இதழும் தயாராகிவிட்டிருந்தது. அந்நாள்களில் எந்த ஞாயிறின் தேதியை ஒரு கல்கி இதழ் தாங்கி வருமோ அதற்கு முந்தய வெள்ளி இரவே கடைசியாக அச்சாகும் இதழ்ப் பகுதியும் அச்சாகத் தொடங்கிவிடும், எனவே பூர்ணகும்ப முகவுரையை அடுத்து எழுதிய முதல் அத்யாயம் கல்கியில் வெளிவந்து விட்டது. அந்த அத்யாயம் “வெட்ட வெளிச்சமான ஒரு தூய வாழ்க்கை பிறந்து விட்டது போல் தோன்றுகிறது” என முடிகிறது. கதைக்குள் அடக்க முடியாத,அடைக்க முடியாத வெட்ட வெளிச்சமான அகண்டாகார வாழ்க்கை என்று சூசனை செய்வதுபோல் அல்லவா அவ்வாசகம் அமைந்துவிட்டது? ஏமாற்றத்துடன் – உண்மையைச் சொல்லணுமானால், கோபத்துடனேயே – அப்போது ஸ்ரீ காளஹஸ்தியில் இருந்த ஸ்ரீசரணர்களிடம் சென்றேன். அவரது வரவேற்புக் கேள்வி விசித்திரமாக இருந்தது. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 3
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week